|
விவசாயி வெள்ளைச்சாமி, மகன் முத்துவுடன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சினார். அங்கு இரண்டடி நீளமான பாம்பைக் கண்ட முத்து அலறினான். அதை தடியால் அடித்துக் கொன்றார் வெள்ளைச்சாமி. ஆனால் மனைவியிடம், “நான் மிக நீளமான பாம்பைக் கொன்றேன்” என்றார். அது கேட்டு வியந்த மனைவி பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், “என் கணவர் ஐந்தடி நீள பாம்பை தனியாளாகவே அடித்துக் கொன்றார் தெரியுமா...?” என்று பெருமையடித்தாள். பக்கத்து வீட்டுப் பெண் தன் தோழியிடம் சொல்ல, அவள் தன் உறவினரிடம் சொல்ல பாம்பின் நீளம் பத்தடியாக வளர்ந்தது. அதுவே சிலநாள் கழித்து விவசாயியின் காதுக்கு வந்தது. ஊர்ச்சாவடியில் ஒருநாள் விவசாயி இருந்த போது, ‘பத்தடி பாம்பைக் கொன்றவர் இவர்’ என்றார் ஒருவர். மற்றவர்கள், “அப்படியா வெள்ளைச்சாமி...” என்ற வியந்ததும் விவசாயியும் தலையாட்டினார். உண்மையை அறிய விரும்பிய பெரியவர் ஒருவர் விவசாயியின் மகனான முத்துவை அழைத்தார். “உன் அப்பா பத்தடி பாம்பைக் கொன்றாராமே...?” சிறுவன் சட்டென்று “செத்த பாம்பு வளருமா ஐயா...?” பெரியவரும் “என்னப்பா சொல்கிறாய் புரியவில்லையே...” “என் அப்பா கொன்றது வெறும் இரண்டடி மட்டும் தானே” என்றான். அதைக் கேட்ட வெள்ளைச்சாமிக்கு வெட்கம் உண்டானது. பெரியவர் சிறுவனின் தோளில் தட்டியபடி, “இவன் போல உண்மையைச் சொல்வது நல்லது. போலி கவுரவத்திற்காக பொய்யை தற்காலிகமாக வளர்க்கலாம். ஆனால் உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும்” என்றார்.
|
|
|
|