|
செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் புத்தர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்தார். அன்றாடங்காய்ச்சியான அவருக்கு இரண்டு நாளாக வேலை கிடைக்கவில்லை. பசியோடு இருந்த அவர், அருகில் இருந்த குளத்திற்குச் சென்று நீரைக் குடித்தார். அங்கு பூத்திருந்த தாமரை மலர் அவரைப் பார்த்துச் சிரித்தது. அந்த மலர் சூரிய ஒளியில் தகதகவென ஜொலித்தது. அதை யாருக்காவது விற்றால் பணம் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியதால், குளத்திற்குள் இறங்கி பறித்தார். குளக்கரையைக் கடந்து மேலே வந்த போது, வியாபாரி ஒருவர் எதிர்ப்பட்டார். மலரின் அழகில் ஈடுபட்ட அவர் தொழிலாளியிடம், மலருக்கு விலையாக சில நாணயத்தை அளிப்பதாக கூறினார். ஆனால், தொழிலாளி மறுத்து விட்டார்.
சிறிது நேரத்தில் பணக்காரர் ஒருவர் வந்தார். அவரும் மலரைக் கண்டு ரசிப்பது தெரிந்தது. தொழிலாளியின் அருகில் வந்த அவர், “இந்த மலர் விலைக்கு கொடுப்பது தானே! எனக்கு கொடு” என்று கேட்டார். ஆனால், தொழிலாளி அப்போதும் சம்மதிக்கவில்லை. கூடுதல் விலைக்கு விற்கலாம் என தொழிலாளி நினைத்ததே இதற்கு காரணம். சிறிது தூரத்தில் அந்த ஊரிலுள்ள பண்ணையார் வந்து கொண்டிருந்தார். அவர்,“இந்த மலரை எனக்கு விலைக்கு தருவாயா? ஈடாக ஒரு பொன் நாணயத்தைப் பெற்றுக் கொள்”என்றார். அதைக் கேட்ட வியந்த தொழிலாளி, “இந்த தாமரை மலருக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? பொன் நாணயம் தருவதாக சொல்கிறீர்களே?”என்று கேட்டார். “உனக்கு விஷயம் தெரியாது போலிருக்கிறதே...புத்தர் பெருமான் நம் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு இந்த மலரைப் பரிசளித் தால் மனம் மகிழ்வார் அல்லவா?” என்றார் பண்ணையார். இதைக் கேட்டதும் தொழிலாளிக்கு பசிக்கு விருந்து கிடைத்தது போல இருந்தது.
“ஐயா! என்னை மன்னியுங்கள். இந்த மலரை விற்க விரும்பவில்லை. இப்போதே புத்தரை தரிசிக்க செல்கிறேன்” என்று சொல்லி கிளம்பினார். ஓட்டமும் நடையுமாக புத்தர் இருக்குமிடத்தை அடைந்தார். புத்தரைக் கண்டதும் தொழிலாளிக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அன்புடன் தாமரை மலரை புத்தரின் திருவடியில் வைத்து வணங்கினார். அப்போது புத்தர், “ இந்த அழகிய தாமரையை விற்றால் கொஞ்சம் காசாவது கிடைத்திருக்குமே! என்னிடம் போய்க் கொடுக்கிறாயே”என்றார். கண் கலங்கிய தொழிலாளி, “சுவாமி... சாதாரண பூவாக இருந்த போது விற்கவே விரும்பினேன். ஆனால், நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் அது பூஜைக்குரிய மலராக உயர்ந்தது. தங்களின் பாதத்தில் அதை காணிக்கையாக்குவதை விட வேறு பாக்கியம் என்ன வேண்டும்?”என்றார். இதைக் கேட்ட புத்தர் தொழிலாளியை அணைத்துக் கொண்டார். “சகோதரா! நீ ஏழையானாலும் அன்பால் என்னை வென்று விட்டாய். அன்பு மனம் கொண்ட நீயே பாக்கியசாலி” என்றார்.
|
|
|
|