Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெட்டியும் சாவியும்
 
பக்தி கதைகள்
பெட்டியும் சாவியும்

மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் அமர்ந்திருந்தேன்.  இன்று பச்சைப் புடவைக்காரி எப்படி வரப்போகிறாள் என்று மனம் அலைபாய்ந்தது.

“எப்படிரா இருக்க?” கேட்டது பழைய நண்பன். பார்த்துப் பல வருடம் ஆகிவிட்டன. அவனுக்கு ஒரே மகன். சி.ஏ., படிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவனும்  உடனிருந்தான்.

“வாழ்த்துக்கள். உன் பையன் சி.ஏ., பாஸ் பண்ணிட்டான்ல?”
அவர் மகன் தலைகுனிந்தான். நண்பரும் பெருமூச்செறிந்தார்.

“அதுதாண்டா பிரச்னை. நம்மூரு மீனாட்சிகிட்ட புலம்பிட்டுப் போகலாம்னுதான் மும்பையிலிருந்து பறந்து வந்திருக்கேன்.”

“ஏன் என்னாச்சு?”

“இந்தத்  தரமும் பெயில் ஆயிட்டேன் அங்க்கிள். ”பையனின் குரல் பலவீனம் தெரிந்தது.

“இது பத்தாவது வருஷம்டா. பாவம் வருஷத்துக்கு ரெண்டு தரம் தேர்வு எழுதிக்கிட்டுத்தான் இருக்கான். உயிரக் கொடுத்து படிக்கறான். இவனுக்குப் படிப்பு தவிர வேற எதுவும் தெரியாது.
வீட்டுல ’டிவி’ கூட கிடையாது. இன்னமும் பெயில் ஆகிட்டேயிருந்தா என்ன அர்த்தம்? பச்சைப்புடவைக்காரி ஏன் கண்ணைத் திறக்க மாட்டேங்கறா?”

நல்ல கதையா இருக்கிறதே!  இந்திய சி.ஏ., தேர்வுகள் உலகளவில் கடுமையானவை. பிளஸ் – டூவில் பாடம் புரியாவிட்டாலும் மொட்டை கடம் அடித்துப் பாஸ் பண்ணலாம். சி.ஏ.,
அப்படியில்லையே! அதன் வெற்றிக்கு ஆயிரம் காரணிகள் இருக்கின்றனவே! பையன் சி.ஏ.,வில் தவறினால் பழியைப் பச்சைப்புடவைக்காரி மீதா போடுவார்கள்?

நண்பர் தொடர்ந்து புலம்பினார்.

“இந்த தை மாசம் வந்தா இவனுக்கு முப்பது வயசு முடிஞ்சிரும். இவன் எப்போ பாஸ் பண்ணி, எப்போ கல்யாணம் செஞ்சி வைக்கப்போறேனோ தெரியல. நான் என்ன செய்யறது நீயே சொல்லேன்.”

“நானா? எனக்கென்னப்பா தெரியும்? இன்கம் – டாக்ஸ்ல  பிரச்னைன்னா சொல்லு புஸ்தகத்தைப்  பாத்தாவது சரி பண்ணித் தர்றேன். இது வாழ்க்கைப் பிரச்னை. பச்சைப்புடவைக்காரி தான் சரி பண்ணனும்.”

“அவ எங்க பண்ணப்போறா? கண்ணை மூடிக்கிட்டுக் கல்லா இருக்காளே!”

இவர் பையன் பெயில் என்றால் பச்சைப்புடவைக்காரி கல்லா? வெற்றி பெற்றால் கருணைத் தெய்வமா? நல்லா இருக்கே நியாயம்!

நண்பன் கோயிலில் இருந்து கிளம்பினான். நடை சாத்தும் வரை நான் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். என் தாயைக் கல்லென்று சொல்லிட்டானே!  அழுகை பீறிட்டது. தளர்வான நடையுடன் புறப்பட்டேன்.  

படியைக் கவனிக்கவில்லை.  தடுமாறி விழப் போன என்னை யாரோ  தாங்கிப் பிடிக்க நிமிர்ந்தேன். மிடுக்கான பெண் காவல் அதிகாரி.  கைகூப்பி வணங்கினேன்.

