|
துறவி ஒருவரிடம் அரசர், “சுவாமி.. எனக்கு மந்திர உபதேசம் செய்ய வேண்டும்” என்றார். “அதற்கெல்லாம் தகுதி வேண்டுமே” “என்ன தகுதி?” “சொன்னால் உனக்கு புரியாது” “ இப்போது உபதேசம் செய்ய முடியுமா முடியாதா?” என்றார் அரசர். மறுத்தார் துறவி. அரண்மனைக்கு திரும்பிய அரசர் அமைச்சரிடம், “உடனடியாக நான் உபதேசம் பெற்றாக வேண்டும்” என ஆவேசித்தார். பண்டிதர் ஒருவர் மூலம் மன்னர் உபதேசம் பெற ஏற்பாடு செய்தார் அமைச்சர். அதற்கு துறவியும் வரவழைக்கப்பட்டார். “ தகுதி இல்லை என மறுத்தீர்களே... நீங்கள் இல்லாவிட்டால் உபதேசம் பெற முடியாதா” என கர்ஜித்தார் அரசர். புன்னகைத்த துறவி, “சரி... தங்களை சோதிக்க விரும்புகிறேன்; நான் சொல்வதைச் செய்வீர்களா?” தலையசைத்தார் அரசர். “இப்போது சிம்மாசனத்தை விட்டு கொஞ்ச நேரம் இறங்கி வாருங்கள்” என்றார். அரை மனதுடன் கீழிறங்க, வேகமாக படியேறிய துறவி அதில் அமர்ந்தார்.
அதிர்ச்சியுடன் அரசர், “துறவியே...என்ன செய்கிறீர்கள்?” “நான் சொல்வதை செய்வதாக சம்மதித்தீர்களே”அமைதி காத்தார் அரசர். “இவரை கைது செய்யுங்கள்” என்று மன்னரைக் காட்டியபடி உத்தரவிட்டார் துறவி. வீரர்கள் திகைத்தனர். அப்போது அரசர் ஆவேசமுடன், “வீரர்களே... இந்த மதிகெட்ட துறவியைக் கைது செய்யுங்கள்” என்றதும் அவரைச் சூழ்ந்தனர். ’என்ன அரசே... நான் சொல்லாததை எல்லாம் செய்கிறீர்களே...” என்றார் துறவி. வீரர்களும் விலகிச்சென்றனர். “இப்போது என்ன தான் சொல்கிறீர்கள்?” என்றார் அரசர். “நடந்ததை கவனித்தீர்களா அரசே... நாம் இருவர் சொன்னதும் ஒரே விஷயம் தான் என்றாலும், நான் சிம்மாசனத்தில் அமர்ந்து சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் கீழே நின்று சொன்னாலும் மதிக்கின்றனர்” மன்னனுக்குள் பொறி தட்டியது. துறவியை உற்று கவனித்தார். “ என்ன சொல்கிறோம் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதே முக்கியம். குழப்பமாக இருக்கிறதா? உபதேசம் செய்யும் தகுதி எனக்கு இருந்தாலும் அதை பெறும் தகுதி உம்மிடம் இல்லை. யாரோ ஒரு பண்டிதர் மூலம் எதையோ தெரிந்து கொள்வது உபதேசம் ஆகாது” தவறை உணர்ந்த அரசர் துறவியை வணங்கினார். குறிக்கோளை அடையும் தகுதியை வளர்த்துக்கொண்டால் கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறும். |
|
|
|