|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » உணவகத்தில் நடந்த அதிசயம் |
|
பக்தி கதைகள்
|
|
அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்று படிக்கும் காலத்திலேயே புகழ்வார்கள். அந்தக் காலத்தில் பொறியியல் படிப்பு முடித்துப் பெரிய தொழிற்சாலையில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தான். அதன்பிறகு அவன் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்தது. இன்று நாற்பத்தி ஐந்து வயதாவதற்குள் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகியிருந்தான். ’பெரிய போஸ்ட்டுன்னு பேரு. மனசுல நிம்மதியே இல்லடா. மாசா மாசம் வெளிநாடு போறேன். கோடிக்கணக்குல சம்பளம். மனசுல அமைதி இல்ல. பையன் சரியாப் படிக்க மாட்டேங்கறான். ப்ளஸ் டூல பெயிலாயிட்டான். சினிமாத்துறையில போகணும்னு துடிச்சிக்கிட்டு இருக்கான். பொண்டாட்டிக்கு மார்பகத்துல கேன்சர். பொண்ணு கல்யாணம் தட்டிக்கிட்டே போயிக்கிட்டு இருக்கு. கம்பெனில பெரிய நஷ்டம். எல்லாரும் என்னைப் போட்டுப் பிடுங்கிக்கிட்டு இருக்காங்க.. வாரம் தவறாமக் கோவிலுக்குப் போறேன். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கேன். தொழில்ல நேர்மையா இருக்கேன். அந்தப் பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படிக் கல்நெஞ்சுக்காரியா இருக்கா? இதெல்லாம் செய்யாதவன் பிரச்னை இல்லாம சந்தோஷமா இருக்கான். எனக்கு மட்டும் ஏண்டா இவ்வளவு பிரச்னை?”எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிரச்னையை அவளிடம் விட்டுவிட்டேன்.
’ஊர்க்கோடியில் இருக்கிற உணவகத்திற்கு உன் நண்பனை மதிய உணவுக்கு அழைத்துச் செல். அங்கே உனக்கு ஒரு அதிசயம் காட்டுகிறேன்.’ மதுரை நகரின் தென்கோடியில் உள்ள அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு உணவகத்திற்கு நண்பனை அழைத்துச் சென்றேன். சாப்பாட்டு டோக்கன் வாங்கும்போது கல்லாவில் இருந்தவர் கண்டிப்பாகச் சொன்னார். ’எதையும் வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால் மூன்று மடங்கு அதிகம் தர வேண்டும்.’ தலையாட்டினேன்.. அவள் ஆணையாயிற்றே.! அதிசயத்தைக் காண வேண்டுமே! அற்புதமாக உணவு பரிமாறினார்கள். இலையில் பொரியல் தீர்ந்த அடுத்த நொடி பொரியல் வந்தது. ஒரு அப்பளத்தைத் தின்று முடித்தவுடன் அடுத்தது வந்தது. பண்டங்கள் சுவையாகவே இருந்தன. பாகற்காய் கூட்டு மட்டும் சாப்பிடக் கஷ்டமாக இருந்தது. என்றாலும் வீணாக்காமல் சாப்பிட்டோம். சாம்பார் சாதம் சாப்பிட்டு முடித்தவுடன் சாதம் போட்டார்கள். உடனே காரக்குழம்பு. அதைக் கொண்டா இதைக் கொண்டா என்று கேட்கும் வாய்ப்பே தரப்படவில்லை. இத்தனைக்கும் உணவு பரிமாற இருவர் மட்டுமே இருந்தனர். பாசிப்பருப்புப் பாயாசம் அமர்க்களமாக இருந்தது. உணவு சாப்பிட்டுக்கொண்டே கண்களை அங்குமிங்கும் ஓட விட்டுக்கொண்டிருந்தேன். பச்சைப்புடவைக்காரி இந்த உணவகத்தில் அப்படி என்ன அதிசயத்தைக் காட்டப்போகிறாள்? கடைசிவரை எந்த அதிசயமும் நிகழவில்லை..