“சன்னதியில் வணங்கினாயே!”

“தாயே நீங்களா?”

“நானே தான் வா பேசியபடி நடப்போம்.”

’அன்பே உருவான இந்தத் தாயைக் கல் எனச் சொல்ல எப்படி மனசு வந்தது?’ என வருந்தினேன்.

“அதையே எண்ணி மருகாதே. வா... இந்த வண்டியில் உட்கார்ந்து பேசுவோம்” போலீஸ் வேனில் ஏறினோம்.

“உன் மனம் மாற நான் ஒரு காட்சியைக் காட்டுகிறேன். இது வெளிநாட்டில் நடக்கும் விளையாட்டு. கவனித்துப் பார்.”

ஏதோ ஒரு விசையை அழுத்தினாள். முன்னால் பெரிய திரை உயிர் பெற்றது. ஒரு பிரமாண்டமான கல்லூரி வளாகம்.
மாணவர்கள் விளையாடக் காத்திருப்பது தெரிந்தது. ஒலிபெருக்கியில் அறிவிப்பாளர், “உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதையல் காத்திருக்கிறது. நம் வளாகத்தில் எங்கோ அது ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.  பூட்டப்பட்ட பெட்டிக்குள் அது இருக்கும். அதற்கான சாவி தரப்படும். உத்தேசமாக புதையல் எங்கே இருக்கும் என்பதற்கான குறிப்பும் தரப்படும். அதை வைத்து புதையலை கண்டுபிடிக்கவேண்டும். இன்று மாலைக்குள் புதையலைக் கண்டுபிடித்து வெளியில் எடுப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

மாணவர்கள் பரபரப்பாகி விட்டனர்.

மீண்டும் அறிவிப்பாளர், “ஒரு நிமிஷம். உங்கள் கையிலுள்ள சாவி உங்களுக்கான புதையலை மட்டுமே திறக்கும். நீங்கள் வேறொருவரின் புதையலை திறக்க முயன்றால், அந்த முயற்சி வெற்றி பெறாது. அந்த முயற்சி முரட்டுத்தனமாக இருந்தால் உங்களின் சாவி உடைந்து விடும். அதன்பின் உங்கள் பெட்டியைக் கூடத் திறக்க இயலாது. சாவி உடைந்தால் விளையாட்டை விட்டு வெளியேற நேரிடும்.

ஆட்டம் தொடங்கவே நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
பச்சைப்புடவைக்காரி ஏதோ விசையை அழுத்த காட்சி மறைந்தது.

“ஏன் நிறுத்தினீர்கள் தாயே? ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்குமே!”

“முட்டாளே... இது ஏதோ வெளிநாட்டு விளையாட்டல்ல.
உங்களின் வாழ்க்கை. உலகில் ஒவ்வொருவரையும் நான் திறமையுடன் படைத்திருக்கிறேன். அத்திறமையே உங்களின் கையிலுள்ள சாவி. அது எந்தப் பெட்டியைத் திறக்கும் என நீங்கள் தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கை. கோடானு கோடி மக்கள்  தேடினாலும் சிலரே தங்களுக்கான புதையலைக் கண்டுபிடிக்கிறார்கள்”

பல விஷயங்கள் புரிந்தன.

“சிலர் மற்றவருக்கான பெட்டியைக் கண்டு, ’ஆகா! இது நமக்கானதாக இருக்கக்கூடாதா!’ என நினைத்து, எப்படியாவது கையில் இருக்கும் சாவியால் திறந்து விடவேண்டும் என முயற்சித்து சாவியை உடைத்து விடுகிறார்கள். ஆனால் ஒரு வழியாக அவர்களுக்கான புதையலைக் கண்டும் பிடிக்கிறார்கள்.
என்ன பயன்?  சாவி தான் உடைந்துவிட்டதே! மற்ற எந்தச் சாவியாலும் அவர்களின் புதையலைத் திறக்க முடியாதே! அவர்களின் வாழ்க்கை புலம்பலில் முடிந்துவிடும்.”

