|
குருகுலம் ஒன்றில் மாணவர்கள் பலர் கல்வி கற்று வந்தனர். அதில் ஒரு மாணவன், பலரின் பொருட்களை திருடி வந்தான். ஒரு நாள் பிடிபட்டான். அவனை ஆசிரியர் முன் நிறுத்தினர். “திருடுவது குற்றம் எனத் தெரியாதா?” என ஆசிரியர் கேட்டார். ’இனி திருடமாட்டேன்’ என சொல்லவும் ஆசிரியர் மன்னித்தார். ஒரு வாரத்தில், மீண்டும் அவன் கைவரிசை காட்ட மற்றவர்கள் அதிர்ந்தனர். அவனை வெளியேற்றும்படி வேண்டினர். ஆனால் ஆசிரியர் ’திருடுவது குற்றம் என உனக்குத் தெரியாதா?” என கேட்டார். “திருடிய இவன் போகாவிட்டால் நாங்கள் வெளியேறுவோம்” என குரல் எழுப்பினர்.
ஆசிரியரும் “நல்லது. செல்லுங்கள்” என்றார் அமைதியுடன்.மாணவர்கள் அதிர்ச்சியால் திகைத்தனர். அப்போது ஆசிரியர் “நல்லது, கெட்டதை விளங்கச் செய்வதே கல்வி. அதை உணர்ந்த நீங்கள் எங்கு சென்றாலும் சரியான வழியில் நடப்பீர்கள் என நான் நம்புகிறேன். ஆனால் திருடுவது குற்றம் என்பதை அறியாத இவனுக்கே இன்னும் போதிக்க வேண்டியிருக்கிறது” என்றார். ஆசிரியரின் உயர்ந்த உள்ளம் கண்ட மாணவர்கள் வாயடைத்து நின்றனர். திருடிய மாணவனோ “ஐயா... நீங்கள் அன்பு காட்டும் என் தெய்வம்.” என்றான். |
|
|
|