|
கண் மூடி தியானத்தில் இருந்தார் துறவி. “சுவாமி...” என அழைத்தான் இளைஞன் ஒருவன். மவுனமாக இருந்ததால் மீண்டும் அழைத்தான் “சுவாமி... சுவாமி...” குரலில் வேகம் தெரிந்தது. துறவி கண் திறந்ததும் காலில் விழுந்தான் இளைஞன். “என்னப்பா உனக்கு வேண்டும்?” “நான் தங்களின் சீடனாக இருக்க விரும்புகிறேன்” “சீடனா? அதற்கு புலனடக்கம் வேண்டுமே...” “ அது என்னிடம் இருக்கிறதே சுவாமி” “ அப்படி தெரியவில்லையே...” “வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள் சுவாமி” “சரி... நாளை வா பார்க்கலாம்” என அனுப்பி வைத்தார் துறவி. மறுநாள் காலையில் துறவியைக் காண பரபரப்புடன் வந்தான் இளைஞன். பூட்டிய ஒரு பெட்டி, அதற்குரிய சாவியை அவனிடம் கொடுத்து, இதோ... இந்த பெட்டியை பக்கத்து ஊரிலுள்ள என் நண்பரின் வீட்டிற்கு சென்று கொடு. ஆனால் இதை திறக்க முயற்சிக்காதே” என்று சொல்லி அனுப்பினார். “இதெல்லாம் ஒரு சோதனையா” என நினைத்தபடி இளைஞன் நடந்தான். சிறிது தூரத்தில் மரத்தடியில் ஓய்வு எடுத்து உணவு சாப்பிட்டான். அவனால் சும்மா இருக்க முடியவில்லை. பெட்டியை குலுக்கிப் பார்த்தான். உள்ளுக்குள் ஏதோ ஒன்று நகர்வது போலிருந்தது. ஆர்வம் அதிகமாக சாவியால் பெட்டியை திறந்தான். உள்ளிருந்து எலி கீழே குதித்து ஓடியது. பழைய துணிகளும், வடை துண்டுகள் சிலவும் அதில் இருந்தன. துறவியின் சொல்லை மீறி தான் நடந்து கொண்டதைக் தெரிவிக்காமல் துறவியின் நண்பரிடம் பெட்டியை கொடுத்து விட்டுத் திரும்பினான். விஷயத்தை அறிந்த துறவி “இளைஞனே... உனக்கு புலனடக்கம் இல்லை என சொன்னேனே” என்றார். மேலும் அவனிடம், “மனம் ஒரு குரங்கு. எதைச் சொன்னாலும் நேர்மாறாகவே யோசிக்கும். விடாமுயற்சியால் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். குருவின் கட்டளைக்கு கீழ்ப்படிதலே ஆன்மிகத்தின் அடிப்படை பாடம்” என்றார். இளைஞன் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். துறவி பெருந்தன்மையுடன் அவனை சீடனாக ஏற்றார். |
|
|
|