Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தப்பு யாரிடம்?
 
பக்தி கதைகள்
தப்பு யாரிடம்?

ஒரு சிக்கலான வருமான வரிக்கணக்கை முடித்துக் கொண்டிருந்தேன். நான் எவ்வளவு வரி கட்டவேண்டும் என நிர்ணயித்திருந்தேனோ அதை விட சில லட்சங்கள் அதிகமாகக் கட்ட வேண்டும் என அரசின்  மென்பொருள் சொன்னது. நான் போட்ட கணக்கைப் பல முறை சரிபார்த்து விட்டேன். தப்பு என்னிடம் இல்லை. ’ஏன்தான் இப்படித் தரமில்லாத மென்பொருளைப் போட்டுக் கழுத்தை அறுக்கிறார்களோ?’ என்று அலுத்துக்கொண்டு அதை மூடிவைத்து விட்டேன். அலைபேசி சிணுங்கியது. சென்னையில் இருக்கும் என் நண்பர். ’ஹலோ’ என சொல்லும் முன்பே பொரிந்து தள்ளிவிட்டார். “பச்சைப்புடவைக்காரி செய்யறது நியாயமாய்யா? நீயே சொல்லு. இதுவரைக்கும் நூறு ஏழைப் பொண்ணுகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். என் ஒரே பொண்ணு கல்யாணம் விவாகரத்துல முடியப் போகுது. என் பார்ட்னர் என்னை ஏமாத்திட்டான். பல லட்சம் கடன். வாராவாரம் கோயிலுக்குப் போய், ’தாயே நீயே துணை!’ ன்னு அவ கால்ல விழுந்து கெடந்ததுக்கு நல்லாவே பலனைக் கொடுத்துட்டாய்யா உங்க மீனாட்சி.”இன்று மாலை அவள் கோயிலுக்கு நடந்தே செல்வது என்று முடிவெடுத்தேன். நண்பன் சார்பில் அவளிடம் நறுக்கென்று நான்கு கேள்விகளாவது கேட்டேயாக வேண்டும்.

அன்று மதியம் என் நண்பரான மற்றொரு தணிக்கையாளரை அவருடைய அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. வந்த வேலை முடிந்தபின்அரசின் மென்பொருள் வரிக்கணக்கில் செய்யும் சொதப்பலைச் சுட்டிக் காட்டினேன். இருக்கமுடியாதே என்று இழுத்த நண்பர் என் கணக்குப் பற்றிய விபரங்களைக் கேட்டார். நான் போட்ட கணக்கையும் மென்பொருள் போட்ட கணக்கையும் காட்டினேன்.  அரை மணிநேரம் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து முறுவலித்தார் நண்பர். “தப்பு உங்க மேலேதான். புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு இந்த வரிச்சலுகை கிடையாது. ஆனால் நீங்கள் அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்த தவறை அரசின் மென்பொருள் செய்யவில்லை” பின் மெல்லிய குரலில், “சார்... தப்பு நம்ம மேலதான் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டாத்தான் அதைக் கண்டுபிடிச்சி சரி செய்யமுடியும். அதைச் செய்யாம அரசு, மென்பொருள், அதிகாரிகள் சமுதாயம்னு எல்லார் மேலையும் பழிபோட்டுக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.” மாலை மீனாட்சி கோயிலை நோக்கி நடந்தபோது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. நல்லவனான நண்பனைக் கைவிட்டுவிட்டாயே என அவளைக் குற்றம் சாட்டமுடியுமா என்ன? அவள் என்ன கீழ்க்கோர்ட்டா? தீர்ப்பு சரியில்லை என மேல்முறையீடு செய்ய? அவளுக்கு மேல் யாரும் இல்லையே. இருப்பதெல்லாம் அவள் தானே!

கோயிலில் கூட்டம். ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கினால் உடனே பார்த்துவிடலாம் என நான் போட்டது தப்புக்கணக்காயிற்று.  வரிசை மெதுவாக நகர்ந்தது.  பொறுமையில்லாமல் வெளியே வந்தேன். என்னைப் பார்க்க அவளுக்கு மனமில்லை போலும் என கனத்த மனதோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஆட்டோ கிடைக்கவில்லை. நல்ல வேளை ஒரு ஷேர் ஆட்டோக்காரர் சாதாரண ஆட்டோவாக வருவதாகச் சொன்னார். கேட்ட வாடகையைக் கொடுப்பதாகச் சொன்னேன். நடுவில் வேறு யாரையும் ஏற்றக்கூடாது என நிபந்தனையிட்டேன். யானைக்கல் பகுதியில் ஒரு பெண் ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தினாள்.  வேறு யாரையும் ஏற்ற மாட்டேன் என்று டிரைவர் விளக்குவதற்குள் வண்டிக்குள் ஏறி சுவாதீனமாக என்னருகில் அமர்ந்தாள். முறைத்துப் பார்த்த டிரைவரிடம் ’இந்தாளு போற இடத்துக்குத் தான் போறேன்’ என சொல்லி என்னைப் பார்த்தாள். ஆஹா! பச்சைப்புடவைக்காரி. “என்னப்பா நல்லதே செய்த உன் நண்பனை நான் கைவிட்டுட் டேன்னு வருத்தமோ? அழுகை அழுகையாக வந்தது. ’தாயே கைதூக்கி விடுவதும் கைவிடுவதும் உங்கள் இஷ்டம். ஏன் அப்படிச் செய்தீர்கள் என கேட்க இந்த நாய்க்கு உரிமை கிடையாது என  சொல்ல நினைத்தேன்.  அழுகை அதிகமாயிற்று.

