|
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதியுடன் காட்சியளித்தார். நந்திதேவர் எதிரில் நின்றிருந்தார். திடீரென ஒரு சத்தம் எழவே, நந்தி அதிர்ச்சியுடன் சிவனைப் பார்த்தார். சிவனிடம் எந்த சலனமும் இல்லை. காரணம் சத்தமும் அவரே; சலனமும் அவரே. இருந்தாலும் நந்தியின் நிலையறிந்த சிவன் “சப்தம் கேட்டு குழம்பி விட்டீரா நந்திதேவரே...?”“ஆமாம்... சுவாமி”“பூலோகத்தில் இலங்கேஸ்வரன் ராவணன் பிறந்து விட்டான்” என்றார். “ஓ...” என்ற தலையசைத்தபடி பணியை தொடர்ந்தார் நந்திதேவர். சிறிது நேரத்தில் மீண்டும் சத்தம் கேட்டது. நந்திதேவர் சிவனைத் தேடி ஓடி வந்தார். “சுவாமி! இப்போது மீண்டும் சத்தம் வந்ததே... என்ன காரணம்?” “இப்போது இலங்கேஸ்வரன் ராவணன் இறந்து விட்டான். காலம் என்னும் நியதிக்கு உயிர்கள் கட்டுப்பட்டவை. அதில் பிறப்பு, இறப்பு என்பது சில காலம் வந்து போகும் மாயை என்பதை புரிந்து கொள். பதவி, பணம், புகழ் எதுவும் நிரந்தரமானது அல்ல” என்றார் சிவன். பூமியில் பிறக்கும் உயிர்கள் ’நற்றுணையாவது நமச்சிவாயவே’ என சிந்தித்து நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்தார் நந்திதேவர். |
|
|
|