|
“தாயே உங்களைக் குறை சொல்வது கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்றாலும் மனதிலிருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.” “உன் மனதில் இருப்பது என்னவென்று தெரியும். இருந்தாலும் உன் ஆற்றாமை தீர நீயே சொல்” “இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் தாங்கமுடியவில்லை தாயே! இந்த உலகை துன்பம் இல்லாமல் படைத்தால் என்னவாம்?” “படைப்புத் தொழில் பெரிய விஷயம். அதை பின்னால் பார்ப்போம். இப்போது உன் எழுத்தைப் பற்றிப் பேசுவோமா?” “காத்திருக்கிறேன் தாயே!”“நீ நூற்றுக்கணக்கில் கதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறாயே... அதில் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சொல் கேட்போம்” “இதோ தொடங்குகிறேன்” “அவசரப்படாதே...ஒரு நிபந்தனை. கதையில் பிரச்னை, வலி என எந்தக் கெட்ட விஷயமும் இருக்கக்கூடாது” “பிரச்னை இல்லையென்றால் உப்பில்லாத சாம்பாராக கதை சப்பென்று இருக்கும்” “சரியப்பா. பெரிய நாவல் வேண்டாம். இரண்டு பக்கச் சிறுகதை போதும்” “எதிர்மறை விஷயங்கள் இல்லாமல் எழுதினால் யாரும் படிக்கமாட்டார்கள் தாயே. நான் காலையில் எழுந்தேன். நடைப்பயிற்சி செய்தேன். காலை உணவு முடித்து அலுவலகம் சென்றேன். அங்கே நிம்மதியாக வேலை பார்த்தேன். மாலை வீடு திரும்பினேன் என்று எழுதினால் என் மனைவிகூட படிக்கமாட்டாள்” “பிரச்னைகள் இல்லாமல் ஒரு சிறுகதை கூட எழுத முடியாதாம். நான் பிரச்னை இல்லாத பிரபஞ்சம் படைக்க வேண்டுமாம். நன்றாக இருக்கு உன் நியாயம்.”நான் மவுனமானேன். “ குழந்தைக்குக் கதை சொன்னால் கூட அதில் திருட்டுக் குணமுள்ள காகம், தந்திரம் கொண்ட நரி, தீய எண்ணம் கொண்ட மந்திரவாதி போன்ற விஷயங்கள் இருக்கவே செய்யும்” அவள் வாகீஸ்வரியாயிற்றே! அவளிடம் பேசி ஜெயிக்க முடியுமா என்ன? “என்னிடம் பிரச்னை இல்லாத வாழ்வை வரமாகக் கேட்காதே. பிரச்னைகளைச் சந்திக்கும் திறமையை வரமாகக் கேள்.”“எல்லோருக்கும் பிரச்னை உள்ளது தாயே. தொடர்ந்து பிரச்னைகளை எதிர்கொள்வதால் என்ன கிடைக்கும்?”“நானே கிடைப்பேன். என் அருள் கிடைக்கும். உன் பிரச்னையை நேருக்கு நேர் சந்தித்தால், மனதில் இருக்கும் அன்பு குறையாமல் தக்க எதிர் நடவடிக்கை எடுத்தால் நானே உனக்குக் காட்சி தருவேன்.”
நான் அவளுடைய அழகு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். “இதை ஒரு சின்ன நிகழ்வு மூலம் விளக்குகிறேன். அங்கே நடப்பதைக் கவனி” என்றாள். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பள்ளி அது. அங்கு படிக்கும் மாணவர்களில் ஒருவன் ஜார்ஜ். யாரிடமும் பேசாமல் ஒதுங்கியிருப்பான். வகுப்பில் கவனம் செலுத்த மாட்டான். ஆசிரியைக்கு ஜார்ஜ் பிரச்னையாகி விட்டான். அந்தப் பள்ளியுடன் தொடர்புள்ள மனநல மருத்துவரிடம் ஜார்ஜ் குறித்து அவள் புகார் செய்தாள். மனநல மருத்துவர், “அந்த மாணவனின் குடும்ப பின்னணி தெரிந்தால் என்னால் சிகிச்சை செய்ய முடியும்.” என்றார். ஜார்ஜின் பின்னணியை ஆராய்ந்தனர். ஜார்ஜ் தன் தாயுடன் வசித்தான். அவன் தாய்க்கும் தந்தைக்கும் விவாகரத்து ஆகியிருந்தது. தந்தையாகவும் இருந்து தாயே அவனைப் பாசமுடன் வளர்த்தாள். அவள் அமெரிக்க ராணுவத்தில் வீராங்கனையாக இருந்தாள். அந்தச் சமயத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒரு படையெடுப்பைச் சமாளிக்க அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கு அனுப்பியிருந்தது. அதில் ஜார்ஜின் தாயும் போயிருந்தாள். தாயின் சகோதரி வீட்டில் ஜார்ஜ் தங்கியிருந்தான். மனநல மருத்துவர் அமெரிக்க ராணுவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஜார்ஜின் தாய் குறித்து விசாரித்தார். ஜார்ஜின் நிலை குறித்தும் தெரிவித்தார். அவன் தாய் நாடு திரும்பினால் நலமாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். வேலை முடிந்ததால் ராணுவம் ஒரு மாதத்தில் திரும்பிவிடும் என ராணுவ அதிகாரி குறிப்பிட்டார். இதற்கிடையே மனநல மருத்துவர், ஜார்ஜின் ஆசிரியை, பள்ளியின் முதல்வர் மூவரும் ஒரு சதித்திட்டம் தீட்டினர்.
