|
நல்லவர்களுக்கும் கூட வாழ்வில் துன்பம் ஏற்படுகிறதே... ஏன் அவர்களின் வாழ்வில் துன்பம் வர வேண்டும்? மற்றவர்களுக்கு நன்மை உண்டாகவே இப்படி நடக்கிறது என்கின்றனர் அருளாளர்கள். பக்தியில் சிறந்தவர் அக்ரூரர். ஆனால் அவர் கண்ணனிடமே சாபம் பெற்றாரே ஏன் தெரியுமா? கதைக்குள் போவோம் வாருங்கள். துவாரகாபுரி அரண்மனையில் இருந்த சத்தியபாமாவின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அந்த நேரத்தில் அக்ரூரர் அங்கு வந்தார். அவரை கண்டதும் தன் மனதில் உள்ளதைக் கொட்டினாள் பாமா. “கண்ணன் என்னை பார்க்க வருவதில்லை. இது என்ன நியாயம்? நீங்கள் தான் கண்ணனுக்கு பிரியமானவராயிற்றே! என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு நாழிகை நேரத்திற்குள் (24 நிமிடம்) கண்ணன் என்னைக் காண வந்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என் உயிரை விடுவேன்” என்றாள். “இதோ... இப்போதே கண்ணனை வரச் சொல்கிறேன்” என்று அக்ரூரர் புறப்பட்டார். ஆனால் மனதிற்குள் “கண்ணனை எங்கே எப்படி தேடுவது? பாமாவோ ஒரு நாழிகைக்குள் கண்ணன் வந்தாக வேண்டும் இல்லாவிட்டால் உயிரை மாய்ப்பேன் என்கிறாளே... சொன்னதைச் செய்பவள் ஆயிற்றே இவள். என்ன செய்வது?”என சிந்தித்தவர் தானே கண்ணனாக மாறி பாமாவைக் காணச் சென்றார்.
விளையப் போகும் விபரீதம் அவருக்கு புரியவில்லை. என்ன செய்ய? விதி நடத்தும் நாடகம் இது. பல நாட்களாக வராத கண்ணனைக் கண்டு பாமா மகிழ்ந்தாள். சிறிது நேரம் கழிந்தது. அங்கிருந்து கிளம்பிய அக்ரூரர் கண்ணனிடம் நடந்ததை எல்லாம் விவரித்தார். கோபம் தலைக்கேறிய கண்ணன், “அக்ரூரா! என்னை போல வேடமிட்ட நீ பார்வையற்றவனாக பிறப்பாய்!‘ என சபித்தார். நடுங்கிய அக்ரூரர், “கண்ணா! பாமாவின் உயிரைக் காப்பாற்றுவதே என் நோக்கம். வேறெந்த தீய எண்ணமும் கிடையாது” என்றார். “அக்ரூரா! உன்னை நான் அறிவேன். கறந்த பாலை விடத் தூய்மையானவன் நீ! ஆனால் உலகம் அப்படி நினைக்காதே. அதற்காகவே சாபமிட்டேன்” என்றார்.அதன் பின் பாமாவை வரவழைத்தான் கண்ணன். “அக்ரூரனை ’நான்’ என்று நம்பிய நீ பூமியில் ஒரு பணிப்பெண்ணாகப் பிறப்பாய்” என சாபமிட்டார். கண்ணனின் திருவுள்ளப்படி மதுராபுரியில் சூர்தாசர் என்னும் பெயரில் பிறந்தார் அக்ரூரர். ஊனக்கண் இல்லாவிட்டாலும் ஞானக்கண்ணால் கண்ணனைத் தரிசித்து பாடல்கள் பாடினார். பண்டிதர் முதல் பாமரர் வரை சூர்தாசரின் பாடல்கள் பிரபலம் அடைந்தது. ஒருநாள் மதுராபுரி கண்ணன் சன்னதியில் நின்றார் சூர்தாசர். “ கண்ணா... உன் பேரழகை காண முடியாமல் போனதே. உன் அருள் வடிவை எனக்குக் காட்டக் கூடாதா” என மனம் உருகினார். இரங்கிய கண்ணன் பார்வை தரவே, கண்ணனை கண் குளிர தரிசித்தார் சூர்தாசர்.
“கண்ணா! உன்னைப் பார்த்த கண்களால் மற்ற யாரையும் பார்க்க நான் விரும்பவில்லை. மீண்டும் பார்வை இல்லாதவனாக மாற்றி விடு” என வேண்டவே, கண்ணனும் அப்படியே செய்தார். ஒருமுறை சூர்தாசருக்கு அரண்மனையில் பாடுவதற்கு அழைப்பு விடுத்தார் மன்னர். சூர்தாசரும் சம்மதிக்க, அந்தப்புரத்தில் பெண்கள் மத்தியில் கச்சேரி நடந்தது. வெளியாட்கள் முன்னிலையில் ’கோஷா’ இல்லாமல் வரக்கூடாது என்னும் சூழ்நிலையில், ’சூர்தாசருக்கு பார்வை கிடையாதே’ என்பதால் பெண்கள் ’கோஷா’ இல்லாமல் அவரைச் சுற்றி அமர்ந்தபடி பாடல் கேட்டனர். சாபம் பெற்ற சத்தியபாமாவும் அந்த அரண்மனையின் அந்தப்புரத்தில் பணிப்பெண்ணாக இருந்தாள். சூர்தாசரின் பாடல் கேட்டு அனைவரும் மெய் மறந்த நிலையில், கண்ணனின் அருளால் பாமா சாபம் நீங்கப் பெற்று சுயவடிவத்தை அடைந்தாள். சூர்தாசரின் முன்னால் பாமா சென்றதும், சூர்தாசருக்கும் பார்வை கிடைத்தது. “தாயே! தாங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?” எனக் கேட்டார். அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் எல்லாம், “ஆஹா..! இவருக்குப் பார்வை தெரியும் போலிருக்கிறதே!” என்று பயந்தோடி திரைக்கு பின் மறைந்தனர். பணிப்பெண், சத்தியபாமாவாக மாறியதைக் கண்ட அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சூத்திரதாரியான கண்ணன் அங்கு தோன்றி, நடந்ததை எல்லாம் விவரித்தார். கண்ணன், சத்தியபாமா, சூர்தாசர் ஆகிய மூவரையும் அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். சத்தியபாமா, சூர்தாசரை தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்ட கண்ணன் அங்கிருந்து மறைந்தார். சித்திரங்களில் பார்வையற்ற முதியவராக சூர்தாசர் கையில் தம்புராவுடன் பாடிக் கொண்டிருக்க, அருகில் குழந்தைக் கண்ணன் சமர்த்துப்பிள்ளையாக இருப்பது போல வரைந்திருப்பர். அருளாளரான சூர்தாசரின் கண்ணன் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. சூர்தாசருக்கு அருள்புரிந்த கண்ணன் நமக்கும் அருள் புரியட்டும்!
|
|
|
|