|
தானம் கொடுப்பது விசேஷம். அதே சமயம், அடுத்தவர்களிடம் போய், கை நீட்டக் கூடாது. தானம் பெற்றதால், விளைந்த நிகழ்வை பார்க்கலாம்... ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. குணவான்கள் பலருக்கும் பலவிதமான தானங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர். பட்டாபிஷேக வைபவத்தோடு, இலங்கை யுத்தத்தில் ஸ்ரீராமர் இழைத்த துன்பத்தின் பீடைக்கு பரிகாரம் செய்ய, தானங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில், எள் தானமும் ஒன்று. விபரம் அறிந்த யாரும் இந்த எள் தானத்தை வாங்க முன் வர மாட்டார்கள். அதேசமயம், நல்ல சத்பாத்திரமாகப் பார்த்துத் தானம் அளித்தால், அளிப்பவருக்கு மிகுந்த பலன் உண்டாகும். அதன் காரணமாக, தகுதி உள்ளவர்களை வரவழைப்பதற்காக,’எள்ளைக் கை ஏந்தி வாங்க முன் வருபவருக்கு, ஒரு தங்கக் கட்டியும் வழங்கப்படும்...’ என, ஓர் அறிவிப்பை வெளியிட்டார், வசிஷ்டர்.
விபரம் அறிந்தவர்கள் மற்றும் பரம ஏழைகள் கூட, அப்போதும், எள்ளுடன் கூடிய தங்கத்தைப் பெற முன் வரவில்லை. அயோத்தி நகர் எல்லையில் வசித்து வந்தவர் சிங்கார முனிவர். வறுமையின் பிடியில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தாலும், அதை லட்சியம் செய்யாமல், தவம் செய்வதிலும், தியானம் செய்வதிலும் காலத்தைக் கடத்தி வந்தார். ஆனால், தண்டோரா மூலம் அந்த அறிவிப்பைக் கேட்டதும், சிங்கார முனிவரின் மனைவிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவள் வேகமாக ஓடி வந்து கணவரிடம், ’அந்த தானம் வாங்க, நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள்; நம் வறுமை நீங்கும்...’ என்றாள். முனிவரோ மறுத்தார்... ’என்ன பேசுகிறாய் நீ? எள்ளுடன் கூடிய அந்தத் தானத்தை வாங்கினால், என் தவப்பயன் எல்லாம் வினாடி நேரத்தில் என்னை விட்டு போய் விடும்...’ என்றார். அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தாள் அவர் மனைவி, ’எப்படிப் போகும்... தானம் வழங்கும் ராமர் யார்... மானிட வடிவம் கொண்ட பரம்பொருள் அல்லவா! நீங்கள் தானம் வாங்கியதும், நிமிர்ந்து ராமரின் திருமுகத்தைப் பார்த்து விடுங்கள்; அந்த திவ்ய தரிசனம், தானம் பெற்ற பாவத்தைப் போக்கி விடும்...’ என்றாள்.
அதில் இருந்த உண்மையை உணர்ந்த சிங்கார முனிவர், தான் தானம் வாங்கத் தயாராய் இருப்பதாக அரண்மனைக்கு தகவல் அனுப்பினார். வசிஷ்டரும் விவரம் அறிந்தார். சிங்காரமுனியின் எண்ணமும் அவருக்குப் புரிந்தது. சிங்கார முனிவர் தானம் வாங்கிய உடனே, அவரால் ராமரைப் பார்க்க முடியாதபடி, ராமருக்கும், சிங்கார முனிவருக்கும் இடையில் ஒரு திரை விழ ஏற்பாடு செய்து விட்டார். சிங்கார முனிவரும் வந்தார்... எள்ளுடன் கூடிய தங்க தானத்தைப் பெற்று அவர் நிமிர்வதற்குள், திரை விழுந்தது. சிங்கார முனிவரின் தவப்பயன் முற்றிலும் போய்விட்டது. தங்கத்தை எதிர்பார்த்து சந்தோஷத்துடன் இருந்த அவர் மனைவி, நடந்தவற்றை அறிந்தாள். முதலில் வருந்திய மனைவி, உடனே, வேறொரு வழி சொன்னாள். ’ஸ்வாமி... நடந்தது நடந்து விட்டது; விடுங்கள்! அடுத்தது என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். பட்டாபிஷேகத்தின் கடைசி நாளன்று, ராமர், தேரில் ஏறி ஊர்வலம் வருவார். அந்த ஊர்வலம், நம் குடிசை வழியாகத் தான் செல்லும். அதோ, அந்தக் கோடியில் உள்ள மரத்தடியில் நில்லுங்கள்! ராமர் வந்ததும், நெருங்கிப் போய், அவரைத் தரிசித்து விடுங்கள்...’ என்றாள். ஸ்ரீராமர் ஊர்வலமாக வர, சிங்கார முனிவரும் தரிசித்தார். அவரைப் பார்த்த ஸ்ரீராமர், ’முனிவரே... எள் தானம் வாங்கியதால் ஏற்பட்ட துயர் அனைத்தும் இப்போது நீங்கி விட்டது. நீர் நலம் பெறுவீர்...’ என்றார். சிங்கார முனிவர் மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதன்பின், தானமாக வந்த தங்கத்தை அவர் தொடக்கூட இல்லை.
|
|
|
|