|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » விதிகளும் விதிமீறல்களும் |
|
பக்தி கதைகள்
|
|
அன்று ஐந்து மணிக்கு வருவதாகச்
சொல்லியிருந்த வாடிக்கையாளர் வரவில்லை. அடுத்த வாடிக்கையாளர் ஆறு மணிக்குத்
தான் வருவார். ஒரு மணிநேரம் பெரிதாக வேலை ஒன்றுமில்லை. என் உதவியாளர்
அறைக்குள் ஓடி வந்தார். “யாரோ டாக்டராம். உங்களை அவசியம் பாக்கணுமாம்”
“நான் யாருக்கும் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கலையே” “சொன்னேன். அஞ்சே நிமிஷம்
பாத்துட்டுப் போயிடறேன்னு சொல்றாங்க” “சரி வரச் சொல்லுங்க...” உள்ளே
நுழைந்த பெண்ணுக்கு நாற்பது வயது இருந்தால் அதிகம். நல்ல உயரம்; அதற்கேற்ற
உடல்வாகு; கருப்பை ஒட்டிய மாநிறம் அவளது களையான முகத்தை இன்னும் அழகாகக்
காட்டியது. எழுந்து நின்று வணங்கினேன். அவள் அமர்ந்த பின்னரே நான்
அமர்ந்தேன். “உங்களுக்கு என்ன பிரச்னைன்னு சொன்னா..” “எனக்கு என்ன பிரச்னை?
உன் பிரச்னையத் தீர்க்கத் தான் வந்திருக்கேன்” ஆகா... பச்சைப்புடவைக்காரி
ஆயிற்றே என எழுந்து காலில் விழுந்து வணங்கினேன். அருகில் தரையில்
அமர்ந்தேன். “ உலகில் எல்லாம் விதிப்படிதான் இயங்குகின்றன. மனிதர்களும்
வாழ்வில் சில விதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். சில நேரத்தில் விதிகளை
மீறவும் வேண்டியிருக்கிறது. விதிமீறல் பாவமா?”
அன்னையின் முகத்தில்
மலர்ந்த புன்னகைக்கு பிரபஞ்சத்தையே விலையாக கொடுக்கலாம். ஆனால் அது
முடியாதே... இந்த பிரபஞ்சத்திற்கு ஏற்கனவே இவள் சொந்தக்காரி ஆயிற்றே!
“விதிகள் பல நிலைகளில் உள்ளன. மேல்நிலையில் உள்ள ஒரு விதியைக்
கடைப்பிடிக்க, கீழ்நிலையில் உள்ள ஒரு விதியை மீறுவது தப்பில்லை. ஆனால்
கீழ்நிலை விதியை மீற, மேல்நிலை விதியை விட்டு விட்டால் அது மகா பாவம்!”
“இந்த மரமண்டைக்குப் புரியவில்லை தாயே...” “ஒருவர் தினமும் காலையில் எனக்கு
பூஜை செய்கிறார். பூஜையை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்
என்பது விதி. அவர் பூஜை செய்யும் போது ஒரு செய்தி வருகிறது. பக்கத்து
வீட்டுச் சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்தம் கொட்டுகிறது. உடனே
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பூஜை செய்பவரை உதவிக்கு அழைக்கின்றனர்.
அப்போது அவர் பூஜையைப் பாதியில் நிறுத்தினால் பாவம் ஆகாது. அடுத்த
மனிதரின் துன்பம் துடைக்கவேண்டும் என்ற மேல்நிலை விதியைக் காப்பாற்ற
தடைபடாமல் பூஜை வேண்டும் என்ற கீழ்நிலைவிதியை மீறுகிறார்.
அப்படி
செய்யாமல் யார் செத்தாலும் பரவாயில்லை நான் பூஜை செய்வேன் என
அடம்பிடித்தால் அது பாவம். மனித நேயம் என்ற உயர்ந்த விதியைக் காற்றில்
பறக்கவிட்டுப் பூஜை செய்வது என்ற கீழ்நிலை விதியைக் காப்பாற்றுதல் பாவம்.
அன்பையும் மனித நேயத்தையும் விடவும் சிறந்த வழிபாடு ஏதுமில்லை” மேலும் அவள்
“இந்த நிகழ்வு 78 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அங்கே பார்” என்றாள்.
1940ஆம் ஆண்டு. வசந்த காலம் தொடங்கிய நேரத்தில் ஹிட்லரின் நாஜிப்படைகள்
பிரான்ஸ் நாட்டை வடக்கிலிருந்து ஊடுருவத் தொடங்கியிருந்தன. அந்தப்
பகுதியில் ஏராளமான யூதர்கள் இருந்தனர். அவர்களைப் படையினர் பார்த்து
விட்டால் கதை கந்தல்தான். வயது வித்தியாசமின்றி பெண்கள்
கற்பழிக்கப்படுவர். ஆண்கள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவர்.
