|
சமையல் அறையில் வறுக்கவும், பொறிக்கவும் ’இலுப்பச்சட்டி அல்லது வாணலி’ இருப்பதை பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் அது அடிபிடித்துப் போய் கறுப்பாக இருக்கும். கடையில் அதை வாங்கும் போது இப்படியா இருந்தது? இல்லையே! வாணலியில் சமையல் முடிந்ததும் சரியாக சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறோம். அலட்சியத்தால் எண்ணெய் பிசுக்கு அதில் படிந்து விடுகிறது. இதுபோல அலட்சியத்தால் நம் மனதும் பிசுக்காகி விடுகிறது. எப்படி என்பதை அறிய மிதிலை நாட்டுக்கு போகலாம்.
அரண்மனையில் ஜனக மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். திரிலோக சஞ்சாரியான நாரதர் சபைக்கு வந்தார். ஜனகர் வாருங்கள்!” என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நாரதரும் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக,“ஜனகரே! பாக்கியசாலியான நீ, விரும்பியதை தெய்வம் அருளட்டும்!” என்று ஆசியளித்தார். ஜனகர் சிரித்தபடி,“என்ன நாரதரே! என்னைப் பற்றி தெரியாதா உங்களுக்கு? நான் பிரம்ம தத்துவம் கற்றவன். அனைத்தும் கடவுள் என்பதை அறிந்தவன். அப்படி இருக்க நீங்கள் என்னை வாழ்த்தலாமா... இது எப்படி இருக்கிறது தெரியுமா... பிரம்மமே பிரம்மத்தை வாழ்த்துவது போல இருக்கிறது. வரம் கொடுப்பவனும் நான்; பெறுபவனும் நான். அனைத்துமான கடவுளாகவே நான் இருக்கிறேன். பிரம்ம மயமான எனக்கு நீங்கள் ஆசி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று வறட்டு வேதாந்தம் பேசினார். நாரதர் பதிலளிக்காமல் கவுண்டின்ய முனிவர் ஆசிரமம் நோக்கி சென்றார். அங்கு விநாயகரை வழிபட்டு, “ஆனைமுகப் பெருமானே! கடவுள் பற்றிய அனுபவம் இல்லாமல், ஜனகர் அனைத்தும் அறிந்தவர் போல அகங்காரமாகப் பேசுகிறார். கர்வத்தை நீயே போக்க வேண்டும்”என வேண்டினார்.
அந்த நேரத்தில், ஜனகரின் அரண்மனை வாசலில் வெண்குஷ்ட நோயாளி ஒருவர், “ஐயா...பசிக்கிறது. ஏதாவது கொடுங்கள்” என்று கதறினார். துருப்பிடித்த தகரத்தைக் கிழிப்பது போல இருந்தது அவர் குரல்.அவருக்கு உணவு வழங்க ஆணையிட்டார் ஜனகர். இலையில் முன்னால் உட்கார்ந்தார் அவர். விதவிதமாக உணவு பரிமாறப்பட்டது. கை வைத்ததும், அவ்வளவும் ஒருநொடிக்குள் அவரின் வாய்க்குள் சென்றன. சமைத்த மொத்த உணவும் முடிந்தது. பசியோடு வந்தவரை, பண்டங்கள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர் பணியாளர்கள். அனைத்தையும் தின்று தீர்த்தார். ஜனகருக்குத் தகவல் போகவே, மன்னர் வந்தார். “சற்று பொறுங்கள்! தங்களின் பசி தீர, வேறு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்றார். வந்தவர் சிரித்தபடி,“ ஜனகா...என்ன பேசுகிறாய் நீ? நானே பிரம்மம்; நானே பிரம்மம்! என்று கொக்கரித்தாயே! பிரம்மத்தைப் பற்றி தெரியுமா உனக்கு? உலகில் எந்த உயிரைப் படைத்தாலும், முதலில் அதற்கு வேண்டிய உணவைப் படைத்த பின் தானே உயிரைப் படைக்கும். கன்றுக்குட்டி பிறக்கும் முன்னே, அதற்குத் தேவையான பால், தாய்ப்பசுவிடம் இருக்குமே. பிரம்மத்தினுடைய செயல் அது தானே. நானே பிரம்மம் என்று ஆணவமாகப் பேசினாயே! இப்போதோ இந்த ஒருவனின் பசியைக் கூட உன்னால் போக்க முடியவில்லையே” என்றார்.