“உன் நண்பனின் மகனுடைய பிரச்னைக்குத் தீர்வு என்னவென்று புரிந்ததா?”

“நன்றாகப் புரிந்தது தாயே. அவனுடைய புதையல் சி.ஏ., இல்லை. அதனால் அவனுடைய திறமை என்ற சாவியால் அதனைத் திறக்கமுடியவில்லை. நண்பனோ இதுவே உன் புதையல். இதை திறக்காமல் உன்னை விடமாட்டேன் என்று மிரட்டுகிறான்...”

“இதன் முடிவு என்னாகும் தெரியுமா?”

“இயற்கையாக இருக்கும் திறமையும், அறிவும் உடைந்த சாவியாக பயனில்லாமல் போகும். கடைசிவரை நிறைவில்லாத வாழ்க்கைதான் அவன் விதி.”

“இதை உன் நண்பனிடம் சொல்லாதே. அவனது மகனிடம் சொல். திருந்திவிடுவான்.”

“உங்கள் ஆணையம்மா. இந்தப் புதையல் வேட்டை கடினமானதாக இருக்கும் போலிருக்கிறதே?”

“உன் புதையல் எதுவென்பதற்குப் போதிய குறிப்பு தந்திருக்கிறேன். சிலருக்கு இயல்பாகவே இசை மீது ஈர்ப்பிருக்கும். சிலர் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பர்.  
சிலருக்குத் தோட்டம் இடுவதில் நாட்டம் இருக்கும்.  இயற்கையாக இருக்கும் விருப்பத்தை முன்னிறுத்தி  புதையலைத் தேடினால்  வெற்றி விரைவில் கிடைக்கும்.

“புதையல் பெட்டியைப் பார்த்தால் அதைத் திறக்க உன்னாலான முயற்சியைச் செய்யவேண்டும். வன்முறை மட்டும் கூடாது.
புரிகிறதா? உதாரணமாக சாமர்செட் மாம் என்ற ஆங்கிலேயர் ஓவியனாக வேண்டும் என எண்ணி பாரீஸ் போனார். ஓவியம் அவருக்கான புதையல் இல்லை என்று தெரிந்து கொண்டார். பின் நாடகத்தில் நடித்தார். நடிப்பும் அவருக்கானதாக தெரியவில்லை.
சி.ஏ., படிப்பில் சேர்ந்தார். அதுவுமில்லை. கடைசியாக மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். மருத்துவமும் அவருக்கான புதையல் இல்லை என்பது பிறகு தான் தெரிந்தது.

கடைசியில் எழுத ஆரம்பித்தார். எழுத்து தான் அவருக்கான புதையல், கையிலுள்ள திறமை என்னும் சாவி, எழுத்து என்னும் புதையலை எளிதாகத் திறந்தது. எழுத்தால் அவருக்கும் மகிழ்ச்சி. வாசகர்களுக்கு அதை விட மகிழ்ச்சி.”

என்ன அழகாகச் சொல்லி விட்டாள்! வாகீஸ்வரி ஆயிற்றே!

“சரி உன் புதையல் என்னவென்று கண்டு கொண்டாயா? எழுத்தா?  கணக்கா? இல்லை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாயா?”

“இதில் எதுவுமில்லை தாயே. என் புதையல் நீங்கள் தான். உங்கள் அருள் தான். உங்களின் மீது பக்தி செய்யவே என்னைப் படைத்தீர்கள் எனக் கண்டுகொண்டேன் தாயே. உங்களுக்குக் காலமெல்லாம் அடிமையாக இருக்கும் வேலை தான் நான் கண்டெடுத்த புதையல். அதை நீங்கள் கொடுத்த பக்தி என்னும் சாவியால் திறந்து விட்டேன். இனி நீங்கள் என்ன பணி கொடுத்தாலும் சரி அதைச் செய்வேன். காவியம் படைப்பதாக இருந்தாலும், கழிப்பறை சுத்தம் செய்வதாக இருந்தாலும், உங்கள் அருளால் அன்புடன், அதைச் செய்வது தானம்மா எனக்கான புதையல்.”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar