|
ஒருநாள் தன்னை தரிசித்துக் கொண்டிருந்த பக்தர்களிடையே கடவுள் தோன்றி, “யாருக்கு என்ன வரம் வேண்டுமோ... கேளுங்கள், தருகிறேன்!” என்றார். அங்கிருந்த பத்து பக்தர்களில் ஒன்பதுபேர் வற்றாத செல்வம், பெரிய பதவி, புகழ், பேரழகு என தங்களுக்கு வேண்டியவற்றைக்கேட்க, கடவுளும் அவற்றை வாரி வழங்கினார். பத்தாவது நபர் கடவுளிடம் மன நிம்மதியையும், போதும் என்ற மன நிறைவையும் வரமாகக் கேட்டார். அதைக் கேட்டதும் மற்ற ஒன்பது பேருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. “நாங்கள் கேட்டதும் அதைத்தானே! விரும்பியது கிடைத்தால் மனநிறைவு தானாய் வந்துவிடுமே!” என்றனர். கடவுள் அந்த ஒன்பது பேரிடமும், “நீங்கள் ஆசைப்பட்டதை வரமளித்துவிட்டேன். நீங்கள் செல்லலாம்...” எனக் கூறிவிட்டு, பத்தாவது மனிதரிடம், “நீ சற்று காத்திரு, உன்னிடம் பேச வேண்டும். சிறிது நேரம் கழித்து வருகிறேன்.” என்றார். இப்போது அந்த ஒன்பது பேரும் அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தயங்கினர். ‘கடவுள் அவரிடம் என்ன பேசப் போகிறார்? என்ன தரப்போகிறார்?’ என்று அறியாவிடில், அவர்கள் தலை வெடித்துவிடும் போல் இருந்தது.
தாம் ஆசைப்பட்டது கிடைத்த பின்னும் எதுவும் கிடைக்காத அந்த பத்தாவது மனிதர் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர். அவரைக் காணவே வெறுப்பாக இருந்தது. தம் கையிலிருந்த வரத்தின் ஆனந்தத்தை ருசிக்க மறந்து, மன அமைதி இழந்தனர். பத்தாவது மனிதருக்கோ கடவுள் தன்னிடம் பேசப்போகிறார் என்பதே மிகுந்த சந்தோஷத்தையும் எல்லாம் கிடைத்துவிட்டது போன்ற மனநிறைவையும் ஏற்படுத்தியது. நம் எண்ணங்களே நம்மை வாழவைக்கும் நாம் ‘பத்தாவது மனிதனா?’ ‘பத்தாது என்கிற மனிதனா?’ என்று நாம்தான் முடிவு செய்யவேண்டும்! |
|
|
|