|
அந்த கிராமத்தின் பரபரப்பான இடத்தில், கயிற்றின் மீது நடந்து வித்தை காட்டினான் கூத்தாடி முருகன். மக்கள் நின்று ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். பின் இரும்பு வளையம் ஒன்றைக் காட்டி, அதற்குள் நுழையப் போவதாக சொன்னான். மக்களை நன்றாக கைதட்டுமாறு சொல்லி விட்டு, உடனே கம்பிக்குள் நுழைந்து வெளியே வந்தான். கரகோஷம் அதிர்ந்தது. விரித்திருந்த துண்டில் சில்லரைக் காசுகள் விழுந்தன. தன்னையும் மறந்து முருகனின் வித்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் திருடன் ஒருவன்.
அடுத்து சிறிய வளையத்தை காட்டி அதற்குள்ளும் நுழைவதாக சொன்னான். மக்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. திருடனும் கண் கொட்டாமல் பார்த்தான். வழக்கம் போல முருகன் கைதட்டச் சொல்ல, இடமே அதிர்ந்தது. உடலை வளைத்து நுழைந்து வெளியே வந்து நிமிர்ந்து பார்த்தான். சில்லரைகள் குவிந்தன. வித்தை முடிந்ததும் மக்கள் கலைந்தனர். திருடனுக்குள் ஏதோ பொறி தட்டியது. முருகனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான்.
“இந்த வருமானம் போதுமா?”
“ வேறு வழியில்லையே...”
“ நல்ல வழி நான் சொல்கிறேன். ஆடம்பரமாக வாழ விரும்பினால் என்னுடன் வா” என்றான்.
அப்பாவி முருகனும் அவனை நம்பினான்.
“தினமும் இரவில் ஒரு உதவி செய்தால் போதும். ஆயிரம் ரூபாய் தருவேன்”
“வேலை கடினமானதா..?”
“மிக சுலபம் தான்”
“அப்படி என்ன வேலை?”
“உஷ்! சத்தம் போடாதே.” என்று சொல்லி காதில் கிசுகசுத்தான். நள்ளிரவு முருகன் பின் தொடர திருடன் புறப்பட்டான். ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி, “ முருகா... இங்கு திருடப் போறேன்” “என்ன திருடவா?” என்று படபடத்தான் முருகன். “ஆமாம்” “ஐயோ... இதெல்லாம் எனக்கு ஒத்து வராது” “நான் தான் திருடப் போறேன். நீ சின்ன உதவி செய்தால் போதும்” தயக்கமுடன், “என்ன?” “ஜன்னல் வழியா வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவை திறந்தால் போதும்” “ஜன்னல் வழியாவா” “இதை விட சின்ன வளையத்திற்குள் நுழைந்த உனக்கு இது ஒரு சிரமமா?”
படபடப்புடன் முருகன் ஜன்னலுக்குள் ஒரு காலை வைத்து உள்ளே நுழைத்தான். மெதுவாக தலையை நுழைத்து உடலை இழுத்து பார்த்தான். ஆனால் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்க உடல் சிக்குவது போல் உணர்ந்தான். வியர்க்க ஆரம்பித்தது.
திருடன் பரபரத்தான்.
“ஏன் முழிக்கிற...சட்டுனு உள்ளே போ...”
“ஒன்னும் புரியலை...என்னால் ஜன்னலுக்குள் போக முடியலை” இதை விட சின்ன வளையத்துக்குள் போக முடிந்ததே ... அது எப்படி?” “அப்போ பார்வையாளர் கைதட்டல்... உற்சாக ’டானிக்’ போல இருந்துச்சு. எனக்கே தெரியாம எதையும் செய்ய முடிஞ்சுது. ஆனா இங்க...” “அதுக்காக பத்து பேரை வரவழைச்சு கை தட்டவா முடியும்” “முடியலங்க... ஆளை விடுங்க” என்று தலையை வெளியே எடுத்தான் முருகன். வருத்தமுடன் பார்த்தான் திருடன். காகிதம் ஒன்று பறந்து விழுந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது – ’எரியும் விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் அவசியம்!’ |
|
|
|