|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பச்சைப்புடவைக்காரி |
|
பக்தி கதைகள்
|
|
அன்று வருமானவரி அலுவலகத்தில் ஒரு சிக்கலான வழக்கு. இரண்டு மணி நேர விசாரணை. ஆயிரம் கேள்விகள். இரண்டாயிரம் ஆவணங்கள். மாலை ஆறு மணியாகி விட்டது. அலுத்துச் சலித்து வெளியே வந்த போது மாடிப்படிகளைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு பெண் ஊழியர் கீழே கிடந்த ஒரு காகிதத்தை நீட்டினார். “இது உங்கதா பாருங்க.” - பார்த்தேன். ’அதிகாரியின் கேள்விகள் இருக்கட்டும். என் கேள்விக்குப் பதில் சொல்லத் தயாரா?’ என ஒற்றைவரியில் பச்சை மையில் எழுதியிருந்தது. திடுக்கிட்டுத் திரும்பினால் அதுவரை கூட்டிக் கொண்டிருந்தவள் அண்ட சராசரங்களையே கூட்டியாளும் அகிலாண்டேஸ்வரியாக தோன்றினாள். என்னைக் காலியாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். “அந்தக் காட்சியைப் பார். பின் என் கேள்விக்கு பதில் சொல்.” அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சுமார் ஆயிரத்தி ஐநூறு கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவிக் கொண்டிருக்கிறார். வேகமாக நடந்து கொண்டிருந்த தொழிற்சாலை பணிகள் ஒரு கட்டத்தில் முடங்கின.
திட்டமிட்டதற்கு மேல் செலவு அதிகமானது. இதில் தொழிலதிபரின் குற்றம் ஒன்றுமில்லை. அந்நியச் செலாவணி விவகாரங்களில் அவரையும் மீறி நடந்த அதிரடி மாற்றங்கள் தொழிலின் அஸ்தி வாரத்தையே உலுக்கியது. நிலைமையைப் புரிந்து கொண்டு வங்கிகள் கடன் தொகையை அதிகமாக்கினால் சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் ஒரு ரூபாய் கூட அதிகம் தரமாட்டேன் என வங்கிகள் அடம் பிடித்தன. தொழிலதிபர் மிரட்டினார்; கெஞ்சினார். எதற்கும் வங்கி அதிகாரிகள் மசியவில்லை. தொழிற்சாலை வேண்டாம் என கைவிட்டால் ஏற்கனவே முதலீடு செய்த பணம் முக்கால்வாசிக்கு மேல் வீணாகி விடும். அவர் ஆசை ஆசையாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த இயந்திரங்களை எடைக்குத் தான் போடவேண்டும். தொழிற்சாலையை எப்படியும் இன்னும் ஐந்தாறு மாதங்களில் தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இரண்டாயிரம் பேரை வேலைக்கு எடுத்திருந்தார். அவர்கள் கதி அதோகதியாகி விடும்.
கடைசிக்கட்ட முயற்சியாக ஒரு துறவியைக் காணப் போனார் தொழிலதிபர். பொங்கிய கண்ணீரை அடக்கியபடி பிரச்னையைச் சொன்னார்.
சில நிமிடம் யோசித்த துறவி, “சங்கரா... என்மேல முழுசா நம்பிக்கை இருக்கா?”
“மலையிலிருந்து குதின்னு சொல்லுங்க சாமி...உடனே குதிக்கிறேன்.”
“நான் சொல்றத அப்படியே செய்யணும்.”
“காத்திருக்கேன், சாமி.”
“உன் பிரச்னை அப்படியே இருக்கட்டும். தென் தமிழகத்தில் இருக்கற ஏழெட்டு புராதனக் கோயில்கள் சிதிலமடைஞ்சு போச்சு. தினப்படி பூஜைக்கே திணறிண்டிருக்கா. இந்தக் கோயில்கள திருப்பணி பண்ணணும்னா பத்து கோடி ஆகும்னு சொல்றா. நீ இந்தக் காரியத்த எடுத்துச் செய்யேன். நீ போய்ப் பணம் கேட்டா யாரும் மாட்டேன்னு சொல்ல மாட்டா. எனக்காகச் செய்வியா?”
“நிச்சயமாச் செய்றேன் சாமி... என் பேக்டரி”
“நீ பகவான் காரியத்தப் பாத்தா பகவான் உன் காரியத்தப் பாத்துப்பான். உனக்குத்தான் பத்து கோடி பெரிய தொகை. என் அப்பனுக்கு ஆயிரம் கோடி ரூபா அரையணாவுக்குச் சமானம்”
“அந்தத் துறவி செய்தது சரியா?”
“தாயே எங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இருக்கும் வித்யாரூபிணியே! நீங்களே கேள்வி கேட்டால்...”
“உன் மனசில் பட்டதைச் சொல்.”
“தாயே அந்தத் துறவி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாவம் அந்த மனிதர் கஷ்டத்தில் இருக்கிறார். இவரைப் போய்க் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய் என்றால் பிரச்னை எப்படி சரியாகும்?”
