|
அமைதியாக அமர்ந்திருந்த அந்த மகான் முன்பாக வந்தான் ஒருவன். அவன் முகத்தில் கோபமும், அவமானத்தின் அறிகுறிகளும் நிரம்பியிருந்தன. “என் நண்பன், பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசி என்னை அவமானப்படுத்தி விட்டான். பதிலுக்கு அவனை பேசவும் இல்லை. போய்த் தொலைகிறான் என அமைதியாகவும் இருக்க முடியவில்லை. என் கவலை தீர வழி சொல்லுங்கள் சுவாமி” புன்னகைத்தபடி, “கவலைப்பட என்னப்பா இருக்கு?” என்றார். “என்ன சுவாமி இப்படி சொல்கிறீர்கள்...? ஒருவர் திட்டினால் வருத்தம் ஏற்படாதா?” “ஏன் வருத்தம் ஏற்படணும்...?” “என்ன சுவாமி குழப்புகிறீர்கள்...” “திட்டுவது என்றால் என்ன? வெறும் ஒலி தானே... நீ ஏன் அதற்கு மதிப்பு கொடுத்து நேரத்தை வீணாக்குகிறாய்...?” ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தான். மகான்,“நீ பெற்ற அவமானம் என்பது வெறும் ஒலி தான். உடல் மீது ஆசை இருக்கும் வரையில் இந்த ஒலி உன்னை சிரமப் படுத்திக்கொண்டு தானிருக்கும். ‘நான் தேகம் இல்லை; ஆத்மா’ என்கிற நினைவு எழுந்தால் எந்த அவமானமும் பாதிக்காது. ஞானம் பெற்ற ஒருவன், தனக்கு கிடைக்கும் பாராட்டுக்களை விஷமாக நினைத்து பயப்பட வேண்டும்; அவமானத்தை அமிர்தமாக நினைத்து ஏற்க வேண்டும். அப்போது தான் உன் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்” |
|
|
|