|
“கடவுளே...எனக்காக ஒரே ஒரு தடவை காட்சி கொடுக்க மாட்டியா?” என்று உருகினான் ஒரு பக்தன். கடவுள் தோன்றினார்.
“கடவுளே... கடவுளே...” என்று காலில் விழுந்தான்.
“என்ன வேண்டும் எதற்கு என்னை அழைத்தாய்?”
“எனக்கு பொன்னும், பொருளும், வசதியும் வேண்டும்” என்றான்.
மூன்று தேங்காயை அவனிடம் கொடுத்து, “நீ என்ன வேண்டி உடைத்தாலும் அது உடனே கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார்.
’எனக்கு கோடி கோடியாய் செல்வம் வேண்டும்’ என நினைத்து முதல் தேங்காயை ஓங்கினான்.
“ஏங்க... எவ்வளவு நேரம் கூப்பிடறேன். அப்படி என்ன தான் பண்றீங்க...?” என்றபடி அடுப்படியில் இருந்து மனைவி வந்தாள்.
“ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது ஏன் குறுக்க பேசுற... உன் தலையில இடி விழ” என்று சொல்லவும், தேங்காய் உடையவும் சரியாக இருந்தது. இடி விழுந்து அவன் மனைவி கருகிப் போனாள்.
’என் மனைவி உயிர் பிழைக்க வேண்டும்’ என்று இரண்டாவது தேங்காயை உடைத்தான். உயிர் பிழைத்தாள். ஆனால் ’முகம் அசிங்கமாக இருக்கிறதே’ என்று சொல்லி புலம்பினாள்.
’என் மனைவிக்கு பழைய முகம் திரும்ப வேண்டும்’ என்று மூன்றாவது காயை உடைத்தான். கேட்டது கிடைத்தது.
ஆனாலும் பணக்காரன் ஆகிவில்லையே என்று வருந்தினான்.
’இருப்பதில் திருப்தி கொள்; எதை எப்போது உனக்கு தர வேண்டும் என்பதை நான் அறிவேன்’– கடவுளின் குரல் மட்டும் ஒலித்தது. அதன் பின் மனநிறைவுடன் வாழத் தொடங்கினான். |
|
|
|