|
ஒவ்வொருவருக்கும் தெய்வம் ஒவ்வொரு விதத்தில் அறிவுறுத்தும். அதை உணர்ந்து செயல்படுவது நம் பொறுப்பு. மதுரையில் உள்ள சிற்றூர் ஒன்றில், கூத்தர் என்பவர் வாழ்ந்தார். பாண்டிய மன்னர்களுக்குப் போருக்குத் தேவையான பகழிகளை/அம்புகளை தயாரிக்கும் வேலை அவருடையது அதன் காரணமாக ’பகழிக்கூத்தர்’ என அழைக்கப்பட்டார். முற்பிறப்பின் நல்வினையால் பகழிகூத்தருக்கு கலைமகள் அருள் பூரணமாக இருந்தது. வாயைத் திறந்தால் போதும். ஒரே பாட்டு தான்! பாடுவதில் அபரிமிதமான திறமை பெற்ற இவர் பாடுவதில் கருத்தைச் செலுத்தாமல், பகழி (அம்பு) செய்வதில் கருத்தைச் செலுத்தினார். “என்ன கூத்தா! வாயைத் தெறந்தா பாட்டா கொட்ற! இதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது. சாமி மேல பாடு” என்று சொன்னால் “எந்தத் தெய்வம் செந்தமிழில் விருப்பம் உடையதாக இருக்கிறதோ அந்த தெய்வம் கட்டளையிட்டால் பாடுகிறேன்” என்று சொல்லி விடுவார் பகழிக்கூத்தர். ஒருநாள்... பகழிக்கூத்தரின் கனவில் செந்திலாண்டவன் தரிசனம் அளித்தான். பன்னீர் இலைத்திருநீறும் ஒரு சீட்டும் தந்து மறைந்தார். திடுக்கிட்டு விழித்த பகழிக்கூத்தரின் அருகில் இலைத்திருநீறும், சீட்டும் இருந்தன. எழுந்தவர் முருகனை மனமாற வணங்கி திருநீற்றை பூசிக்கொண்டு, சீட்டை படித்தார்.
“பூமாது போற்றும் புகழ்ப்பகழிக் கூத்தாவுன் பாமாலை கேட்க யாம் பற்றேமா - ஏமம் கெடுக்க அறியேமா கூற்றுவன் வாராமல் தடுக்க அறியேமா தாம்” -என அதில் எழுதியிருந்தது. கை கூப்பி முருகனை வணங்கிய பகழிக்கூத்தர், அதிலிருந்த முதல் சொல்லான ’பூமாது’ என்பதையே முதலாக வைத்து முருகன் மீது பிள்ளைத்தமிழ் பாடினார். அதன் பின் பகழிக்கூத்தர் பாடலுடன் திருச்செந்தூரை அடைந்தார். கோயில் நிர்வாகிகளிடம் “செந்தூரான் கட்டளையால் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறேன்’என்று தெரிவித்தார். அவர்களோ “இவன் முருகன் மீது பாடியிருக்கானாம்; அதுவும் பிள்ளைத் தமிழ் பாட்டு.... முருகப்பெருமானே கட்டளை யிட்டாராம்” என்று அலட்சியப்படுத்தினர். பகழிக்கூத்தர் தங்குமிடம், உணவிற்கு கூட திண்டாடும் நிலை வந்தது. மூன்று மாதங்கள் கழிந்தன. “திருச்செந்தூர் முருகன் கொடுத்த வாக்கை ஏற்று பிள்ளைத்தமிழை அரங்கேற்ற வந்த எனக்கு...” என்று மனம் வருந்தவில்லை. பொறுமை காத்தார். அந்த நல்ல குணம் இறுதியில் வென்றது. குலசேகரன் பட்டினத்தில் இருந்த பக்தரான காத்தபெருமாள் மூப்பனாரின் கனவில் போய் நின்றது. எப்படி? ஏன்? “திருநீறு கவிபாடச் சீட்டும் தந்த திருச்செந்தூரான் நல்வழி காட்டுவான்” என நம்பினார் பகழிக்கூத்தர்.
பகழிக்கூத்தரின் எண்ணத்தை நிறைவேற்ற தீர்மானித்த முருகன், தன்னை அலங்கரிக்கும் தங்கப்பதக்கம் ஒன்றைப் பகழிக்கூத்தரிடம் (கனவில்) அளித்து, குறிப்பிட்ட இடத்தைக் காட்டி ’அங்கு போய் இரு’ என்று சொல்லி மறைந்தார். கனவு கலைந்த பகழிக்கூத்தர் அருகில் கிடந்த தங்கப்பதக்கத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் தங்கினார். அதே நாளில் குலசேகரன் பட்டினத்தில் பக்தரான காத்த பெருமாள் மூப்பனாருக்கு காட்சியளித்த முருகன் “பகழிக்கூத்தன் எம் மீது பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறான். அதை அரங்கேற்ற நீ ஆவன செய்” என்று உத்தரவிட்டதோடு பகழிக்கூத்தர் இருக்கும் இடத்தையும் காட்டி மறைந்தார். செல்வந்தரான காத்தபெருமாளும் உடனே பல்லக்கில் புறப்பட்டு திருச்செந்தூரை அடைந்தார். அங்கே, முருகப்பெருமானின் தங்கப் பதக்கத்தைக் காணவில்லையே என்ற குழப்பம் சூழ்ந்திருந்தது. அந்நிலையில் நிர்வாகிகளைச் சந்தித்த காத்தபெருமாள் தனக்கு முருகன் இட்ட கட்டளையை விவரித்தார். கோயில் நிர்வாகிகள் தங்களின் தவறை உணர்ந்து வருந்தினர். அனைவரும் காத்தபெருமாளுடன் புறப்பட்டு பகழிக் கூத்தர் இருந்த இடத்திற்குச் சென்றனர். பகழிக்கூத்தரும், காத்தபெருமாளும் திருச்செந்தூரானின் திருவருளை வியந்து போற்றினர். நிர்வாகத்தினரும் பகழிக்கூத்தரின் திருவடிகளை வணங்கி மன்னிப்பு கேட்டனர்.
பிள்ளைத்தமிழின் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடானது. பகழிக்கூத்தர் புலவர்களின் முன்னிலையில் பாடலைப் பாடி விளக்கம் அளித்தார். பாடல்களின் இனிமையும், நயமும் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். அவைப்புலவர்களில் ஒருவராக முருகனும் எழுந்தருளி, செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழும் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் - சொந்தத் திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகன் வண்மை தருமால் பகழிக்கூத்தன். என்று சிறப்புப்பாயிரம் பாடி விட்டு மறைந்தார். அரங்கேற்றம் முடிந்ததும் பகழிக்கூத்தருக்கு பொன்னும் பொருளும் அளித்து செந்தூரானின் தங்கப்பதக்கத்தை மீட்டார் காத்தபெருமாள். |
|
|
|