|
சிவபக்தரான அரதத்தர் கோயிலுக்கு வந்த போது தாசி பெண் ஒருவரை தூணில் கட்டி, கோயில் பொறுப்பாளர் சவுக்கால் அடிப்பதை கண்டார். அரதத்தருக்கு கண்ணீர் பெருகியது. அவர் அழுவதை பார்த்து ஒரு பெண், “அடித்தது அவளைத் தானே! இவர் ஏன் அழுகிறார்?”என்றாள். அதற்கு மற்றொரு பெண், “அவள் மீது அரதத்தர் இரக்கப்படக் கூடாதா” என்றாள். “அடி போடி! பைத்தியக்காரி! நெருப்பில்லாமல் புகையுமா? அரதத்தருக்கும், தாசிக்கும் ரகசிய தொடர்பிருக்கும். அந்த பாசம் தான் கண்ணீராக கொட்டுகிறது” என்றாள் இன்னொரு பெண். பொறுப்பாளர் அடிப்பதை நிறுத்தி விட்டு, “அரதத்தரே... இவள் வராததால் கோயில் பணிகள் முடங்கி கிடக்கிறது. அதற்கான தண்டனை தான் இது. இவளுக்காக தாங்கள் ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டார்.
“இவளை திருத்தும்படி கடவுள் உங்களை நியமித்திருக்கிறார். ஆனால், நானும் எத்தனையோ நாள் கோயிலுக்கு வராமல் இருந்திருக்கிறேனே... அதற்குரிய தண்டனை அளித்து என்னை திருத்துவது யார் என எண்ணிப் பார்த்தேன். அழுகை வந்தது” என்றார் அரதத்தர். இதைக் கேட்ட பொறுப்பாளருக்கு இரக்கம் வர தாசியை பணியில் ஈடுபடச் சொன்னார்.
|
|
|
|