’தாயைத் தட்டிக் கேட்கப் பிள்ளைக்கு உரிமை இருக்கிறது.’நான் ஒன்றும் பேசவில்லை. “உன் தணிக்கையாளர் நண்பர் என்ன சொன்னார் என  சிந்தித்துப் பார். ’தப்பு நம்ம மேலதான் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டாத்தான் அந்தத் தப்பைக் கண்டுபிடிச்சிச் சரி செய்யமுடியும்.’  சாதாரண மனுஷங்க உருவாக்கின வருமான வரி மென்பொருள் நீ செய்யற தப்பச் செய்யாதுன்னு உன் நண்பர் உனக்குப் புரிய வைச்சார் இல்லையா?  அந்த மென்பொருள் போடற கணக்குப் பிசகாதுன்னு நிரூபிச்சாரா இல்லையா?  அதுவே அப்படின்னா  இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து, காக்கும் இந்த இறைவி போடற கணக்குல எப்படிப்பா தப்பு வரும்? ஒரு மென்பொருளை உருவாக்கினவங்களுக்கு இருக்கற அறிவுகூட இறைவிக்கு இருக்காதுன்னு நெனைக்கறியா என்ன?” “தாயே, உங்கள் ஆயிரம் பெயர்களில் ஒன்று நிர்மலா. குற்றமற்றவள். அதனால்...”“இப்ப வியாக்கியானம் பேசற நீ உன் நண்பன் என்னைக் குறை சொன்னபோது ’எங்காத்தா கணக்குல தப்பு இருக்காது என  அவன்முகத்தில் அடித்தாற்போல் ஏன் சொல்லவில்லை?”தலைகுனிந்தேன். “ஏன்னா உனக்கே அந்த நம்பிக்கை இல்லை” அழுகை அழுகையாக வந்தது. இவளுடைய கணக்கையா சந்தேகித்தேன்? பெரிய பாவமல்லவா! “நீ என்னை அறியாவிட்டாலும் நான் உன்னை அறிவேன். அதைவிடு. உன் நண்பன் விஷயத்தைப் பார்ப்போம்.  தன்னிடம் தவறு இருக்கிறது  என்பதை அவன் உணரட்டும்.. மகளுக்குத் திருமணம் செய்யும் போது பையனைப் பற்றிச்  சரியாக விசாரிக்கவில்லை அவன்...”

“இருந்தாலும் நல்ல விஷயங்கள் நிறையச் செஞ்சிருக்கானே...” “அதனாலதான் அவன் மகளுக்கு எந்த ஆபத்துமில்லாமக் காப்பாற்றித் தந்திருக்கிறேன். திருமணமான ஒரு மாதத்திலேயே தன்னுடைய கணவனின் சுயரூபத்தைப் புரிந்துகொண்டு அவள் விலகி விட்டாள்.  இல்லையென்றால் அவள் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். உன் நண்பனை நல்லவனாகவே  இருக்கச் சொல். முடிந்தால் இன்னும் அதிகமாக நல்லது செய்யச் சொல். எல்லாம் சரியாகிவிடும். இதற்குமேல் அவனுடைய கர்மக்கணக்கைப் பற்றி உன்னிடம் சொல்லமுடியாது.” “அவ்வளவு தப்பையும் எங்ககிட்ட வச்சிக்கிட்டு தினமும் கோயிலுக்கு வந்து உங்களை ஆயிரம் கேள்வி கேக்கறோம். நீங்க நெனைச்சா நாங்க நாக்கப் பிடுங்கிக்கறமாதிரி நாலாயிரம் கேள்வி கேக்கலாம். ஆனா எந்தக் கேள்வியும் கேக்காம எங்க மேல இப்படி மவுனமா பாசத்தப் பொழியறீங்களே ஏம்மா?” “ஏன் என்றால் நான் ஒரு தாய்.  இது கூடப் புரியவில்லையே உனக்கு?” அவள் சிரித்தாள். நான் அழுதேன். ஆட்டோ வீட்டை அடைந்த திருந்தது அவள் மறைந்துவிட்டிருந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar