|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » திருத்திய கதைகள் |
|
பக்தி கதைகள்
|
|
இன்று கோயிலுக்குப் போவதா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டிமன்றமே நடந்தது. கடந்த நான்கு நாட்களில் தான் எத்தனை அழைப்புகள்! எத்தனை மின்னஞ்சல்கள்! இந்தத் தொடரைப் படித்த பலரும் தங்கள் வேதனையைக் கொட்டியிருந்தார்கள். 33 வயதாகியும் மணமாகவில்லை என ஒருபெண் வேதனைப்பட்டாள். ஐம்பது வயதாகும் தன் கணவனுக்கு முற்றிய நிலையில் புற்று நோய் என்று ஒருபெண் அழுதிருந்தார். தன் மகனின் திருமணம் விவாகரத்தில் முடியும் போலிருக்கிறது என ஒருவருக்கு வருத்தம். பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படி கல்மனதுக்காரியாக இருக்கிறாள்? யோசித்த படியே கோயிலுக்குப் போக ஆட்டோ தேடினேன். அப்போது ஒரு ஆட்டோ வேகமாக அருகில் வந்து நின்றது. “மீனாட்சி கோயிலுக்குப் போகணும்ப்பா” “அப்பா இல்ல அம்மா”
பெண் ஆட்டோ ஓட்டுனர். வழக்கமான வாடகை தான் கேட்டாள். ஆட்டோ கிளம்பியது. “தப்பான வழியில போறீங்கம்மா...கோயிலுக்கு இதுவா வழி” “கோயிலுக்கு போறதா யார் சொன்னாங்க?” “அப்புறம்?” “பச்சைப்புடவைக்காரி கல்மனதுக்காரி என நீயும் முடிவு பண்ணிவிட்டாயா?” “தாயே நீங்களா?” ஆட்டோ நின்றது. ஆள் நடமாட்டமில்லாத இடம். அவளது காலடியில் அமர்ந்தேன். “சில விஷயங்களைச் சொல்லி புரிய வைக்க முடியாது. செயல்முறை விளக்கம் தான் சரிப்படும். கண்ணை மூடிக்கொள்” செய்தேன். வேறொரு உலகில் நுழைந்தேன். அழைப்புமணி ஒலித்தது. இரவு ஒன்பது மணி இருக்கும். இந்த நேரத்தில் யார் என்ற எரிச்சலுடன் வீட்டுக் கதவைத் திறந்தேன். இளம் எழுத்தாளர் குமார் நின்றிருந்தார். “சார் என் கதை பெரிய வாரப்பத்திரிகைல வந்தேயாகணும். நானும் எவ்வளவோ எழுதிப் பாத்துட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. நான் எழுதின ரெண்டு கதையோட இப்போ வந்திருக்கேன். அதைக் கொஞ்சம் திருத்திக் கொடுத்தீங்கன்னா...” “உங்கிட்ட எத்தனை தரம் சொல்லியிருக்கேன், நான் இந்த வேலை பண்றதில்லைன்னு? என் புஸ்தகத்த எழுதறதுக்கே எனக்கு நேரமில்லை. இதுல உன்னோட கதையை...” பேசி முடிப்பதற்குள் மீண்டும் காலில் விழுந்தவன்,“சார்...
இந்தக் கதை பெரிய வார இதழ்ல வந்தா போதும்... யாமினி என் காதலை ஏத்துக்குவா சார். நீங்க எவ்வளவோ காதல் கதை எழுதியிருப்பீங்க...ஆனா இப்பத்தான் ஒரு நிஜமான காதல் கதையை சுபமா முடிச்சி வைக்க வாய்ப்பு கெடைச்சிருக்கு. என் உயிரைக் கேட்டாலும் தரேன் சார். எப்படியாவது உதவி பண்ணனும் சார்.”மனம் இளகியதால் தலையசைத்தேன். “எக்காரணம் கொண்டும் என் பெயர் வெளியே வரக் கூடாது. கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்க எனக்கு உரிமை உண்டு. இரண்டில் ஒன்றாவது தேறுமா என பார்க்கிறேன். இல்லாவிட்டால் இரண்டையும் கிழித்து விடுவேன்” என்றேன். சம்மதித்த குமார் கத்தையாக அச்சடித்த தாள்களை கையில் திணித்துச் சென்றான். இரண்டு நாள் கழித்து கதைகளைப் படிக்க உட்கார்ந்தேன். சிறிய கதையை முதலில் படித்தேன். எழுத்துப்பிழைகளை திருத்தினேன்.
சில வரிகளை முழுமையாக அடித்தேன். சில வரிகளை மாற்றியும், புதிதாக சில பகுதிகளை சேர்த்தும் எழுதினேன். ஒரே கிறுக்கல் மயம். இருந்தாலும் சிரமப்பட்டுப் படித்தேன். அப்படியும் தேறவில்லை. இதை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்க முடியாது என்பதால் கிழித்து விட்டேன். அடுத்த கதையை படித்தேன். கதையின் கரு நன்றாக இருந்தது. இளம்பெண் ஒருத்தியின் காதல் தோல்வியை விவரிக்கும் கதை. அழகான பணக்கார இளைஞனைக் காதலித்து தோற்று, பின்னர் தொழிலாளி ஒருவனை மணந்த பெண்ணின் கனவுகள், ஆற்றாமையை விவரிக்கும் கதை. கதையின் நடை சரியாக இல்லை. பல இடங்களில் மாற்ற வேண்டியிருந்தது. பல வரிகளை சிவப்பு மையால் அடித்தேன். கதாநாயகி கனவு காணும் போது நடுவே ஒருபக்கம் ஆபாச வர்ணனையாக இருந்ததால் அதை மட்டும் கிழித்து விட்டேன். மீதி பகுதியை திருத்தி மெருகூட்டினேன். ஓரளவு திருப்தி வந்தது. குமாரை வரச் சொல்லி கதையை கொடுத்து அனுப்பினேன். இரண்டு மாதம் கழிந்த பின், ஒருநாள் குமார் இளம்பெண் ஒருத்தியுடன் வீட்டுக்கு வந்தார். குமாரின் கையில் பிரபல வாரப்பத்திரிகை இருந்தது. “உங்களால தான் சார் என்கதை பத்திரிகையில வந்தது. இந்த அழகு தேவதையும் எனக்கு கெடைச்சா. கிழக்க பாத்து நில்லுங்க சார். கும்பிட்டுக்கிறோம்.”என் முகத்தில் சிலீர் என எதுவோ பட்டது.
“மாயா உலகில் சஞ்சரித்தது போதும். நிகழ்காலத்திற்கு வா” ஆட்டோ ஓட்டுனர் வடிவில் பச்சைப்புடவைக்காரி இருந்தாள்.நடந்தது கனவா? இதன் மூலம் என்ன சொல்லப் போகிறாள்?“உன்னை மாதிரி இரக்கம் இல்லாதவனை நான் பார்த்ததில்லையப்பா. என் கோயிலில் இருக்கும் கற்களை விட, உன் இதயம் பலமடங்கு கடினமாக இருக்கிறதே...” “என்ன சொல்கிறீர்கள் தாயே? ஏதாவது தப்பு செய்துட்டேனா?” “சில நேரங்களில் கடுமை காட்டுவது தப்பாகாது” “இந்த மரமண்டைக்குப் புரியலையம்மா” “என்னைக் கல்நெஞ்சுக்காரி எனத் திட்டினாயே? குமாரின் கதைகளை எப்படி திருத்தினாய் ஞாபகம் இருக்கா?” முதல் கதையில் பல வரிகளை அடித்தாய்; சேர்த்தாய்; மாற்றினாய். இறுதியில் சரிப்படாது என கிழித்து வீசினாய். கதையை ஒரு மனிதனாகக் கற்பனை செய்து கொள். முதலில் அவனின் ஒரு பகுதியை அழித்தாய். வரிகளை அடித்ததைச் சொல்கிறேன். சில வரிகளைச் சேர்த்து அவன் மீது பாரத்தைக் கூட்டினாய். சில வரிகளை மாற்றியமைத்தாய். ஊர் விட்டு ஊர் மாற்றிப் பார்த்தாய். கடைசியில் தேற மாட்டான் எனத் தீர்மானித்து ஒரேயடியாகக் கொன்றாய். அடுத்த கதையும் உன்னிடம் படாத பாடுபட்டது... கூட்டினாய். கழித்தாய். சித்திரவதை செய்தாய். ‘ “ கதை அரங்கேற வேண்டுமென்றால் அதைச் செய்தேயாக வேண்டும் அம்மா” “அது தானய்யா என் தொழில். இரண்டு கதைகளை வைத்துக் கொண்டு இந்தக் கூத்தடிக்கிறாயே. என் நிலையை யோசித்தாயா? நாலாயிரம் கோடிக் கதைகளை அரங்கேற்றியாக வேண்டும்.
கதையில் ஒரு பக்கமே சரியில்லை என நீக்கினாய். அது போல யாருக்காவது கணவன், மனைவி, நண்பன், தோழி. சரியாக இல்லாமல் இருந்தால் அவர்களை அந்த மனிதரின் வாழ்வில் இருந்தே நீக்குவேன். என் பிள்ளைகளுக்கு ஒரு ஊரில் வளர வழியில்லை என்றால் வேறு ஊருக்கோ, நாட்டுக்கோ மாற்றுவேன். அவர்கள் தொழிலில் முன்னேறுவது சிரமம் என்றால் வேலையை இழக்கச் செய்து வேறு வேலை தேடச் செய்வேன். கதை நன்றாக இருந்தும் நடை சரியில்லை என்றால் நீ அந்தப் பகுதியை திருப்பி எழுதிக் கொடுத்தாயல்லவா... அதே போல சிலர் அடிப்படையில் நல்லவராக இருந்தாலும் சில கெட்ட பழக்கமும் இருக்கும் அவர்களுக்கு நோய், துன்பங்களை கொடுத்து திருந்தச் செய்து வாழ்வில் மிளிரச் செய்வேன்.இதில் இன்னொன்றும் இருக்கிறது. என் சாம்ராஜ்ஜியத்தில் முடிவு என்பதே இல்லை. கதையை கிழித்தது போல் நான் செய்ய முடியாது. வாழ்வு மோசமாக இருந்தால் மரணம் கொடுத்து அடுத்த பிறவியில் இன்னும் செம்மையாக்க முயற்சிப்பேன். இந்த நாலாயிரம் கோடிக் கதைகளும் அரங்கேறும் வரை ஓய மாட்டேன்” எனக்கு அழுகை வந்தது. இந்த கருணைக்கடலையா கல்நெஞ்சுக்காரி என திட்டினேன்? “சொல்லப்பா இந்தக் கல்நெஞ்சுக்காரியிடம் உனக்கு என்ன வேண்டும்?” “நாங்கள் தான் கல்நெஞ்சுக்காரர்கள் தாயே. சிற்பி உளியால் அடிக்கிறானே என முட்டாள் தனமாகக் கதறும் கற்கள் நாங்கள். எங்களுக்குத் துன்பம் என்றால் எங்களை நீங்கள் மாற்றி எழுதிக் கடைத்தேற்றுகிறீர்கள் என்று கூடப் புரியாத மடையர்கள் நாங்கள். இந்த பாவிக்கு தண்டனை கொடுங்கள் என்று தான் இன்று கேட்கப் போகிறேன்.”
“என் அருகில் வா” என்று சொல்லி தலையில் கை வைத்து ஆசியளித்தாள். உடம்பெங்கும் சிலிர்த்தது. “இதுவா தண்டனை... ஆசியல்லவா வழங்கினீர்கள்”“தாய் அல்லவா? இதுவே என்னால் முடிந்த அதிகபட்ச தண்டனை. நன்றாக வாழ்.” அவள் காலடியில் விழுந்து விட்டு நிமிர்ந்தேன். அவள் அங்கில்லை.
|
|
|
|
|