|
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகிலுள்ள ஊர் வேம்பத்தூர். இங்கு வந்த மகான் ஒருவர் சிறுவன் ஒருவனிடம் “தம்பி... தினமும் நான் உபதேசித்த சக்தி மந்திரத்தை ஜபித்து வா! அம்பிகையருளால் நலம் உண்டாகும்” என வாழ்த்திச் சென்றார். சிறுவனும் அப்படியே செய்ய ஜபத்தின் எண்ணிக்கை லட்சத்தை யும் தாண்டியது. அம்பிகையின் அருளுக்கு பாத்திரமானான் சிறுவன். அவன் வாய் திறந்தாலே கவிமழை பொழிந்தான். ’கவிராஜ பண்டிதர்’ என அச்சிறுவன் புகழ் பெற்றான். இனி நாமும் ’கவிராயர்’ என்றே குறிப்பிடுவோம். கவிராயருக்கு திருமணம் நடந்தது. அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த கவிராயரின் மனைவி, ’நான் வந்த வேலை முடிந்தது’ என்பது போல உடனே காலமானாள்.
“பராசக்தி! உன் திருவுள்ளப்படி உலகில் எல்லாம் நடக்கிறது” என்று அம்பிகையை சரணடைந்தார். தாயில்லாக்குறை போக்க தானே தாயாக இருந்து மகளை வளர்த்தார். இந்நிலையில் கவிராயர் ஆதிசங்கரரின் ’சவுந்தர்ய லஹரி’ என்னும் ஸ்தோத்திரத்தை தமிழில் பாடினார். அதில் சில தவறுகள் இருக்கவே, சாதாரணப் பெண்ணாக வந்த அம்பிகை. “கவிராயரே... இப்படி தவறாக பாடலாமா” எனக் கேட்டாள். அவரோ, “என் வாக்கில் எழுந்ததையே நான் பாடினேன்” என்றார். உடனே அப்பெண் “உன் நாவிற்கு கவிபாடும் ஆற்றல் இல்லாமல் போகட்டும்” என்றாள். பதறிய கவிராயர் அவளிடம் மன்னிப்பு கேட்க, அம்பிகை சுயரூபம் காட்டி பாடும் ஆற்றலை வழங்கி கைலாயம் சென்றாள்.
அங்கு சிவன் “தேவி... உன் பக்தன் கவிராயனுக்கு முதலில் ஏன் தண்டனை கொடுத்தாய்? அதற்கு பரிகாரமாக பூலோகம் சென்று ஆறுமாத காலம் அவனுடன் இரு. உன் கையாலேயே உணவு சமைத்துக் கொடு” என்றார். அம்பிகையும் அதை மறுக்கவில்லை. நாட்கள் சில கடந்தன. ஒருநாள் கவிராயர் காசிக்குச் செல்லத் தீர்மானித்தவராக தன் மகளைத் தங்கையின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “ நான் காசியாத்திரை செல்கிறேன். அதுவரை என் மகளை பாதுகாத்து வா” என்று தங்கையிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினார். ஊர் எல்லையைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறினார். அப்போது “அப்பா” எனக் குரல் கொடுத்தபடி கவிராயரின் மகள் ஓடி வந்தாள். அவளது கைகளில் சில சமையல் பாத்திரங்கள், சமைக்கத் தேவையான பலசரக்குகள் இருந்தன.
“என்னம்மா இது?” என வியப்புடன் கேட்டார் கவிராயர். “அப்பா... நானும் காசியாத்திரை வர விரும்புகிறேன். உங்களுக்கு உதவியாக சமைத்தும் கொடுப்பேன்” என்றாள். மகளின் அன்பு கண்டு மனம் நெகிழ்ந்தார் கவிராயர். செல்லும் வழியெல்லாம் மகள் உணவு சமைத்தாள். காசிக்குச் சென்ற அவர்கள் கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தனர். கோயிலுக்கு அருகிலுள்ள வளையல் கடையை கண்ட மகள் அப்பா! எனக்கு கண்ணாடி வளையல் வேண்டும்” எனக் கேட்டாள். காசு ஏதுமில்லாத கவிராயர் திகைத்தார். அருகில் நின்ற பக்தர் ஒருவர் விஷயம் புரிந்தவராக தமிழில் “குழந்தை வளையல் கேட்கிறதே என யோசிக்க வேண்டாம். நான் வாங்கித் தருகிறேன்” என்று காசு கொடுத்ததோடு, வளையல்கள் கையில் அணிவித்து விட்டு நகர்ந்தார். சிலநாள் காசியில் தங்கிய கவிராயர் மகளுடன் ஊருக்குப் புறப்பட்டார். வழிநெடுக மகள் உணவு சமைத்துக் கொடுக்க எளிதாகப் பயணம் முடிந்தது. ஊர் எல்லையை அடைந்ததும் கவிராயர் ஒரு மரத்தடியில் சற்று ஓய்வெடுக்க விரும்பினார். அப்போது“அப்பா... நான் வீட்டுக்குச் செல்கிறேன். நீங்கள் மெதுவாக வந்து சேருங்கள்” என்று சொல்லி நடந்தாள் மகள்.
இந்நிலையில் கவிராயரின் தங்கையின் வீட்டுக்கு ஒரு பெண் வந்தாள். “அம்மா! உன் அண்ணனான கவிராயர் ஊர் எல்லைக்கு வந்து விட்டார். தன் மகளுக்காக கண்ணாடி வளையல்களை காசியில் வாங்கியதாக சொல்லி என்னிடம் கொடுத்தார்” என்று சொல்லி அதை கொடுத்து விட்டுப் போனாள். அவளிடம் என்ன ஏது என்று விஷயம் கேட்பதற்குள் அங்கிருந்து சென்று விட்டாள். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கவிராயரிடம், தங்கை நடந்த விபரத்தை சொல்லி வளையல்களை காட்டினாள். தன் கண்களையே கவிராயரால் நம்ப முடியவில்லை. காசியில் வாங்கிய கண்ணாடி வளையல்களாக அவை இருந்தன. கவிராயர் தன் தங்கையிடம் காசியில் நடந்ததை ஒன்று விடாமல் எடுத்துச் சொன்னார். இந்நிலையில் தங்கை “ அண்ணா...நீ காசி கிளம்பியது முதல் உன் மகள் அழாத நாளில்லை. ஆறுதலாக நாலு வார்த்தையாவது அவளிடம் பேசு” என்றாள். ஏதும் புரியாமல் கவிராயர் வீட்டுக்குள் ஓடினார். தந்தையின் வரவைக் கண்ட மகள் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள். மகளின் வடிவத்தில் வந்த அம்பிகை தனக்காக உணவு சமைத்ததை உணர்ந்த கவிராயருக்கு கண்ணீர் பெருகியது. தையறிந்த குடும்பத்தினரும் மனம் நெகிழ்ந்தனர். கவிராயர் அம்பிகையின் மீது தமிழில் பாடிய சவுந்தர்ய லஹரி, வராகி மாலை என்னும் நூல்கள் இன்றும் கிடைக்கின்றன. அவருக்கு அருளிய அம்பிகையின் திருவடிகளை நாமும் சரணடைந்து நல்லருள் பெறுவோம்.
|
|
|
|