அன்று மாலை கனத்த மனதுடன் கோயிலுக்குக் கிளம்பினேன். பச்சைப் புடவைக்காரி ஏன் வாக்குத் தவறவேண்டும் என்று நினைத்தபடி வைகைப்பாலத்தின் மேல் நடந்து கொண்டிருந்தேன். ’அதிசயம் என்பது நிகழ்வில் இல்லை. அதை நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. பார்வை சரியாக இருந்தால் சூரியோ தயம் கூட அதிசயம் தான்’ திடுக்கிட்டுத் திரும்பினேன். கையில் குழந்தையுடன் ஒரு பெண் கூடவே நடந்து வந்தாள். பச்சைப்புடவைக்காரியே தான். “அந்த உணவகத்தில் எப்படி உணவு பரிமாறினார்கள் கவனித்தாயா?” “கவனித்தேன் தாயே. நாங்கள் எதையும் கேட்கவேண்டாதபடி இலையைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள். அதுவா அதிசயம்?”“அவசரக்குடுக்கை. அந்த உணவு பரிமாறுபவர் உங்கள் மேல் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தா யல்லவா? பொரியலோ கறியோ தீர்ந்தவுடன் வந்தது அல்லவா? பாயாசம் பல முறை வந்தது. பாகற்காய் ஒரு முறைதான் வந்தது.. ஏனென்றால் உங்களுக்கு அது பிடிக்கவில்லை.” “அதில் அதிசயம்.. ?” “அந்த உணவு பரிமாறுபவனுக்கு இருக்கும் அக்கறைகூட எனக்கு இருக்காது என்று உன் நண்பன் நினைக்கிறானே! உணவு பரிமாறுபவனுக்கு உன் இலையில் இருப்பதும் இல்லாததும் தான் தெரியும். ஆனால் எனக்கு உன் வயிற்றுக்கு எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்பது கூடத் தெரியும். எதை நீ சாப்பிடவே கூடாது எதை நீ அதிகம் சாப்பிடவேண்டும் என்று தெரியும். இவ்வளவையும் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு தாயின் கரிசனத்துடன் நான் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். உன் நண்பனுக்கு அது பிடிக்கவில்லை யாக்கும்..” “தாயே” “நான் சொல்வது உணவையல்ல. வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களை. உன் நண்பனின் கர்மக் கணக்கு சிக்கலாக இருக்கிறது. அதன்படி அவன் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை முடிந்த அளவு குறைத்து, இன்பங்களை அதிகமாக்கி துன்பங் களைத் தாங்கும் வலிமையையும் இன்பங்களை நுகரும் வல்லமையையும் கொடுத்து, அவன் வாழ்க்கையைத் தாயன்புடன் கவனித்துக் கொண்டிருக்கும் எனக்குக் கல்நெஞ்சுக்காரி என்ற பட்டம். பாசக்கார பிள்ளைகளப்பா நீங்கள்!”
“தாயே!” “உன் நண்பன் பெரிய தவறு செய்கிறான். அவன் இலையில் பாயாசம் இருந்தபோது மற்றவர்கள் பாகற்காய் பொரியலைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவன் எந்தப் புகாரும் செய்யவில்லை. ’என்னுடன் பள்ளியில் படித்தவன் கஷ்டப்படும் போது நான் இந்த இளம்வயதிலேயே பெரிய பதவியில் கைநிறை யச் சம்பாதிக்கிறேனே என்று ஒருமுறைகூட அவனுக் காக வருந்தியதில்லை. இப்போது இவன் இலையில் பாகற்காய் இருக்கிறது. இப்போது அடுத்த இலைக்காரர்கள் சாப் பிடும் பாயாசத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறான். ஒழுங்காக இல்லாதவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கும்போது நான் மட்டும் ஏன் இப்படித் துன்பம் அனுபவிக்கிறேன் என்று புலம்பு கிறான். இவனை என்ன செய்வது என்று எனக்கே புரிய வில்லை.” வைகைப்பாலத்தின் குறுகலான நடைபாதையில் அவள்முன் விழுந்து வணங்கினேன். சட்டையெல்லாம் அழுக்கானதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனதில் ஆயிரம் பிறவிகளாக ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கு போகும்போது, சட்டையழுக்கு ஒரு பிரச்னையே இல்லை. “அந்த உணவகம்தான் இந்த உலகம். அதில் நீங்கள் உண்ணும் உணவு உங்கள் கர்மங்களின் பலன்கள். இலையில் போடப்படும் எந்த உணவையும் உண்ணாமல் இருக்க முடியாது. கர்ம பலன்களுக்குத் தகுந்தவாறு சுவையான பாயாசமும் இலையில் விழும். கசப்பான பாகற்காயும் விழும். அதை சாப்பிட்டாக வேண்டும்.” “நான் தொடர்கிறேன் தாயே. நீங்கள் தான் அந்த உணவகத்தில் உணவு பரிமாறுகிறீர்கள். வெறும் கர்மக் கணக்கை மட்டும் பார்க்காமல் உங்கள் தாயன்பையும் சேர்த்தே பரிமாறுகிறீர்கள். உங்களால் முடிந்தவரை கசப்பான பலன்களைக் குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கித் தருகிறீர்கள். நாங்கள் செய்த நன்மை – தீமைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்றாலும், அதை நாங்கள் தாங்கிக்கொள்ளும் வண்ணம் அழகாகப் பரிமாறுகிறீர்கள். பாகற்காய் பொரியலில் இருந்து தப்ப முடியாது. ஆனால் அது உங்கள் கையால் பரிமாறப்படும் போது பாயாச த்தைப் போல் இனிக்கும் அம்மா.. இதை உணர்வது தான் ஆன்மிகத்தின் உச்சநிலை.
“நீ புரிந்து கொண்டதை உன் நண்பனிடம் சொல்” பச்சைப்புடவைக்காரியை மீண்டும் வணங்கினேன். நிமிர்ந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை. – வரலொட்டி ரெங்கசாமி |
|
|
|
|