|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வரம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள்! |
|
பக்தி கதைகள்
|
|
மனைவி ஊரில் இல்லையென்பதால் அன்று இரவு உணவுக்கு அருகிலுள்ள ஓட்டலுக்குச் சென்றேன். மனதில் ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. ஓட்டல் ஊழியர் படபடப்புடன் ஓடிவந்தார். ‘சார் உங்க கார் வழிய மறிச்சி நிக்குதாம். எடுக்கச் சொல்றாங்க.” “ஓரமாகத்தானே நிறுத்தியிருந்தேன்?” “வண்டியை இப்படியா நிறுத்துவார்கள்?” என்று கோபத்துடன் கேட்ட அந்தப் பெண் மீது கோபம் வந்தது. வேகமாக வண்டிக்குள் ஏற முற்பட்டேன். “அவசரப்பட்டால் மனதில் விஸ்வரூபமாக நிற்கும் சந்தேகம் இன்னும் வேகமாக தலை விரித்தாடும்” என்றாள் அப்பெண். பச்சைப்புடவைக்காரியே தான். “இந்தச் சாலையில் நடந்தபடி பேசலாம் வா. சந்தேகத்தைச் சொல்லேன்...கேட்போம்.” “பஸ்மாசுரன் என்ற அசுரனுக்கு உங்கள் கணவர் சிவன் வரம் கொடுத்தார். அவன் யார் தலையில் கை வைத்தாலும் அந்த ஆள் எரிவான் என்பது தானே அந்த வரம். நன்றிகெட்ட அசுரன் சிவபெருமானின் தலையிலேயே கைவைக்க முயன்றான். நல்லவேளையாக விஷ்ணு அசுரனை மயக்கியதோடு அவனது தலையிலேயே கையை வைக்கச் செய்தார். சிவன் தப்பினார். இப்படி ஒரு வரத்தை சிவன் ஏனம்மா தர வேண்டும்?”
வெள்ளி நாணயங்களை கொட்டியது போல் கலகலவென சிரித்தாள் அன்னை. “என் கணவர் அக்னி வடிவம். அவரை எரிக்க நினைப்பது சூரியனைக் கொளுத்த முயல்வது போல முட்டாள்தனமான செயல். அது அவர் அரங்கேற்றிய ஒரு நாடகம். இறைவன் நடத்தும் நாடகத்தில் மனிதர்கள் படிக்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கும். இதில் என்ன பாடம் இருக்கிறது எனதெரிகிறதா?” தெரியவில்லை தாயே! அவளே தொடர்ந்தாள். “ஆசைப்படுவது தவறு என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?” “ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் பெரிய ஏமாற்றமாகி விடும். பின் வாழ்வே வெறுக்கும் என்பதால் தான்.. ”“நீ சொல்வது தான் தவறு” “உன் ஆசையில் போதுமான அளவு வலு இருந்தால் நீ ஆசைப்பட்டது எதுவானாலும் கிடைக்கும். நாம் ஆசைப்பட்டது நடந்துவிடும் என்பதால் எதையும் ஆசைப்படும் முன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆசைப்படுவதை முற்றிலும் தவிர்க்க முடிந்தால் இன்னும் நல்லது.” “இது ஒருபுறம் இருக்கட்டும் தாயே! பஸ்மாசுரனுக்கும் ஆசைக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?”
