|
கபிலமுனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த இந்திரனுக்கு பால், பழங்கள் கொடுத்து உபசரித்தார் முனிவர். அதைக் கண்டு மகிழ்ந்த அவன் கேட்டதெல்லாம் தரும் அபூர்வமான சிந்தாமணியை பரிசளித்துச் சென்றான். அதன் பின் ஒருநாள், அப்பகுதிக்கு வேட்டையாட வந்த மன்னன் கணன் பரிவாரத்துடன் கபிலர் ஆஸ்ரமத்தில் தங்க நேர்ந்தது. மன்னனை வரவேற்ற முனிவர், அனைவருக்கும் சிந்தாமணியின் உதவியுடன் அறுசுவை உணவு அளித்தார். அதற்கான காரணத்தை அறிந்த கணன் “முனிவரே... உம்மிடம் சிந்தாமணி இருந்து ஆகப் போவது ஒன்றுமில்லை. நாடாளும் எம் போன்றவருக்கே இது தேவை” என்று வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டான். சிந்தாமணியை இழந்த முனிவருக்கு வருத்தம் உண்டானது. அப்போது “முனிவரே... விநாயகரைச் சரணடைந்தால் உமது பிரச்னை தீரும்” என வானில் அசரீரி ஒலித்தது. உடனே கபில முனிவர் கணபதி ேஹாமம் நடத்தி விநாயகரை வழிபட்டார். நேரில் தோன்றிய விநாயகர் மன்னன் கணனுடன் போர் புரிந்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார். அவரிடம் கபிலமுனிவர் “சுவாமி... கேட்டதை கொடுக்கும் சிந்தாமணி உம்மிடம் இருந்தால் உயிர்களுக்கெல்லாம் நன்மை உண்டாகும் என்பதால் எப்போதும் அது தங்களின் கழுத்தில் ஆபரணமாக இருந்தால் மகிழ்வேன்” என்றார். விநாயகரும் மகிழ்ச்சியுடன் ஏற்று ’சிந்தாமணி விநாயகர்’ என பெயர் பெற்றார்.
|
|
|
|