|
பாமயன் முட்டாள் என்றால், அவன் தம்பி மெய்யப்பன் முட்டாளுக்கெல்லாம் முட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நாள் - பாமயனுக்கு திருமணம் முடிந்தது; கீர்த்தி அவன் மனைவியானாள்; பாமயன் நல்ல உயரம். கூலி வேலை செய்தாவது, மகளைக் காப்பாற்றி விடுவான் என்று எண்ணி, பெற்றோர் பெண்ணைக் கொடுத்தனர். பாமயன் முட்டாள் தானே தவிர, சோறு தண்ணிக்கு அவன் வீட்டில் குறைச்சல் இல்லை. ’முட்டாளுக்கு, தன்னைத் திருமணம் செய்து கொடுத்து விட்டனரே’ என்று, முதலில் குமைந்தாள் கீர்த்தி. ஆனால், சில நாட்களிலேயே கணவனின் முட்டாள் தனத்தையும் ரசிக்கத் துவங்கினாள். தம்பி மெய்யப்பனும், அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்தான்.
அண்ணனும், தம்பியும் செய்யும் முட்டாள்தனத்தை பார்த்து, குலுங்கி குலுங்கி சிரிப்பாள். ’முட்டாள்களின் திலகம்’ என்று யாருக்கு பெயர் கொடுப்பது என்று குழப்பமாக இருந்தது. இருவரும் அந்த அளவிற்கு போட்டா போட்டி போடுவர். அன்றும் அப்படித்தான். பாமயன் வேட்டைக்குச் சென்றிருந்தான். உயிருடன் உடும்பு ஒன்றை பிடித்து, மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பினான்.
”இதை பத்திரமா கூண்டுக்குள் அடைத்து வை; நல்ல விலை போகும்...” என்று கூறி, வெளியில் சென்று விட்டான். சிறிது நேரத்தில், தம்பி வந்தான். ”அண்ணி... அந்த உடும்பிலிருந்து ஒரு இறகை பிய்த்துக் கொடு; காது குடையணும்...” என்றான். ”உடும்பிற்கு ஏது இறகு...” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள், கீர்த்தி. ”அப்படியா... உடும்பிற்கு இறகு இல்லையா... ஏதோ ஞாபகத்தில கேட்டுட்டேன்...” என்று, மழுப்பியபடி சென்றான். வீட்டிற்குத் திரும்பிய கணவனிடம், ”உங்க தம்பி உடும்பிலிருந்து இறகைப் பிய்த்து கொடுன்னு கேட்கிறாரு...” என்று அவன் முட்டாள் தனத்தை சொல்லி சிரித்தாள். யோசித்தபடி நின்றான் பாமயன். ”என்ன யோசனை...” என்றாள் கீர்த்தி. ”ஒன்றுமில்ல... என் தம்பி உடும்பை, ஆமைன்னு நெனச்சிட்டான் போல... அதனாலதான் காது குடைய இறகு கேட்டிருக்கான்...” என்றானே பார்க்கலாம்... ”அட ராமா...” என்று தலையில் அடித்தபடி, விழுந்து விழுந்து சிரித்தாள் கீர்த்தி. இதில் யார் சிறந்த முட்டான்னு கீர்த்தியால் கண்டு பிடிக்க முடியல... நீங்களே தேர்வு செய்துக்கோங்க குட்டீஸ்! முட்டாளாக இருப்பது ரொம்ப கேவலம்... யாருமே மதிக்க மாட்டாங்க...புத்திசாலியா இருங்க... நல்ல புத்தகங்களை படிச்சி அறிவை வளர்த்துக்கோங்க ... சரியா... |
|
|
|