ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து அழுதது. மனம் இரங்கிய முனிவர் அதன் மீது கமண்டல தீர்த்தம் தெளித்து ஓநாயாக்கினார். பலசாலியான அது, தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டியது. ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனே, ஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றினார். சிறுத்தையை பார்த்த சிறுத்தை ‘இது நமது இனமாயிற்றே” என விட்டுச் சென்றது.
சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது. சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கினார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார். புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்கமாக மாறிய பின், அதன் மனதில் விபரீத எண்ணம் எழுந்தது. இனி கடைசிவரை காட்டுராஜா சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளை, இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தது. முனிவரைக் கொன்று விடும் முடிவுக்கு வந்தது. முனிவருக்கு தெரியாமல் மறைந்து நின்று சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது. அதை புரிந்து கொண்ட முனிவர் தீர்த்தத்தை தெளித்து ‘சீ...நாயே!’ என விரட்ட, அது மீண்டும் சொறி நாயாக மாறியது. ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற கவலையுடன் அங்கிருந்து ஓடியது நாய். பிறருக்கு உதவுவது அவசியம். ஆனாலும் ஒருவரின் தகுதியறிந்து அதைச் செய்ய வேண்டும்.