|
பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து போரில் ஈடுபட்ட சோழமன்னர் ராஜராஜருக்கு சலிப்பு வந்தது. அவருக்குள் இருந்த சிவபக்தி வேறுவிதமாக சிந்தித்தது. சந்திர, சூரியர் உள்ள வரை உலகில் புகழ் நிலைக்க திருப்பணி செய்ய விரும்பியது. ஏழுபனை உயரத்திற்கு பெரிய கோயில் கட்ட முடிவு செய்தார். சாத்தியமில்லை என அனைவரும் மறுத்தனர். கோயில் பணியில் ஈடுபட்டால் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படும் என இளவரசர் ராஜேந்திரனும் தயங்கினார்.
இந்நிலையில் ராஜராஜரின் மனதில் ’திருப்பணி செய்வது சிவனின் எண்ணம்; அதனால் அவனே முன்நின்று முடித்து வைப்பான்’ என்ற எண்ணம் எழுந்தது. பெருந்தச்சரான குஞ்சரமல்லர் மன்னரின் எண்ணத்தை ஓவியமாக்கினார். அதைப் பார்த்தவர்கள் அதன் பிரம்மாண்டத்தை எண்ணி ஆச்சரியப்பட்டனர். இக்கோயிலால் சோழநாடு மங்காத புகழுக்குச் சொந்தமாகும் என மகிழ்ச்சி ஏற்பட்டது. சிற்பிகளும், அடிமைகளும் தஞ்சையில் குவிக்கப்பட்டனர். கல் எடுக்க நார்த்தாமலை தேர்வு செய்யப்பட்டது. கற்களைச் சுமந்து வர காளை மாடுகள், குதிரைகள், யானைகள் வரவழைக்கப்பட்டன. ஏழாண்டுகளில் கோயில் முழுவடிவம் பெற்றது. கோபுரம் பெரிதாகவும், கருவறை விமானம் சிறிதாகவும் கட்டுவது மரபு. ஆனால் இங்கு கோபுரத்தை விட பெரிதாக விமானம் ஏழுபனை உயரத்திற்கு கட்டப்பட்டது. அதாவது 210 அடி. இந்த உயரத்திற்கு கற்களை கொண்டு செல்ல கருவறையைச் சுற்றிலும் மண்ணால் வளைவாக பாதைகள் அமைக்கப்பட்டன.
கட்டடக்கலை அசுரவளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்திலும் கூட தஞ்சைப் பெரியகோயில் பெரிய அதிசயமாகவே உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் போக்குவரத்து எப்படி நடந்திருக்கும், யார், என்னென்ன வேலைகள் செய்திருப்பார்கள் என்பதை சிந்தித்தால் தலை சுற்றும். இறுதியில் மாமன்னர் ராஜராஜ சோழரின் திருவடியில் சரணடையும்.
கோயில் கட்டியதும் அதற்காக உழைத்த ஒவ்வொருவரின் பெயரும் கல்வெட்டில் பொறிக்க உத்தரவிட்டார் மன்னர். ஆனால் சாதனை படைத்த அவரோ, ’இக்கோயிலை கட்டியவன் நான் இல்லை; சிவன் தான் கட்டினான்’ என தலைக்கனம் இன்றி சிவனை அடிபணிந்தார். இதனால் ’சிவபாத சேகரன்’ என பெயர் பெற்றார். மக்கள் அவரை ராஜராஜராக எப்போதோ அங்கீகரித்தாலும், சிவன் அங்கீகரித்தது இந்த இடத்தில் தான். காரணம் எல்லாம் எனை ஆளும் சிவன் செயல் என உணர்ந்து பணிவுடன் இருந்தார் அல்லவா... அது போல மாறி விட்டால் நீங்களும் ’ராஜராஜர்’ தான்! |
|
|
|