“முட்டாள். முட்டாள். உனக்கு இன்னும் அந்தத் துறவி சொன்னதன் சூட்சுமம் புரியவில்லை. இந்த தொழிலதிபரை விட்டால் கோயில் வேலைக்கு வேறு ஆள் கிடையாது என்பதற்காக அதைச் சொல்லவில்லை. அந்தத் துறவியின் செல்வாக்கிற்கு திருப்பணியை இன்னொரு செல்வந்தரிடம் சொன்னால் போதும். ஒரே காசோலையில் வேலை முடிந்திருக்கும். ஆறே மாதத்தில் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து விடும்”
“பின் ஏன் பணப்பிரச்னையில் தத்தளிக்கும் சங்கரனிடம் சொன்னார்?”
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்காக. சங்கரன் தன்னைச் சூழ்ந்த பிரச்னைகளை கண்டு மலைத்து விட்டார். இதிலிருந்து மீளவே முடியாதோ என்ற பயம் வந்து விட்டது. அந்த பயத்துடன் வங்கிகளை அணுகிய போது, அவர் வைத்த கோரிக்கையில் அவருக்கே நம்பிக்கையில்லை. அதனால் தான் வங்கிகள் நம்ப மறுக்கின்றன. அவர் மனதில் இருந்த பயம் அவரைச் சுற்றி வறுமையை உருவாக்கி விட்டது.
மேலும் சங்கரன் மனதில் நான் கொடுக்கிறேன் என்ற எண்ணம் வந்து விட்டால் அவரிடம் வறுமை இருக்காது. இருந்தால்தானே கொடுக்கமுடியும்? என்னால் கொடுக்க முடியும் என்று சங்கரன் நம்பத் தொடங்கினால் மனதிலுள்ள வறுமை போய் விடும். அவர் வங்கிகளிடம் தெம்புடன் பேச முடியும்.”
“உனக்கு என் பேச்சில் நம்பிக்கையில்லை போல் இருக்கிறதே?”
“தாயே...”
“ஆறுமாதம் ஆன பின் என்ன நடந்தது என அங்கே பார்.”
கோயில்களைச் சீரமைக்கப் போதிய பணம் திரட்டினார் சங்கரன். தன் சொந்தப் பிரச்னையை மறந்து கடவுளுக்காக நிதி திரட்டுவது உற்சாகமான மாற்றமாக இருந்தது. அவருடைய தலைமையில் பெரிய குழுவினர் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். இனி மேல் திருப்பணி அதன் போக்கில் தானாக நடக்கும் என்ற நிலையில் துறவியிடம் நடந்ததைச் சொன்னதோடு தன் சொந்த பிரச்னைகளைப் பார்க்கப் போனார் சங்கரன்.
’வாங்கிய கடனைக் கட்டாவிட்டால் உங்களை ஒருவழி பண்ணி விடுவோம்’ என்று வங்கி அதிகாரிகள் மிரட்டினர். ஆனால் சங்கரன் அசரவில்லை.
“இங்கே பாருங்கள். என்னிடம் செலவழிக்க பணமில்லை. என்னால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது. நீங்கள் கொடுத்த பணம், நான் சம்பாதித்த பணம் அனைத்தையும் தொழிற்சாலையில் தான் முடக்கியிருக்கிறேன். இப்படி நெருக்கினால் நான் திவால் மனு கொடுப்பேன். எனக்கு இருநூறு கோடி தான் நஷ்டம். உங்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல். அதனால் என்னை நம்பி இன்னும் நானூறு கோடி கடன் கொடுங்கள். எப்படியாவது தொழிற் சாலையை ஓட வைத்து விடுகிறேன்.
எனக்காக வேண்டாம் என்னை நம்பியிருக்கும் இரண்டாயிரம் ஊழியர்களின் குடும்பங்களுக்காகவாவது நல்லது செய்யுங்கள். அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று உறுதிபடச் சொன்னார் சங்கரன்.
அன்று மாலையே வங்கிகள் அவருக்கு மேலும் கடன் தர முன்வந்தன. தொழிற்சாலை திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியது. முதலில் சில ஆண்டுகள் தத்தளித்தாலும் பின்னாளில் தொழிற்சாலை பெரிய அளவில் வளர்ந்து பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியது.
சிலிர்த்துப் போனேன்.
“இதிலிருந்து என்ன புரிந்தது என்று சொல் பார்க்கலாம்”
“வறுமை என்பது நமக்கு வெளியே இல்லை. மனதில் தான் இருக்கிறது தாயே. அதை விரட்டியடிக்க வேண்டுமானால் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும். அதற்கு மனதில் அன்பு வேண்டும். இப்படி ஒரு வழி இருக்கிறது என்று தெரிய என்னைக் காலகாலத்திற்கும் கொத்தடிமையாகக் கொண்ட இந்த கோலக்கிளியின் அருள் வேண்டும்”
பச்சைப்புடவைக்காரி சிரித்தாள். நான் அவளின் அன்பைத் தாள மாட்டாமல் அழுதேன். |
|
|
|
|