|
புலி ஒன்று உறுமும் சத்தம் கேட்டதும் அந்த மூன்று இளைஞர்களும் திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தனர். உறுமும் சத்தம் இன்னும் அதிகமானது.
“செத்தோம்” என்றான் முதலாமவன்.
“சாக மாட்டோம்; கடவுள் இருக்கிறார். அவரை வேண்டுவோம்” என்றான் இரண்டாமவன். “கடவுளை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? இதோ இந்த மரத்தில் ஏறி ஒளிந்து கொள்ளலாம்” என்றான் மூன்றாமவன்.
முதலாமவன் மூடன். ஏனெனில் ’கடவுள் இருக்கிறார்’ என்ற நினைப்பே அவனுக்கு இல்லை. இரண்டாமவன் அறிவாளி.
’உயிர்களைப் படைத்து, காத்து அழிப்பவர் கடவுள் ஒருவரே’ என்ற நினைப்பு இருந்தது. ஆனால், மூன்றாமவனுக்கு மட்டுமே கடவுள் மீது உண்மை பக்தியும், தான் நேசிப்பவருக்கு துன்பம் தரக் கூடாது என்ற நல்லெண்ணமும் இருந்தது. அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்ற தெளிவும் இருந்தது. இந்த தெளிவு நம் எல்லோருக்கும் தேவை. கோயிலுக்கு சென்று கடவுளைத் தரிசித்து பக்தி செலுத்த பலருக்கும் தெரியவில்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று மனதில் எழும் ஆசைகளை மட்டும் வெளிப்படுத்துகிறார்களே தவிர அன்பை அவரிடம் வெளிப்படுத்துவதில்லை.
|
|
|
|