|
காஞ்சிபுரம் வந்த பக்தர் ஒருவர்
மகாசுவாமிகளை வணங்கி விட்டு தயங்கி நின்றார். “என்னவோ நீ கேக்க
நெனக்கறாப்பல இருக்கே...” என்றார் மகாசுவாமிகள். “ஆமாம் சுவாமி!
நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவன் நான். என் தாத்தாவுக்குத் தொன்னுாறு
வயதாச்சு. கொஞ்ச நாளா அவருக்கு உணர்வு இல்லை. ஆஸ்பத்திரில சேத்துருக்கோம்.
’டிரிப்ஸ்’ ஏத்தினா பணம், ’ஸ்கேன்’ பண்ணினா பணம். மருந்துச் செலவு, ரூம்
வாடகைன்னு செலவை சமாளிக்க முடியலை. தாத்தாவுக்கும் உடம்பு குணமாகிற மாதிரி
தெரியலை. என்ன செய்வதென புரியாமல் தவிக்கிறோம்” சுவாமிகள் பக்தரிடம் “நான்
சொல்றதை கேளு. வயசான காலத்தில் ஆஸ்பத்திரியில இருப்பது சித்திரவதையா
இருக்கும். வீட்டுக்கு வந்துட்டாலே தாத்தாவின் மனசுக்கு சற்று ஆறுதலா
இருக்கும். உனக்கும் செலவு குறையும். அவரும் கடைசிக் காலத்தை நிம்மதியா
கழிப்பார்.
வீட்டில என்ன வைத்தியம் முடியுமோ அதைப் பண்ணு. சவுகரியமாக கட்டிலில் படுக்க வை. தினமும்
காலையில தாத்தாவின் நெற்றியில திருநீறு இடு. கஞ்சி, கூழ் மாதிரி பத்திய
ஆகாரங்களைக் கொடுத்து கண்ணும் கருத்துமா கவனி. அவர் காதில விழுகிற மாதிரி
விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லு. வீட்டிலுள்ள அனைவரும் முடிந்தவரை பகவான் நாமாவை
சொல்லுங்கோ. அவருக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பும். அவர்கிட்ட அனுசரணையா
நடக்கணும். பிடிக்காத விஷயத்தை அவர் பேசினாலும் சிடுசிடுக்க வேண்டாம்.
இத்தனை வயசுக்கும் மேல ஒருவர், தன்னை மாத்திக்க முடியுமா? அவரைத்
திருத்தும் எண்ணம் வேண்டாம். அன்பை விடச் சிறந்த மருந்து கிடையாது. மற்றபடி
வேளை வந்தால் எல்லோரும் இங்கிருந்து கிளம்ப வேண்டியது தான். ஆனால் பகவத்
சிந்தனையோடு வாழ உதவுறது நம் கடமை. இதை எல்லாம் கடைபிடிச்சா போதும்.
எதிர்காலத்தில் தாத்தாவின் அன்பும், ஆசியும் உன்னை வாழ வைக்கும்” என்று
சொல்லி மகாசுவாமிகள் திருநீறு கொடுத்தார். - திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|