|
துன்பங்கள் அனைத்திற்கும், விடிவு காலம் உண்டு. சற்று முன்பின் ஆகலாம்; அவ்வளவு தான்! அதற்காகத் தற்கொலையில் ஈடுபடுவது, மிகவும் கொடுமையான செயல். ஞான நுால்களும், மகான்களும் பலவாறாகச் சொன்ன இதை, 19ம் நுாற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி விளக்குகிறது. தற்கொலையில் ஈடுபட்ட ஒருவரை, அம்பாளே தடுத்து, அருள்புரிந்த வரலாறு இது: திருநெல்வேலி பகுதியில் உள்ளது வள்ளியூர். இங்கு, பிரம்மாண்டமாக அமைந்த குடவரைக் கோவிலில், தேவியர் இருவருடன், முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். பத்தொன்பதாம் நுாற்றாண்டின் முற்பகுதியில், சிதம்பரநாதத் தம்பிரான் என்பவர் இருந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர், சிதம்பரம்.
அனைவரிடமும் அன்போடு, உறவு மனப்பான்மை கொண்ட இவர், துறவு மனப்பான்மையும் கொண்டிருந்தார்... நாம் பிறந்தது, அன்போடு அடுத்தவருக்கு உதவி செய்து, ஆண்டவன் அருளைப் பெறுவதற்காகவே... என்பது அவர் கொள்கை. என்ன செய்ய... நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றனவே. ஊழ்வினை உறுத்து வரும்- என்பதற்கு இணங்க, முற்பிறவியில் செய்த தீவினை, நோய் வடிவில் வந்து தாக்கியதைப்போல, சிதம்பரத்திற்குக் கடுமையான வயிற்று வலி உண்டானது. மருந்துகளை ஏற்ற உடம்பு, வியாதியை நீக்கவில்லை. நோயின் கொடுமை தாங்காத சிதம்பரம்,இருப்பதை விட, இறப்பதே மேல் எனும் எண்ணத்தோடு, கிணறு ஒன்றை நாடி, விழப்போகும் வேளை, குழந்தை வடிவில் வந்து தடுத்தாள், அம்பிகை. நில்... நில்... என்ன முட்டாள்தனம் இது... தற்கொலை செய்து கொள்வது பெரும்பாவம் என்பது தெரியாதா... பாண்டவர்களால் கட்டப்பட்ட, இந்தக் கோபுர வேலை இன்னும் மீதி உள்ளது. திருப்பணி செய்து, நிறைவேற்ற வேண்டியவன் நீ... இதைச் செய்... என்று அறிவுறுத்தினாள், அம்பிகை.
குழந்தையின் வடிவிலும், கனிவான கண்டிப்பு நிறைந்த பேச்சையும் கேட்டு, திகைத்தார் சிதம்பரம். அதே வினாடியில் சிதம்பரத்தின் வயிற்று வலியும் மறைந்தது; அம்பாளும் மறைந்தாள். நோய் தீர்ந்த மகிழ்ச்சியில், அம்பாள் சொன்ன இடத்தைத் திரும்பிப் பார்த்தால், மூன்று யுகம் கண்ட தேவி ஆலயமாக காட்சி அளித்தது. குழந்தை வடிவாக குரல் கொடுத்து, தடுத்துப்பேசி வாட்டம் தீர்த்தவள் அந்த அன்னையே என்பதை, உணர்ந்தார். அம்பாள் அருளால் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர், அம்பாளைத் துதித்து, 30 பாடல்கள் பாடினார். அந்த அருந்தமிழ்த் துதிப்பாடல்கள், திரியுகம் கண்ட தேவி மாலை என, வழங்கப்படுகின்றன. நோய் தீர்த்த அம்பிகையின் வாக்கை, திருப்பணி செய்து நிறைவேற்றினார், சிதம்பரம். நோயின் கொடுமையை விலக்குவதோடு, தெய்வ அருளால் துயரம் விலகும் என்பதையும் விளக்கி, தற்கொலை செய்து கொள்வது பாவம் என்பதையும் விளக்கும் இவ்வரலாறு, திருநெல்வேலி - வள்ளியூரில் இருந்து, 3 கி.மீ. தொலைவிலுள்ள, திரியுகம் கண்ட தேவி ஆலயத்தில் நடந்தது. நோய் தீர வேண்டுவோம்; திரியுகம் கண்ட தேவி, வேதனையை தீர்த்து வைப்பாள்!
|
|
|
|