Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாயா தெய்வமா?
 
பக்தி கதைகள்
தாயா தெய்வமா?

அன்று வெள்ளிக்கிழமை. மீனாட்சியம்மன் கோயிலில் கூட்டம் அதிகம் இருக்கும். எனக்கு அன்று பச்சைப்புடவைக்காரியைப் பார்த்தேயாக வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. செருப்பு போடும் இடத்தில் என் ஷூக்களைக் கழற்றச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். “சும்மா உள்ள வந்து உக்காந்து கழட்டுங்க சார்...” என்றபடி நாற்காலி கொடுத்தாள் ஒரு பணிப்பெண். சிறிய அறை. அந்தப் பெண் மட்டும் அங்கிருந்தாள். சற்று தயங்கினேன்.  “அம்மா இருக்கற இடத்துல பிள்ளைக்கு என்ன தயக்கம்? உள்ள வா. பேச வேண்டியது நிறைய இருக்கு” “தாயே இது என்ன கோலம்? தங்களின் கால்களைத் தொட தேவர்களும் முனிவர்களும் தவித்துக்கொண்டிருக்க, நீங்கள் என்னடாவென்றால் எங்கள் கால்பட்ட காலணிகளைத் தொட்டு... அம்மம்மா...என்ன கொடுமை” “பிள்ளையின் காலை அம்மா தொட்டால் தப்பா?” அவளின் திருவடிகளில் விழுந்து வணங்கினேன்.  “இப்படி வசதியாக அமர்ந்து கொள். உன் மனதைக் குடையும் சந்தேகத்தைக் கேள்” “அம்மா... உங்களை நினைத்த மாத்திரத்தில் பார்க்கும் பாக்கியத்தை தரக் கூடாதா? கோயிலில் சிலையாக இல்லை. மீனாட்சியாக, காமாட்சியாக, விசாலாட்சியாக, பச்சைப்புடவைக் காரியாக, சர்வாலங்கார பூஷிதையாகப் பார்க்க வேண்டும். எங்களுக்கு அடிக்கடி காட்சி தருவதால் குறைந்தா போய் விடுவீர்கள்?”

“அதை விடு. இந்த உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் கேட்கும் செல்வத்தை கொடுத்தால் குறைந்து போய்விடுவேனா  என்ன?” “நிச்சயமாக இல்லை தாயே! நீங்கள் கரை காணாத கடல். அளவற்ற செல்வத்துக்குச் சொந்தக்காரி. உலகில் வாழும் அனைவரையும் பணக்காரனாக ஆக்கினாலும் உங்களின் செல்வத்தில் ஊசிமுனையளவு கூடக் குறையாது.” “பின் ஏன் செல்வத்தைத் தர மறுக்கிறேன்?” “கர்மக் கணக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அது போக அளவற்ற செல்வம் ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அல்லவா?” “அதே போல் நான் அடிக்கடி மீனாட்சியாகக் காட்சி தந்தாலும் ஆன்மிக வளர்ச்சி தடைபடும். எல்லோரும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் நான் எப்போது காட்சி தருவேன் என காத்திருக்கிறார்கள். இது வளர்ச்சிக்கு நல்லதில்லையே!” இவளோடு வார்த்தையாடி ஜெயிக்க முடியுமா? இந்த உலகிலுள்ள அனைத்து மொழிகளின் அனைத்து வார்த்தைகளும் இவளுடைய கொலுசு சத்தத்திலிருந்து தானே பிறந்தன? “மனிதர்களாகிய உங்களிடம் இன்னொரு குறை இருக்கிறது. நான் கோயிலில் எப்படி இருக்கிறேனோ அப்படியே காட்சி தந்தால் தான் என்னை நம்புகிறீர்கள். உங்களைப் பொறுத்தமட்டில் கடவுள் என்றால் கைநிறைய ஆயுதங்களுடன்  சிங்கத்தின் மீதேறி இடி முழக்க சத்தத்தோடு வரவேண்டும் அப்போது தான் கடவுள் என்று  ஒத்துக்கொள்வீர்கள்.

