|
’எல்லாம் சிவமயம்’ என்பது உண்மையா? என இளைஞன் ஒருவனுக்கு சந்தேகம் எழுந்தது. துறவிகளை சந்திக்க முடிவெடுத்தான். “பிரம்ம ஞானியான ஏகநாதரைச் சந்தித்தால் உன் சந்தேகம் தீரும்” என்றார் ஒருவர். பல கோயில்களில் தேடி அலைந்த அவன் கடைசியாக, ஒரு சிவன் கோயிலுக்குள் நுழைந்தான். அங்கு கருவறையை நோக்கி கால் நீட்டியபடி ஏகநாதர் தூங்குவதைக் கண்டான். “சிவனை அவமதிக்கும் இவரா பிரம்மஞானி” என யோசித்தான்.
சிறிது நேரத்தில் ஏகநாதர் கண்விழித்தார். அவரிடம், “ஞானிகள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லவா கண் விழிப்பார்கள்? நீங்கள் நண்பகல் வரை தூங்குகிறீர்களே....” எனக் கேட்டான் இளைஞன். “எனக்குள் இருக்கும் பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) தூக்கம் வந்த போது தூங்கினேன். விழிப்பு வந்ததும் விழித்தேன். பிரம்மம் விழிக்கும் நேரம் தானே பிரம்ம முகூர்த்தம்” என்றார் ஏகநாதர். “அதுவும் சரி தான்...சிவலிங்கத்தை நோக்கி கால்நீட்டி அவமதிக்கலாமா.....” என்றான் இளைஞன். “சிவன் இல்லாத இடமே இல்லை. காண்பது அனைத்தும் சிவமே. நீயும், நானும் சிவம் தான். யாராலும் அவரை அவமதிக்க முடியாது” என்றார் ஏகநாதர். மனப்பக்குவம் இருந்தால் ’எல்லாம் சிவமயம்’ என்பதை உணர முடியும் என்பது புரிந்தது. |
|
|
|