|
நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் வீரபிரதாபனுக்கு அம்பிகையருளால் ஒரு மகன் பிறந்தான். அம்பிகாபதி என பெயரிட்டு வளர்த்தான். அவனோ மிகுந்த புத்திசாலியாக வளர்ந்தான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தான் மன்னன். அதற்காக ஜோசியரை அழைத்தான். அப்போது மகனின் ஆயுள், எதிர்காலம் குறித்தும் கேட்டான். அப்போது, ஜாதகப்படி அம்பிகாபதிக்கு அற்பாயுள் என்பதை ஜோசியர் தெரிவித்தார். இதை அறிந்த வீரபிரதாபன் துயரத்தில் ஆழ்ந்தான். ஆனால், அம்பிகாபதி சிறிதும் கலங்கவில்லை. “தந்தையே.... இதற்காக ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத் தானே போகிறோம்?” என்றான்.
“நீ சொல்வது உண்மை தான் அம்பிகாபதி. இருந்தாலும், தந்தை என்ற முறையில் பிள்ளை நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நினைப்பது இயற்கை தானே. உன்னை பார்த்தாலே என் மனம் வேதனைப் படுகிறது” என்றான். “தந்தையே! உங்களின் கண்ணெதிரில் இருப்பதால் தான் கவலைப்படுகிறீர்கள். எங்கோ கண் காணாமல் இருந்தால், எப்போது வருவேன் என்று எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். இல்லாவிட்டால், அங்கேயே என் உயிர் போனாலும் போகட்டும்” என்றான் தைரியமாக. மன்னரும் அரை மனதுடன் மகனின் முடிவை ஏற்றுக் கொண்டார். இளவரசன் அரண்மனை கஜானாவில் பெரும் செல்வத்தையும், சேவை செய்ய பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு நாட்டை விட்டுப் புறப்பட்டான். அடுத்த தேசமான மலைநாட்டை அடைந்தான். அங்கிருந்த பிரபல கோயிலான மலையரசி அம்மனை சரணடைந்தான்.
அங்குள்ளவர்களுக்கு கல்வி, கலைகளைப் போதிக்க ஆரம்பித்தான். பவுர்ணமி நாளில் அம்மன் கோயிலில் அன்னதானம் அளித்தான். அம்பிகாபதியின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அம்மனை வழிபட்டு மனம் உருகிப் பாடினான். அப்போது அம்பிகாபதியின் உயிரை பறிக்க எமதூதர்கள் பாசக் கயிற்றுடன் நின்றனர். ஆனால், அவர்கள் அம்பிகாபதியின் குரலால் மெய் மறக்க நேரமோ கடந்து விட்டது. கடமை தவறிய அவர்களால் உயிரைப் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு தோன்றிய மலையரசியம்மன், “அம்பிகாபதி! நீ செய்த பவுர்ணமி பரிகாரத்தாலும், மக்களுக்கு செய்த சேவையாலும் உன் ஆயுள் தோஷம் நீங்கியது. உன் இனிய குரல் எமதூதர்களையும் மெய் மறக்கச் செய்தது. இனி நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெறுவாய்” என வாழ்த்தினாள். அம்பிகாபதி வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினான். மகனைக் கண்ட வீரபிரதாபன் மகிழ்ச்சியில் திளைத்தான். |
|
|
|