|
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கப்பலில் சென்று கொண்டிருந்தான் இன்பன். காரணம் நேற்று வரை அவன் அடிமை, இன்றோ அவன் பணக்காரர். கடந்து வந்த பாதை அனைத்தும் அவன் மனதிற்குள் நிழலாடியது.
நகரில் உள்ள பணக்காரர் ஒருவரது வீட்டில் அடிமையாக வேலை செய்தான் இன்பன். முதலாளியின் விசுவாசியாக இருந்தான். எந்த அளவிற்கு விசுவாசம் என்றால் முதலாளி தன் சொத்துக்களை அவனுக்கு உயில் எழுதும் அளவிற்கு. முதலாளியின் காலம் முடிந்ததும் சொத்தையெல்லாம் விற்று விட்டு வேறொரு நாட்டுக்கு புறப்பட்டான். அமைதியாக சென்ற பயணத்தில் திடீரென ஒரு திருப்பம். திடீரென கடல் கொந்தளிக்கவே கப்பல் திண்டாடியது. என் கதி அதோகதி தான் என கலங்கினான் இன்பன். கடல்நீர் புகுந்து கப்பல் நொறுங்க, ஒரு கட்டையைப் பிடித்தபடி கடலுக்குள் மூழ்கினான்.
மறுநாள் காலை அமைதி திரும்பியது. ஒரு தீவின் கரையில் இன்பன் ஒதுங்கினான். முகத்தில் அலையடிக்கவே திடுக்கிட்டு விழித்தவன், தான் உயிரோடு இருப்பதை அறிந்து மகிழ்ந்தான். அசதியால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். திடீரென மேளச்சத்தம் காதை கிழித்தது. சற்று தூரத்தில் ஒரு கூட்டம் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் முதியவர் ஒருவர் நெருங்கி வந்து இன்பனின் கழுத்தில் மாலையிட்டார். உடனே மகாராஜா வாழ்க... மகாராஜா வாழ்க... என்று கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
புரியாமல் விழித்த இன்பனை அலேக்காக பல்லக்கில் ஏற்றி அரண்மனைக்கு அழைத்து சென்று, சிம்மாசனத்தில் அமரச் செய்தனர். மாலையிட்ட முதியவர் இன்பனிடம் ""நான் அமைச்சர் சாணக்கியன். ஆணையிடுங்கள் மகாராஜா... என்றார். ""ஆணை இருக்கட்டும். முதலில் இங்கு என்ன நடக்கிறது என சொல்லுங்கள் என்றான். ""இந்த தீவில் கரை ஒதுங்கும் புதியவரை ராஜாவாக ஏற்பது எங்கள் வழக்கம் ""அப்படி என்றால் எனக்கு முன்னால் இருந்த ராஜா எங்கே? என கேட்டான்.
""அவர் பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு சென்று விட்டார்
""காட்டிலா... எதற்கு?
""மகாராஜா... இங்கு ஒரு நடைமுறை உண்டு. ஐந்தாண்டு மட்டுமே ஒருவர் அரசாள முடியும். அதன் பின் காட்டிற்கு அனுப்பி விடுவோம். அங்குள்ள மிருகங்கள் அவரைக் கொன்று விடும் திடுக்கிட்ட இன்பன் ""இதிலிருந்து தப்பிக்க வழியில்லையா...
அமைச்சர், ""ஏன் இல்லை? ஆனால் இதுவரை இருந்த ராஜாக்கள் ஆடம்பரம் மற்றும் ஆணவத்தால் நாட்களை வீணாக்கி விட்டனர். நீங்கள் எப்படியோ தெரியவில்லை, இருந்தாலும் சொல்கிறேன். ஐந்தாண்டுக்குள் காட்டை மக்கள் வாழும் நாடாக மாற்றுங்கள். இங்கு ஐந்தாண்டுக்கு மட்டுமே நீங்கள் ராஜா. அங்கோ ஆயுளுக்கும் நீங்கள் தான் ராஜா என்றார். இன்பன் அமைச்சரை கட்டியணைத்து மகிழ்ந்தான். அவர் சொன்னபடியே ஆயுளுக்கும் ராஜாவாக திகழ்ந்தான் அந்த அடிமை!
|
|
|
|