அது ஒரு வெள்ளிக்கிழமை. ஜார்ஜ் வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே பள்ளிக்கு வந்தான். மனநல மருத்துவரும் அன்று பள்ளிக்கு வந்திருந்தார். அவரது சதித் திட்டம் அரங்கேறும் நாளாயிற்றே!மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளியிலுள்ள விசாலமான அறையில் உணவிற்காகக் காத்திருந்தனர். அப்போது கரடியின் முகமூடியை அணிந்த ஒருவர் வரவே, மாணவர்கள் பயந்து ஓடினர். “இந்தக் கரடிக்குப் பாவம் யாரும் இல்லையாம். நம்முடன் சாப்பிட வந்திருக்கிறது. உங்கள் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறீர்களா?” என ஆசிரியை அறிவித்தாள். மாணவர்கள் ஒரே குரலில் மறுத்தனர். ஆனால் கரடி, ஒவ்வொரு மாணவனின் அருகிலும் சென்று கெஞ்சுவது போல் சைகை செய்தது. எல்லோரும் “வேண்டாம் வேண்டாம்” என கத்தினர்.
“என் பக்கத்தில் உட்காராதே” என திட்டினர். கரடி ஜார்ஜிடம் வந்தது. ஜார்ஜ் கரடியை உற்றுப் பார்த்தான். தட்டில் இருந்த கேக்கை எடுத்துக் கரடியிடம் நீட்டியபடி, “பாவம் நீயும் என்னைப் போல் தனியாக இருக்கிறாய், இல்லையா?. உன் அப்பா அம்மா உன்கூட இல்லை எனத் தோன்றுகிறது. இது எவ்வளவு வேதனை என எனக்குத் தெரியும். மற்றவர்கள் உன்னை விரட்டுகிறார்களே என கவலைப்படாதே. உனக்கு நான் இருக்கிறேன். என் அருகில் அமர்ந்து கொள். இந்தச் சாப்பாட்டை இருவரும் பகிர்ந்து உண்ணலாம். பள்ளி முடிந்ததும் உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே என் பெரியம்மா மட்டும் இருக்கிறார்கள். நாம் இருவரும் சேர்ந்து விளையாடலாம்”மொத்தப் பள்ளியும் அந்தக் கரடியை பார்த்திருக்க, கரடியின் முகமூடிக்குள்ளிருந்து பலத்த விம்மல் சத்தம் கேட்டது. கரடி தான் அணிந்திருந்த முகமுடியைக் கழற்றியது. ஜார்ஜ் முகமூடிக்குள் இருந்த முகத்தைப் பார்த்தான். “அம்மா” என அலறியபடி அவளைக் கட்டிக் கொண்டான். ஜார்ஜை அள்ளியணைத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அவனது தாய். ஜார்ஜின் தாயை வேறு வேஷத்தில் வரச் சொல்லி அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது தான் மனநல மருத்துவர் வகுத்த சதித் திட்டம். அதன்பின் ஜார்ஜ் இயல்பு நிலைக்கு திரும்புவான் என அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. அங்கிருந்த அனைவரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. “அந்தச் சிறுவனின் தாய் கரடி முகமூடியை அணிந்து கொண்டு வந்தாள். நான் பிரச்னை, வலி, சோதனை, வேதனை என பல முகமூடிகளை அணிந்து கொண்டு உலகில் உலாவுகிறேன். பிரச்னையைத் துணிவுடன் எதிர்கொள்பவர்களுக்கும், அன்பு குறையாமல் பிரச்னையைச் சமாளிப்பவர்களுக்கும் நான் பச்சைப்புடவைக்காரியாகக் காட்சி தந்து அவர்களை ஆட்கொண்டுவிடுவேன். என்னப்பா புரிந்ததா?”
“தப்பையெல்லாம் எங்கள் மீது வைத்துக்கொண்டு உங்களைக் குறை சொன்ன இந்தப் பாவிக்குத் தக்க தண்டனை கொடுங்கள் அம்மா. கூடவே ஒரு வரமும்” “தண்டனையைப் பிறகு பார்க்கலாம். என்ன வரம் வேண்டும் சொல்”“தாயே நீங்கள் தான் எங்களைச் சுற்றி மனிதர்களாக, மேலே இருக்கும் வானமாக, பரந்து விரிந்த கடலாக, உயர்ந்து நிற்கும் மலையாக, பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நின்ற பரிபூரண ஆனந்தமாகப் பரிமளிக்கிறீர்கள். கோயிலில் இருக்கும் சிலைகளில் மட்டும் உங்களைக் காணாமல் அனைத்திலும் காணும் மனப்பக்குவம் தர வேண்டும் தாயே. நீங்கள் என்ன கொடுத்தாலும் - அது அமிழ்தாக இருந்தாலும் சரி, மரண வேதனையாக இருந்தாலும் சரி - அதை உங்கள் பிரசாதம் என்று நினைத்து பக்தியுடன் ஏற்கும் மனதையும் தரவேண்டும் தாயே.!” அன்னை கலகலவென சிரித்தாள். வாதத்தில் ஜெயித்தவள் சிரிப்பது நியாயம் தானே! ஆனால் இவளிடம் அடைந்த தோல்வி இதுவரை நான் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையும் விட அதிகம் தித்திக்கிறதே? என்ன செப்படி வித்தை செய்தாள் இந்த மாயக்காரி? |
|
|
|