ஜனகரின் மனம் சிந்தனையில் ஆழத் தொடங்கியது. வந்தவர் தொடர்ந்தார். “ ஜனகா... நீ தீர்க்க முடியாத பசியை, நான் தீர்த்துக் கொள்கிறேன்” என சொல்லி விட்டு வெளியேறினார். வருத்தமுடன் ஜனகர், “ உண்மையை உணராமல், மமதையில் வீண் வேதாந்தம் பேசி விட்டேன். இவர் யாரென்று தெரியவில்லையே!” என்றார். மன்னரை வருத்தத்தில் ஆழ்த்திய அவர், திரிசிரன் என்னும் ஏழையின் குடிசைக்குள் நுழைந்தார். அந்த நேரம், விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் திரிசிரன். அவர் மனைவி விரோசனை, கணவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். தங்களின் குடிசை தேடி வந்தவரை வரவேற்றனர் அத்தம்பதியர். வந்தவர் வாய் திறந்தார்.“ வெண்குஷ்டம் பிடித்த எனக்குப் பசி தாங்கவில்லை. மன்னர் ஜனகரின் அரண்மனைக்குப் போனேன். அங்கு கொடுத்ததைச் சாப்பிட்ட பின், பசி அதிகமானதே தவிர, தீர்ந்த பாடில்லை. அதனால் இங்கு வந்தேன்” என்றார். “சுவாமி! என்ன சொல்கிறீர்கள்? குளத்து நீர் முழுவதும் குடித்தும் தீராத தாகம், கையளவு தண்ணீர் குடித்தா, தீரப் போகிறது? அரண்மனை எங்கே? சிறு மழைக்கும் தாங்காத இக்குடிசை எங்கே? நாங்கள் பிட்சை எடுத்தே உண்பவர்கள். இன்று எங்களுக்கு யாரும் பிட்சை இடவில்லை. விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல் மட்டுமே இருக்கிறது. எனக்கும், என் கணவருக்கும் அருகம்புல் இட்ட தீர்த்தம் தான் ஆகாரம்” என்றாள் விரோசனை. வந்தவர், “அம்மா! அன்புடன் நீங்கள் எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியே. வறுமையில் வாடினாலும், உங்களிடம் அன்புக்கு குறைவில்லை. அன்புடன் நீங்கள் தரும் அருகம்புல் தீர்த்தத்தை ஏற்று மகிழ்வேன். வெண்குஷ்டம் தீர்க்க அருகம்புல் தீர்த்தமே சிறந்த மருந்து” என்று சொல்லி, விரோசனையின் கையிலிருந்த அருகம்புல்லை வாங்கி மென்றார்.
என்ன அதிசயம்! குஷ்டரோகியை அங்கு காணவில்லை. பிறைநிலா அணிந்த அழகிய சடைமுடி, மழு ஆயுதம், தாமரை, ஸ்படிக மாலை, ஒற்றைத்தந்தம் ஏந்திய நான்கு கைகள், பூணூல் தவழும் மார்பு, கிரீடம், காதில் குண்டலங்கள் ஆகியவற்றுடன் ஒளி வெள்ளத்தில் ஓங்கார வடிவினரான விநாயகர் காட்சியளித்தார். திரிசிரனின் குடிசை வளம் நிறைந்த மாளிகையாக மாறியது. திரிசிரத் தம்பதியர் சுவாமியை வணங்கித் துதித்தனர். ஊரெங்கும் தகவல் பரவியது. ஓடோடி வந்த ஜனகர் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். “மன்னா! ஜனகா! உன்னிடம் உண்மையான ஞானம் இல்லை. யாக்ஞவல்கிய முனிவரிடம் சென்று உபதேசம் பெறுவாயாக” என்று சொல்லி விநாயகர் மறைந்தார். பிரம்மம் பற்றி படித்த ஜனகர், தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டதால் தான் பிரச்னை முளைத்தது. திரிசிரன் என்பதற்கு ஆசை, கோபம், மயக்கம் என்ற மூன்றும் இல்லாதவர் என்பது பொருள். விரோசனை என்பதற்கு ‘யாரிடமும் பொறாமை கொள்ளாதவள்’ என்பது பொருள். இப்படிப்பட்டவர்களைத் தேடி வந்து, தெய்வம் அருள்புரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? வெண்குஷ்டத்திற்கு அருகம்புல் சிறந்த மருந்து என்பதையும் விளக்கும் கதை இது. அலைபேசி: 97109 09069 |
|
|
|