|
அரண்மனை மாடத்தில் நின்ற ராஜாவும் ராணியும் வாழைப் பழங்களை தின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசிய பழத்தோல்கள் தெருவில் விழுந்தன. எங்கிருந்தோ வந்த சந்நியாசி ஒருவர் அப்போது அரண்மனை வழியாகச் சென்றார். பசி வாட்டியதால் தோல்களை எடுத்து தின்றார். இதைக் கண்ட காவலர்கள் சந்நியாசியை இழுத்துச் சென்று ராஜாவின் முன்னிறுத்தி குற்றம் சுமத்தினர். தர்ம சிந்தனையே இல்லாத ராஜாவும் சந்நியாசியை சாட்டையால் அடிக்க உத்தரவிட்டார். ஒவ்வொரு அடி விழும் போதும் சந்நியாசி சிரித்தபடி இருந்தார். ராஜாவுக்கு கோபம் உண்டானது. “ஏன் சிரிக்கிறாய்?” என்று வெகுண்டான். சிரிப்பை அடக்கியபடி, “மன்னரே! தோலைத் தின்றதற்கே இத்தனை தண்டனை என்றால் பழத்தைத் தின்ற தங்களுக்கு எதிர்காலத்தில் எத்தனை அடி விழும் என யோசித்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றார். அவரவர் செய்யும் பாவத்தின் விளைவை சந்தித்தாக வேண்டும் என்பதை சொல்லாமல் சொன்னார் சந்நியாசி. |
|
|
|