|
இறந்தவரை உயிர்ப்பிக்கும் ’ரகசிய மந்திரம்’ கற்க வேண்டும் என்று சீடன் ஒருவனுக்கு ஆசை எழுந்தது. விஷயம் அறிந்த குரு, “அது ஆபத்தான விஷயம்... அவசரம் வேண்டாம்” என எச்சரித்தார். “இல்லை குருவே. எந்த சூழலையும் சமாளிக்க என்னால் முடியும் ” என்றான் சீடன். “அறிவால் புரிந்து கொள்; இல்லாவிட்டால் அனுபவம் காட்டும்” என்றார் குரு. அவனோ, “என்ன சொல்கிறீர்கள் குருவே...” என ஏற்க மறுத்தான். மந்திரத்தை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் வரும் வரை அமைதி காப்பது நல்லது” என்றார் குரு. இருந்தாலும் பிடிவாதம் செய்யவே, வழியின்றி அரைமனதுடன் குரு உபதேசித்தார். “ இந்த மந்திரம் சொல்லும் போது எச்சரிக்கை தேவை.
இல்லாவிட்டால் விளைவு விபரீதமாகும்” என்றார் குரு மந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் தலையை மட்டும் ஆட்டினான் சீடன். ’எல்லாம் நன்மையாகட்டும்’ என்றார் குரு. நாட்கள் சில கடந்தன. ஒருநாள் காட்டுவழியில் எலும்புகள் கிடப்பதை கண்ட அவன் இது தான், சந்தர்ப்பம் என எண்ணி மந்திரத்தை உச்சரிக்க அதிர்ச்சி காத்திருந்தது. எலும்புகள் இணைந்து ஓநாயாக உருவெடுத்தது. நடுங்கிய சீடன் தலைதெறிக்க ஓடினான். ஒருவழியாக ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான். குருநாதர் சொன்னது உண்மை என்பது அப்போது புரிந்தது. |
|
|
|