|
நல்ல குடும்பத்தில் பிறப்பு, உயரிய கல்வி, வசதியான இடத்தில் திருமணம், இளமை என அனைத்தும் ஒருவனுக்கு கிடைத்தால் அவனது ஆட்டத்தை கேட்க வேண்டுமா? ஆனால் அதன் விளைவு என்னாகும் என்பதை அறிய இதை படியுங்கள். விநாயகரை பூஜித்தார் அவுரவ முனிவர். உடனிருந்து உதவினாள் மனைவி சுமேதா. பத்து வயது மகளான வன்னி, விநாயகரின் பாடல்களைப் பாடினாள். பூஜை முடிந்து அவுரவர் எழுந்த போது, தவுமிய முனிவர் அங்கு வந்தார். முனிவரை வரவேற்ற அவுரவர், “அம்மா... வன்னி! வந்திருக்கும் பெரியவரை நமஸ்காரம் பண்ணு” என்றார். முனிவரை பார்த்த வன்னி வாய்விட்டுச் சிரித்தாள். “தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார். கொக்கு மாதிரி வெளுத்த தலைமுடி வேறு. பார்த்தவுடன் சிரிக்க தோன்றுகிறது” என்றாள். அவுரவர் கோபமுடன் “அசடு!அசடு! பத்து வயதாச்சு. பெரியவர்களை இப்படி மரியாதை இன்றி பேசலாமா?” என்றார். “கோபம் வேண்டாம் அவுரவரே! தங்கள் மகளின் அழகும், துடுக்குத்தனமான பேச்சும் எனக்கு பிடித்திருக்கிறது. இவளை என் மருமகளாக்க விரும்புகிறனே” என்றார் தவுமியர்.
“நல்லது நடந்தால் சரி. ஆமாம்... தங்களின் மகன் மந்தாரன் என்ன செய்கிறான்?” என்றார் அவுரவர். “அவன் சவுனகரின் ஆஸ்ரமத்தில் தங்கி வேதம் கற்கிறான்” என்று சொல்ல பேச்சு அப்படியே வளர்ந்து முகூர்த்த நாள் பார்ப்பதில் முடிந்தது. ஆம்! வன்னிக்கும் மந்தாரனுக்கும் திருமணம் நடந்தது. வன்னி வயதுக்கு வராத பெண் என்பதால் தாய் வீட்டிலேயே இருந்தாள். மந்தாரன் மீண்டும் குருகுலம் திரும்பினான். ஐந்தாண்டு கடந்தன. வன்னியும் பருவமடைந்தாள். மந்தாரன் குருகுலத்தில் வேதக்கல்வியை முடித்தான். படிப்பு முடிந்த கையோடு, மாமனார் வீட்டை வந்தடைந்தான். சிலநாள் அங்கேயே தங்கி விட்டு மனைவியுடன் புறப்பட்டான். சீர்வரிசையுடன் தம்பதிகளை அனுப்பி வைத்தார் அவுரவர். மந்தாரன் தன் தந்தையான தவுமியர் ஆஸ்ரமத்தை நோக்கி நடந்தான். இளம்மனைவியுடன் வந்த மந்தாரனின் மனம் சந்தோஷத்தில் மிதந்தது. சர்க்கரைப்பொங்கலில் கல் அகப்பட்டது போல வழியில் விநாயகர் பக்தரான புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார். விநாயகரை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற முனிவர், தோற்றத்திலும் விநாயகராகவே மாறியிருந்தார். சடாமுடி, நீண்ட தாடி, புருவ மத்தியில் சிறு தும்பிக்கையுமாக காட்சியளித்த புருசுண்டியின் விகாரமான தோற்றம் கண்ட வன்னி அலறினாள். கணவரான மந்தாரனின் முதுகின் பின் ஒளிந்து நின்றாள்.
மந்தாரன் திடுக்கிட்டாலும், சற்று நிதானித்தபடி “யாரைய்யா நீர்? தும்பிக்கையும் தொப்பையுமாகக் கரேலென்று இருக்கிறீர். பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்றான். “அப்பா! யாரையும் தோற்றம் கண்டு எடை போடாதே!” என்றார் புருசுண்டி முனிவர் மந்தாரன் மீண்டும் தொடர்ந்தான். “பார்த்ததும் ஏதோ காட்டு மிருகம் வந்தது என்றல்லவா நினைத்தேன்”என்றான். அது கேட்ட வன்னியும் காடே அதிரச் சிரித்தாள். புருசுண்டி முனிவர் “தோற்றத்தில் இருக்கும் தெய்வீகம் உங்களின் பேச்சில் வெளிப்படவில்லையே.. முறை தவறி பேசினால் தண்டனைக்கு ஆளாவீர்” என்றார். “அங்குசம் கையில் எடுத்தால் பயந்தோடும் யானைக்கு... கோபம் கூட வருமா... நான் யார் தெரியுமா? தவுமிய முனிவரின் பிள்ளையாக்கும். சவுனகரின் சீடன்! அவுரவ முனிவரின் மாப்பிள்ளை! வேதங்களில் கரை கண்டவன்! என்னையே எச்சரிக்கிறீரா?” என்றான் மந்தாரன். வன்னியும் அப்படியே பின்பாட்டு பாடினாள்.“பிறந்த குலம், கல்வி, உறவினர் என்றெல்லாம் தற்புகழ்ச்சி கொண்டு என்னை இழிவாக கருதும் நீங்கள் மரத்திற்குச் சமமானவர்கள். நற்பண்பு இழந்த நீங்கள் மரங்களாகப் போகக் கடவது” என சாபமிட்டார் புருசுண்டி. அதன்படியே வன்னி மரமாகவும், மந்தார மரமாகவும் மாறி நின்றனர். அப்போது மந்தாரனின் குருநாதரான சவுனகரின் மனம் திடுக்கிட்டது. ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தவர், தியானத்தில் ஆழ்ந்தார். நடந்தது அனைத்தும் காட்சியாக மனதில் விரிந்தது. விநாயகரிடம் முறையிட்டார். பெருமானும் தரிசனம் அளித்தார். “சுவாமி... என் சீடனுக்கு நேர்ந்த சாபத்தை தாங்கள் உடனே போக்கியருள வேண்டும்” என்றார் சவுனகர்.
“சவுனகா! நீ அறியாத விஷயமா? அடியவர்கள் இட்ட சாபத்தைத் தீர்க்க தெய்வத்தாலும் முடியாது. இருந்தாலும் உன் வேண்டு கோளுக்காக வன்னி, மந்தார மரத்தடியில் எழுந்தருள்கிறேன். நாடி வரும் பக்தர்களின் ஆணவத்தைப் போக்கி நல்ல புத்தியை அளிக்கிறேன். வன்னி, மந்தார இலைகளால் அர்ச்சிக்கும் பக்தர்களுக்கு விரும்பிய வரம் கொடுப்பேன்” என வாக்களித்து விட்டு மறைந்தார் விநாயகர்.
|
|
|
|