|
தீர்த்த யாத்திரையாக சாரதாதேவியாரும், அவருடைய தம்பி மகளான சிறுமி ராதாவும் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்திருந்தனர். ராமநாதரை தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மன்னர் செய்திருந்தர். மூன்று நாள் தங்கிய அவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் முடித்து புறப்பட்டனர். அப்போது ராமநாதபுரம் அரண்மனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று சாரதாதேவியார் சிறுமியுடன் அரண்மனைக்கு வந்தார். அங்கு ஒவ்வொரு இடமாகச் சுற்றி பார்த்த போது, அதிகாரிகளுடன் பொக்கிஷ அறைக்கு சென்றனர். அங்கு விலை உயர்ந்த வைர, வைடூர்ய, தங்க ஆபரணங்கள் நிறைய இருந்தன.
“அன்னையே! தாங்கள் விரும்பிய ஆபரணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மன்னரின் உத்தரவு”என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துறவியான சாரதாதேவியார் தங்க ஆபரணத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரத்தில் மன்னரின் வேண்டுகோளை மறுக்காமல் சிறுமி ராதா விரும்பியதை எடுத்துக் கொள்ளட்டும் என பதிலளித்தார். அங்கிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களை ராதா வியப்புடன் பார்த்தாள். அப்போது சாரதாதேவியார் மனதிற்குள், “ராமநாதா! நீ எளிமையை விரும்புபவர் என்பதை இந்த சிறுமி மூலம் உலகிற்கு உணர்த்த வேண்டும்” என்று பிரார்த்தித்தார். நகைகளை பார்த்தபடி இருந்த சிறுமி அதிகாரிகளிடம், “இதில் ஒன்றும் வேண்டாம். என் பென்சில் தொலைந்து விட்டது. புது பென்சில் ஒன்று வாங்கி கொடுத்தால் போதும்” என்றாள். ராதையின் நெஞ்சம் போல நாமும் எளிமையை விரும்பினால் மனதில் அமைதி நிலைத்திருக்கும்.
|
|
|
|