|
வீர தீர சாகசத்தில் நாட்டம் கொண்ட இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் பயணம் மேற்கொண்டனர். நிறைய பொருள் சேர்த்தனர்; ஆனால், செலவாளிகள் என்பதால், சேர்த்த பொருட்கள் அனைத்தையும், மூன்று ஆண்டுகளில் செலவு செய்து விட்டனர். எனவே, அரண்மனைக்குத் திரும்புவதற்கு வெட்கப்பட்டு, வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களை தேடி, அவர்களது கடைக்குட்டிச் சகோதரன் முத்தரசன் புறப்பட்டான். சில நாட்களிலேயே, அண்ணன்களை கண்டுபிடித்து, அரண்மனை திரும்பும்படி கூறினான் முத்தரசன். நாங்கள் நிறைய பொருள் சேர்த்த பின் தான் வருவோம்... என்றனர். சரி அதற்கு நான் உதவுகிறேன்... என்றான். அட... நீ சின்னப்பயல்! எந்த வகையில் உதவுவாய்... என்று கூறினர். ஆனால், முத்தரசன் விடாது வற்புறுத்தினான்; எனவே, அவனையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். மூன்று பேரும், பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது, ஒரு எறும்பு புற்றைக் கண்டனர்; புற்றை உடைத்து பார்க்கலாம் என்ற எண்ணம், மூத்த இளவரசன் மனதில் ஏற்பட்டது. எறும்புகள் நமக்கு தொல்லை தருவதில்லையே... அப்படி இருக்க, எறும்பு புற்றை ஏன், இடிக்க வேண்டும்... என்று கூறினான், குட்டி இளவரசன் முத்தரசன்.
அவன் கூறியதை ஏற்று, மேலும் பயணத்தை தொடர்ந்தனர்; சற்றுதுாரம் சென்றதும், ஏரி ஒன்றில், பல வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. இந்த வாத்துகள், கொழு கொழு என்று இருக்கின்றன; இவற்றை வேட்டை யாடலாம்... என்று கூறினான், இரண்டாவது இளவரசன். அண்ணா... இந்த அழகிய வாத்துக்களை வேட்டையாட வேண்டாம்... என்று கூறினான் குட்டி இளவரசன். இம்முறையும், அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டனர், அண்ணன்கள் இருவரும் தான் சொல்வதைக் கேட்பதால், குட்டி இளவரசன் மகிழ்ச்சி அடைந்தான். தொடர்ந்து பயணம் செய்தனர். சற்றுத்துாரத்தில், ஒரு மரத்தில் பெரிய தேன் கூடு இருந்ததை கண்டனர். தீ வைத்து, அந்தத் தேனீக்களை விரட்டி, தேனை எடுத்துக் கொள்வோம்... என்றான், மூத்த இளவரசன். முன்பு இருமுறை சொன்னது போல், இப்போதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்; இம்முறையும், அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டனர் அண்ணன்கள். தொடர்ந்து நடந்து, ஒரு பெரிய அரண்மனையை கண்டனர். ஆனால், அங்கிருந்த பொருட்கள், ஆட்கள் அனைத்தும் கற்களாக இருந்தன. யாராவது உயிரோடு இருக்கின்றனரா, என்பதை அறிய, அரண்மனைக்குள் நுழைந்து தேடினர்; ஒரு அறையில் குள்ள மனிதன் ஒருவன் இருந்தான். அந்த குள்ள மனிதனிடம், அரண்மனையில் இந்நிலை எப்படி ஏற்பட்டது என்பது பற்றி விசாரித்தனர். அங்குள்ள அனைத்தும், ஒரு மாயாஜாலத்தால், கற்களாக மாறிவிட்டதாகவும், இயல்புக்கு கொண்டு வர, மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும், கூறினான் குள்ள மனிதன்.
என்ன அந்த மூன்று வேலைகள் விவரமாக சொல்லுங்கள்... என்றான் குட்டி இளவரசன். முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின், ஆயிரம் முத்துக்கள், காட்டில் தொலைந்து விட்டன; அவற்றை, சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும்; இல்லா விட்டால், அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறி விடுவார்... என்று, குள்ள மனிதன் கூறினான். உடனே, முத்துக்களை தேடுவதற்காக, மூத்த இளவரசர்கள் இருவரும் புறப்பட்டனர்; அவர்கள், முயற்சியில் தோல்வியுற்று கல்லாக மாறினர். அண்ணன்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே... என்று எண்ணி, மிகவும் வருத்தப்பட்டான் குட்டி இளவரசன். அவனது சோக நிலைமை கண்டு, குள்ள மனிதன் அவனுக்கு ஆறுதல் கூறினான். மேலும், மனச்சோர்வு கொள்ளாமல், முத்துக்களை தேட முயற்சி செய்... என்றான், குள்ள மனிதன். முத்துக்களை தேடிப் புறப்பட்டான் குட்டி இளவரசன்; அவன் எறும்புப் புற்றை அடைந்ததும், எறும்புகள் அவனைப் பார்த்து நன்றி தெரிவித்தன. உங்கள் பயணத்தின் போது, எங்கள் புற்றை உடைக்க உங்கள் அண்ணன் கூறியதை தடுத்து, எங்களை காப்பாற்றி உள்ளீர்; இப்போது, என்ன உதவி வேண்டும் கூறுங்கள் செய்கிறோம்... என்று நன்றி பெருக்குடன் கூறின அந்த எறும்புகள். இளவரசியின், ஆயிரம் முத்துக்கள் காட்டில் தொலைந்து விட்டன; அவற்றை நான் சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டுபிடித்தாக வேண்டும். எனக்கு உதவி செய்து, என்னையும், என் அண்ணன்களையும் காப்பாற்றுங்கள்... என்று வேண்டிக் கொண்டான், குட்டி இளவரசன்.
நன்றி மறவாத எறும்புகள், முத்துக்களை கண்டுபிடித்து, குட்டி இளவரசனுக்கு உதவின; அவற்றை குள்ள மனிதனிடம் சேர்த்தான் குட்டி இளவரசன். அடுத்து, ஏரிக்கு அடியில் தங்கச் சாவி உள்ளது; அதை எடுத்து வர வேண்டும்... என்று கூறினான், குள்ள மனிதன். ஏரியை நோக்கிச் சென்றான், குட்டி இளவரசன். அங்கே, ஏரியில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகள் அவனை கண்டதும் மகிழ்ச்சியுற்று, முன்பு தங்களை காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூர்ந்து, நன்றி தெரிவித்தன; தங்களை காண வந்த நோக்கம் பற்றி, கேட்டன. தங்கச் சாவியை எடுப்பதில், குட்டி இளவரசனுக்கு வாத்துகள் பெரிதும் உதவின; வாத்துகளுக்கு நன்றி தெரிவித்து, தங்கச் சாவியுடன் அரண்மனைக்கு திரும்பினான், குட்டி இளவரசன். குள்ள மனிதன், மாடி அறையை இந்தச் சாவியால் திறந்து உள்ளே செல்; அங்கு, மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பர்; அதில், இளமையான, இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும்; முடியாவிட்டால், கல்லாக மாறி விடுவாய்... என்று எச்சரித்தான். உள்ளே சென்றான் குட்டி இளவரசன்! இளவரசிகள் மூவரும், ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால், அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டனர் என்ற தகவலை தெரிவித்தான் குள்ள மனிதன். குட்டி இளவரசன் யோசித்துக் கொண்டிருந்தபோது, ராணித் தேனீ ஒன்று, உதவுவதாக கூறி அங்கு வந்தது; அது, ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து, பறந்து வந்தது. பின், குட்டி இளவரசனிடம், இளமையான, இனிமையான இளவரசி இவரே... இவரது உதட்டில், தேன் துளி ஒட்டியிருக்கிறது; இனிப்புகளில் மிகவும் இனிமையானது தேன் தான்... என்று, இளவரசியைச் சுட்டிக் காட்டியது தேனீ. அந்தக்கணமே, அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் உயிர் பெற்றனர்; மீண்டும், அங்கே மகிழ்ச்சி பொங்கத் துவங்கியது; மூன்று இளவரசர்களும் மூன்று இளவரசிகளை மணம் புரிந்தனர். குட்டி இளவரசனின் ஆற்றல், அன்பு, அயராத உழைப்பு ஆகியவற்றை எண்ணி, அண்ணன்கள் பெரிதும் புகழ்ந்து பாராட்டினர். தம்பி சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நல்லாட்சி புரிந்தனர்.
|
|
|
|