|
பேராசை பிடித்த மன்னர் ஒருவர் நகர்வலம் சென்றார். எதிரில் வந்த பிச்சைக்காரன் ஒருவன், “பிச்சை கொடுங்க...” என்றான். முகம் சுளித்த மன்னர், “என் அமைதியைக் கெடுக்காதே...போ...” என கத்தினார். அவன் சத்தமாகச் சிரித்து “அரசே... கெடக்கூடிய நிலையில் இருப்பது அமைதி அல்ல!” மன்னரின் முகம் வெளிறியது. இவன் வெறும் பிச்சைக்காரன் அல்ல, ஞானி என்பது புரிந்தது. “தங்களின் விருப்பம் எதுவானாலும் தருகிறேன்” என்றார் மன்னர்.மறுபடியும் சிரித்தார் பிச்சைக்கார ஞானி. மன்னருக்கு சற்று கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டார். “எதற்காக சிரிக்கிறீர்கள்....?” “என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்றாயே... அதற்காகத் தான்”மன்னர் நகர்வலத்தை கைவிட்டு அரண்மனைக்கு ஞானியுடன் வந்தார். “என்ன வேண்டும் கேளுங்கள்...” என்றார். ஒரு பிச்சை பாத்திரத்தை காட்டி,“இது நிறைய பொற்காசுகள் வேண்டும்” என்றார். “இவ்வளவு தானே...’ என்று மன்னர் கை தட்டினார். தாம்பாளம் நிறைய பொற்காசுகள் வந்தன. அதை அள்ளி பிச்சைப் பாத்திரத்தில் இட்டார் மன்னர். அது பாத்திரமா இல்லை புதைகுழியா என மிரளும் அளவிற்கு, பொற்காசுகளை அது விழுங்கியது. காஜானாவில் இனி பொற்காசுகளே இல்லை என்ற நிலையில், மன்னர் பொத்தென்று ஞானி காலில் விழுந்தார். வாய் விட்டுச் சிரித்த ஞானி, “மன்னா... இதை யாராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால் இது பாத்திரமே அல்ல. பேராசைக்காரனாக வாழ்ந்து இறந்த ஒரு மனிதனின் மண்டை ஓடு”
|
|
|
|