|
சிறுவன் நரேன் விடுமுறை நாளில் நண்பர்களுடன் பொழுதுபோக்குவது வழக்கம். ஒருநாள் அவர்கள் மிருக காட்சி சாலையில் பொழுதைக் கழித்து விட்டு மாலை நேரம் கங்கையாற்றில் படகில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களில் ஒருவன் வயிற்று வலியால் அவதிப்பட்டான். அவன் படகிலேயே வாந்தியும் எடுக்க நேர்ந்தது. இதைக் கண்ட படகோட்டி கோபத்துடன்,“நீயே படகைச் சுத்தம் செய்; இல்லாவிட்டால் இரு மடங்கு கட்டணம் தர வேண்டும்” என்றான். சிறுவர்களும் அரைகுறை மனதுடன் சம்மதித்தனர். படகு கரையை வந்தடைந்ததும் படகோட்டிக்கு இன்னும் ஆசை எழுந்தது. “படகைச் சுத்தம் செய்ய மேலும் அதிகப் பணம் கொடுத்தாக வேண்டும் இல்லாவிட்டால் யாரையும் இறங்க விடமாட்டேன்” என்று மிரட்டினான். ஆனால் நரேன் அஞ்சவில்லை. படகோட்டிக்குத் தெரியாமல் கீழே தாவினான். சற்று தூரத்தில் நின்றிருந்த இரு ஆங்கிலேய சிப்பாய்களை அழைத்தான். அரைகுறை ஆங்கிலத்தில் அவர்களுக்கு விஷயத்தைப் புரிய வைத்தான். அவர்களும் சிறுவன் நரேனுடன் படகோட்டியிடம் வந்தனர். சிறுவர்களை அதிகப்பணம் கேட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று படகோட்டியை எச்சரித்தனர் சிப்பாய்கள். பயந்த படகோட்டி ஏதும் பேசாமல் நியாயமான கூலியை வாங்கிக் கொண்டு விடுவித்தான். உடல்நலம் குன்றிய சிறுவனும், நண்பர்கள் நிம்மதியாக படகில் இருந்து இறங்கினர். புத்திசாலியான சிறுவன் நரேன் பின்னாளில் வீரத்துறவி விவேகானந்தராக மாறினார். |
|
|
|