“சொல்கிறேன். தான் யார் தலை மீது கை வைக்கிறானோ அவர்கள் எரிய வேண்டும் என ஆசைப்பட்டான் பஸ்மாசுரன்” “அந்த ஆசை தீவிரமாக இருந்ததா?” “அதிதீவிரமாக இருந்தது. அந்த ஆசை நிறைவேறவே ஊன், உறக்கம் இன்றி தவம் செய்தான். அதனால் ஆசையும் நிறைவேறியது. ஆனால் என்ன ஆயிற்று? முடிவில் ஆசையே அவனுக்கு எமனாகியது. அழிந்தே போனான். வரம் பெற்றவுடன் அதைத் தன்னிடமே சோதிக்க முயற்சிப்பான் என்பது சிவனுக்கு முன்பே தெரியும். அப்படி அவன் செய்தால் அவன் சீக்கிரமே அழிவான் என்றும் தெரியும். அதனால் தான் என் கணவரும், என் அண்ணனும் சேர்ந்து ஒரு நாடகமாடினார்கள். பஸ்மாசுரன் தன் கையாலேயே அழிந்தான்” நான் யோசனையில் ஆழ்ந்தேன். “இன்றுகூடப் பலர் புகழ் பெற வேண்டும், கோடீஸ்வரனாக வேண்டும், பெரிய தலைவராக வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆசை நிறைவேறியும் விடுகிறது. பணத்தாலும், புகழாலும், பதவியாலும் வரும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளில் அவர்கள் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது தான் தாங்கள் ஆசைப்பட்டது தவறு என்பது புரிகிறது. பழையபடியே இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்குகிறார்கள்” அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அங்கே நடப்பதைப் பார்” அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். ஐஸ்லாந்து நாட்டில் அவரது நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அரங்கம் நிரம்பி விடும். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், வளமான வாழ்க்கை என மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அவருக்கு அரசியலில் திடீர் ஆசை வந்தது. அவர் இயல்பாகவே நல்லவர் என்பதால் அரசியல் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. அரசியல்வாதிகள் அவர் இருந்த நகரின் பொருளாதாரத்தைச் சீரழிக்கிறார்களே என்று கவலைப்பட்டார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்தார். அந்நகரின் மேயராகிப் பொருளாதாரத்தைச் சீரமைக்க விரும்பினார். ஒரு கட்சி ஆரம்பித்தார். அதற்கு “சிறந்த கட்சி” (ஞஞுண்t ணீச்ணூtதூ) என்று பெயரிட்டார். ‘நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொருவருக்கும் இரண்டு துண்டுகளும் ஒரு வெள்ளைக்கரடியும் இலவசம்” என அறிவித்தார். தான் நிச்சயம் தோற்றுவிடுவோம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயர் ஆனார்.
ஆரம்பத்தில் பதவி மகிழ்ச்சி அளித்தது. போகப் போகத்தான் பொறுப்பிலுள்ள சிரமங்கள் புரிந்தன. நான்கு ஆண்டுகாலம் மேயராக இருந்து மக்களுக்காக பாடுபட்டார். நகரின் பொருளாதாரம் நன்றாக முன்னேறியது. மக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. முகத்தில் நிரந்தரமாகக் குடியிருந்த சிரிப்பு மறைந்தது. எப்போதும் உற்சாகமாக பேசும் குணம் உள்ள அவர் ஈன சுரத்தில் பேசினார். அந்தப் பதவியில் இருந்தபோது நன்மையே செய்திருந்தாலும் தான் அந்தப் பதவிக்கு ஏற்ற ஆள் இல்லை என்பது புரிந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு அரசியல்வாதியாகும் ஆசை வந்தது. அதில் தீவிரமும் இருந்தது. உரிய காலத்தில் அந்த ஆசை நிறைவேறவும் செய்தது. ஆனால் அவருக்கு எந்த மனநிறைவும் கிடைக்கவில்லை. நிம்மதியின்றி நான்காண்டு காலம் தன் வாழ்க்கையைத் தொலைத்தார். “தங்களின் ஆசைகள் நிறைவேறாததால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படியும் சிலர் இருக்கலாம். ஆனால் ஆசை நிறைவேறியதால் நிம்மதி இழந்தவர்கள் தான் இன்னும் அதிகம். சாதாரண வேலையில் இருப்பவர்கள் வெறித்தனமாக ஆசைப்பட்டு அதன் காரணமாக பெரிய நடிகர்களாகி கோடிகளில் புரண்டாலும் ஒரு கட்டத்தில் பழைய மாதிரி சாதாரணமாக வாழ்ந்திருக்கலாமே என ஏங்குகிறார்கள். “ஆசையே படக்கூடாதா தாயே?”
“ஆசைகள் இல்லாமல் யாரும் வாழ முடியாது. ஆனால் பஸ்மாசுரன் மாதிரியான ஆசைகள் கூடாது. நாம் ஆசைப்பட்டது கிடைத்தால் நாம் எப்படி இருப்போம் என தெரிந்துகொண்டு ஆசைப்படுவது நல்லது. சரி நீ எதற்காக ஆசைப்படுகிறாய் சொல்” “கையில் கிளிதாங்கிய கோலக்கிளிக்குக் காலமெல்லாம் கொத்தடிமையாக இருக்க ஆசைப்படுகிறேன் தாயே” அம்பிகை மீண்டும் கலகலவென சிரித்தாள். அடுத்த நொடியில் அவள் மறைந்தும் போனாள்.
|
|
|
|
|