|
தெய்வம் கொடுக்கத் தான் கொடுக்கிறது. ஆனால், மனித மனம் அதை மறைத்து, வேடம் போட்டு, தற்பெருமை தண்டோரா போட்டு, கடைசியில் அல்லலில் ஆழ்கிறது. பாகவதர் ஒருவர் இருந்தார். ஊரே அவர் பக்தியைப் புகழ்ந்தது. ருக்மிணி தேவியை விசேஷமான வழிபாட்டால் திருப்திப்படுத்தி, அந்த தேவி கையாலேயே, ஸ்பரிச வேதிக்கல் வாங்கிய அவர். தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் அக்கல்லின் மூலம், ஏராளமான தங்கத்தை உருவாக்கி, வாழ்க்கையை விருப்பம் போல் அனுபவித்து வந்தார், பாகவதர். அதே சமயம், தெய்வம் தந்ததை மறைத்து, பரம ஏழையைப் போலவும் பெரிய வைராக்கிய சீலரைப் போலவும் நடித்தார். ஆனால், அவர் மனைவி கமலாபாயோ, அதே ஊரில் வசித்த சிறந்த பக்திமானாக விளங்கிய, நாமதேவரின் மனைவி ராதாபாயிடம், என்ன ராதாபாய்... வறுமையிலேயே இருக்கிறாய்... ஆனால், எப்போது பார்த்தாலும் பண்டரிநாதனையே கும்பிட்டு வருகிறாய்; என்ன லாபம்? ருக்மிணி தேவியைக் கும்பிடு... என்று துவங்கி, ஸ்பரிச வேதிக் கல்லைப் பற்றியும் கூறினாள்.
ஸ்பரிச வேதிக் கல்லை ராதாபாயிடம் காட்டியதோடு, அதை அவளிடம் தந்து, இந்தா... இதை வைத்து, தேவையான அளவு தங்கத்தை சேர்த்துக் கொள். வேலை முடிந்தவுடன் திருப்பித் தந்து விடு. யாரிடமும் சொல்லாதே; ஜாக்கிரதை... என, எச்சரித்து, அனுப்பினாள், கமலாபாய். ஸ்பரிச வேதிக் கல்லை பயன்படுத்தி ஏராளமான தங்கத்தை உருவாக்கி, பொருட்கள் பலவற்றையும் வாங்கினாள் ராதாபாய். அதைக்கண்ட நாமதேவர் திகைத்தார்; மனைவியிடம், இவையெல்லாம் ஏது? உண்மையைச் சொல்... என்றார். நடந்தவற்றையெல்லாம் சொன்னாள் ராதாபாய். பொறுமையாகக் கேட்ட நாமதேவர், சரி... அந்த ஸ்பரிச வேதிக் கல்லைக் கொண்டு வா; பார்க்க வேண்டும்... என்றார். ராதாபாய் உடனே கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கிய நாமதேவர், சந்திரபாகா நதிக்குப்போய், ஓடும் தண்ணீரில் ஸ்பரிச வேதிக் கல்லை எறிந்தார். விட்டது தொல்லை... என்பது போல் வீடு திரும்பிய நாமதேவர், வழக்கம்போலக் கண்ணனை எண்ணி தியானத்தில் உட்கார்ந்து விட்டார். திகைத்தாள் ராதாபாய். ராதாபாயிடம் ஸ்பரிச வேதிக் கல்லை இரவலாகக் கொடுத்த கமலாபாயின் வீட்டிலோ, ஸ்பரிச வேதிக் கல்லை காணாமல் தேடினார் பாகவதர். மனைவியிடம் கேட்டார். அவள் நடந்ததைச் சொல்லி விட்டாள். பாகவதர் கோபமடைந்தார். ராதாபாயிடம் ஓடி, ஸ்பரிச வேதிக் கல்லை திருப்பித் தரும்படி கேட்டாள். அக்கல்லை நாமதேவர், நதியில் வீசியதை அறிந்தாள்; பெருங்குரலில் அழுதாள்.
தகவலறிந்த பாகவதர் ஓடி வந்து,என் ஸ்பரிச வேதிக் கல்லை ஒளித்து வைத்துக்கொண்டு, உத்தமன் போல் நடிக்காதே... அதைக் கொடுத்து விடு; பாவத்திற்கு ஆளாகாதே... என பலவாறாக ஏசினார். அவருக்குப் பலவாறாக அறிவுரை கூறினார், நாமதேவர். பொருளாசை கொண்டவன் காதில், தெய்வமே சொன்னாலும் விழாதே! பாகவதர் வேதிக் கல்லில் குறியாக இருந்ததால், பாகவதரை அழைத்துக் கொண்டு, சந்திரபாகா நதிக்குப் போனார் நாமதேவர்; நதியில் இறங்கினார்; இரு கைகளிலும் ஏராளமான கற்களை அள்ளி எடுத்து, பாகவதரே... இவற்றில் இருந்து உன் ஸ்பரிச வேதிக் கல்லை எடுத்துக்கொள்... என்றார். அவர் கைகளில் இருந்தவை அனைத்தும் ஸ்பரிச வேதிக் கற்கள். மக்கள் திகைத்தனர்; பாகவதரும் திகைத்தார். நாமதேவரின் மனப்பக்குவமும், தன்னுடைய உண்மையான தன்மையும் புரிந்தது அவருக்கு; நாமதேவரின் திருவடிகளில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டி, ஞான உபதேசம் வேண்டினார், பாகவதர். நாமதேவர் தன் கைகளில் இருந்த ஸ்பரிச வேதிக் கற்களை மீண்டும் நதியிலேயே வீசி, பாகவதருக்கு ஞான உபதேசம் செய்தார். ஞான உபதேசம் பெற்ற பாகவதரை, பரிசவேதி பாகவதர் என்கிறது பக்த விஜயம். உண்மையான பக்தி எதையும் தேடிப் போகாது. அனைத்தும் அதைத்தேடி வரும் என்பதை விளக்கும் கதை இது?
|
|
|
|