ராஜசூய யாகத்தில் யார், யார், என்னென்ன பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதை பகவான் தீர்மானித்தார். துரியோதனனுக்கு பொக்கிஷ சாலை பொறுப்பும், கர்ணனுக்கு தானம் செய்யும் பொறுப்பும் தரப்பட்டது. துர்புத்தியுள்ள துரியன் மிகவும் சந்தோஷப்பட்டான். “கர்ணா! தானம் செய்யும் போது ஒன்றுக்குப் பத்தாக அள்ளி விடு; பொக்கிஷம் காலியாகிவிடும். யாகத்துக்கு நடுவில் பொக்கிஷம் காலியானால் அவமானம். நாம் சந்தோஷப்படலாம்” என்றான் துரியோதனன். கர்ணன் சம்மதித்தான். அவ்வண்ணமே பொருட்களை வாரி வாரி கொடுத்துக்கொண்டே இருந்தான். ஆனால் பொருள் மேலும் மேலும் குவிந்துகொண்டேயிருந்தது.
இவர்கள் திட்டம் பலிக்கவில்லை. என்ன காரணம்? துரியோதனன் கையில் தனரேகை இருப்பது பகவானுக்குத் தெரியும். பொக்கிஷத்தை அவனிடம் தந்தால் வற்றாது; வளரும். ஆதலால் அதை அவனிடம் ஒப்படைத்தார். கர்ணனுக்கு தானம் செய்வதில் விருப்பம் அதிகம். சளைக்கமாட்டான். அள்ளி அள்ளிக் கொடுப்பான். யாக நோக்கமே அதுதானே? அதனால் கர்ணனிடம் தானம் செய்யும் பொறுப்பைத் தந்தார். கெட்டவர்களின் திட்டம் நிறைவேறாது பகவான் சங்கல்பம் நிறைவேறியது. யாகம் பிரமாதமாக நடந்தது. மனித சங்கல்பத்தை மீறியது பகவத் சங்கல்பம். பகவத் சங்கல்பம் என்பது பகவான் போடும் திட்டம். அது அப்படியே நடந்துவிடும்!