யூதர்கள் பயத்தில் பிரான்ஸ் நாட்டை விட்டே ஓட நினைத்தனர். பிரான்சை ஒட்டிய
நாடான போர்ச்சுகல்லுக்கு நாஜிப்படைகள் வரவில்லை. ஆனால் அங்கு செல்வதற்கு
தேவையான விசாவை பிரான்ஸ் நாட்டிலுள்ள போர்ச்சுகல் தூதரகம் தான் வழங்க
வேண்டும். இதன் மூலம் அகதிகள் பிரச்னை வெடிக்குமே என அஞ்சிய போர்ச்சுகல்
அரசு, பிரான்ஸ் நாட்டிலுள்ள தூதர் சூசா மெண்டிஸ்ஸுக்கு ’யாருக்கும்
போர்ச்சுகல் வருவதற்கான விசா வழங்கக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்தது. மரண
பீதியுடன் தன் அலுவலகத்தைச் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான யூதர்களைப்
பார்த்தார் மெண்டிஸ். அரசின் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டார்.
விண்ணப்பித்தவர்கள்
அனைவருக்கும் போர்ச்சுகல் நாட்டு விசா வழங்க முடிவு செய்தார். அவரும்,
அவரது உதவியாளர்களும் பசி, தூக்கம் பாராமல் மயக்கம் வரும் வரை
பணியாற்றினர். தொடர்ந்து முப்பதாயிரம் யூதர்களுக்கு விசா வழங்கி அவர்களை
மரணத்திலிருந்து காப்பாற்றினர். இதற்கிடையில் சூசா மெண்டிஸ் உத்தரவை
மீறுவதாக போர்ச்சுகல் அரசிற்கு செய்தி கிடைத்தது. உடனே ராணுவ வீரர்களை
பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி மெண்டிஸைக் கைது செய்து போர்ச்சுகல் கொண்டு
சென்றனர். விசாரணை என்ற பெயரில் சிறைத்தண்டனை அனுபவித்தார் மெண்டிஸ்.
ஆனால் அவர் கையெழுத்திட்ட விசாக்களை ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் மதித்தன.
தனிமனிதனாக இருந்து அதிகபட்சமான மனித உயிர்களைக் காப்பாற்றியவர் மெண்டிஸ்
என வரலாற்றில் இடம் பிடித்தார். விதி, அரசாணையை மீறி முப்பதாயிரம்
யூதர்களின் உயிர், மானத்தைக் காப்பாற்றினார் அந்த நல்ல மனிதர். அந்த
அதிகாரிக்குத் தான் செய்வது விதிமீறல் என்பது தெரியும். இதனால் தன் பதவி
பறிபோகும்; சோற்றுக்குக் கஷ்டப்பட நேரிடும் என்று கூடத் தெரியும்.
என்றாலும் ’நான் செத்தாலும் பரவாயில்லை; முப்பதாயிரம் மனிதர்களை சாகாமல்
தடுக்கிறேனே’ என்ற மனநிறைவு எழுந்தது.
என்னை நோக்கி ஆயிரம்
ஆண்டுகள் ஊசி மீது தவம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதை விட உயர்ந்த
பலனை அந்த அதிகாரிக்குக் கொடுத்தேன்” என்றாள். எழுந்து நின்று அவளை
மீண்டும் ஒருமுறை வணங்கினேன். “என்னப்பா உன் நேரத்தை இவ்வளவு எடுத்துக்
கொண்டேனே? பீஸ் ஏதாவது தர வேண்டுமா?” “ஆம். தாயே, நிச்சயம் தர வேண்டும்.
இது தணிக்கையாளர் அலுவலகம். இங்கே ஒவ்வொரு நிமிடமும் காசுதான்” அன்னையின்
புருவங்கள் ஆச்சரியத்தால் வளைந்தன. அப்போது அன்னை இன்னும் அழகாகத்
தோன்றினாள். “சொல்லப்பா எவ்வளவு தர வேண்டும்? எனக்கே பில் போடப்
போகிறாயாக்கும்?” “ஆமாம் தாயே. என்றென்றும் உங்கள் காலடியில் கொத்தடிமையாக
இருக்கும் பேறே எனக்குத் தரவேண்டிய பீஸ். அதுபோக இது மாதிரி நிகழ்வுகள்
வாழ்வில் வந்தால் எது மேல்நிலை விதி, எது கீழ்நிலை விதி என்று புரியவைத்து
அன்பின் வழியில் நடத்திச் செல்ல வேண்டும். இது தான் என்னுடைய பீஸ். அதை
உடனே தராவிட்டால் இங்கிருந்து போக விடமாட்டேன்” அன்னை கலகலவென சிரித்தாள்.
அவளுடைய அன்பைத் தாளாமல் அழுதேன்.
|
|
|
|
|