உனக்கு நான் யார் என தெரியுமல்லவா? வெளியில் போய் இதோ இந்த அறைக்குள் ’பச்சைப்புடவைக்காரி’ இருக்கிறாள் என்று சொல். எத்தனை பேர் வருவார்கள்?” “நிறையப் பேர் வருவார்கள் தாயே!” “என்ன சொல்கிறாய்?” “என்னைக் குண்டுக்கட்டாகக் துாக்கிக் கொண்டு போய் மனநல மருத்துவமனையில் சேர்க்க ஒரு கூட்டமே திரண்டுவிடும். நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்”  “பிரச்னையே அது தான். நான் தொடர்ந்து காட்சி தந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருக்கும் பார்க்கும் திறன் இல்லை. சில சமயங்களில்  உதவி நாடும் அபலையாக வந்திருக்கிறேன். யாருமே கண்டுகொள்ளவில்லை.  தாயைத் தேடும் கன்றுக்குட்டியாக வந்திருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்தினீர்கள். மீனாட்சி கோயிலில் பூக்காரியாக வந்திருக்கிறேன். ’வேண்டாம் போ’ என்று துரத்தினீர்கள்.” வேரற்ற மரம் போல அவளது கால்களில் விழுந்து கதறினேன். “வாழ்வில் நல்லது ஏதும் செய்யாத இந்த பாவிக்கு அன்னை யாகவே காட்சி தந்து நான் தான் பச்சைப்புடவைக்காரி என்று சொல்லியும் கொடுக்கிறீர்களே தாயே! இந்தக் கொத்தடிமைக்கு நீங்கள் கொடுத்தது மிகப் பெரிய வரம் தாயே!”

“அது இருக்கட்டும் மனிதர்களின் மனோபாவம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள இந்தக் காட்சியைப் பார்.” அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.  மாலை நேரம்.  பரபரப்பான ரயில் நிலையத்தின் வாசலில் கிழிந்த ஆடையுடன் ஒருவன் வயலின் இசைக்கிறான்.  ஒரு அட்டையில், ’நீங்கள் போடும் பிச்சையில் தான் சாப்பிடுகிறேன். என் இசையைக் கேட்டு ரசித்த பின் என்னைச் சாப்பிடச் செய்யுங்கள்.” என்று எழுதியிருந்தது. இசை என்னமோ அற்புதமாக தானிருந்தது. ஆனால் அங்குமிங்கும் பரபரப்பாக சென்ற மக்களுக்கு நின்று ரசிக்கப் பொறுமையில்லை. அந்த இசைக்கு விலையாக  சில்லரைக் காசு தரக் கூட மனமில்லை.
சிலர் வயலின் வாசித்த பிச்சைக்காரனைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் அவனைப் பாதையை விட்டுத் தள்ளிச் சென்று அமரும்படி கண்டித்தனர்.  இன்னும் சிலர் கையில் இருந்த சில்லரையை விட்டெறிந்தனர். அதில் ஒரு காசு அவன் கன்னத்தில் படவே, சுளீரென வலித்தது. அதையும் விட அவமானத்தால் அவனது மனம் அனுபவித்த வலி அதிகம்.  இந்த நாடகம்  அரைமணி நேரம் அரங்கேறியது. அதன்பின் பிச்சைக்காரன் எழுந்தான். சற்றுத் தள்ளி நின்ற ஒருவரைப் பார்த்து ஜாடை காட்டினான். அடுத்த நொடி அவனைச் சுற்றிப் பலர் கூடினர். பாதுகாப்பு அதிகாரிகள், ஊடகக்காரர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். மொத்தக் கூட்டமும் ஸ்தம்பித்தது.

அப்போது தொலைக்காட்சி நிருபர் ஒருவர் ஒலிப்பெருக்கியில் பேசினார்.“நண்பர்களே இத்தனை நேரம் பிச்சைக்காரன் வேஷத்தில் வயலின் வாசித்தது யார் தெரியுமா?  ஜோஷுவா பெல். உலகின்  சிறந்த இசைக்கலைஞர். இவர் வாசித்த வயலினின் விலை மதிப்பு மூன்றரை மில்லியன் டாலர். (24 கோடி ரூபாய்). இவர் வாசித்த இசை மிக நுட்பமாக உருவாக்கப்பட்ட இசை. இவருடைய கச்சேரி இன்னும் சில நிமிடத்தில் அருகிலுள்ள இசையரங்கில் நடக்கப் போகிறது. அதற்கு நுழைவுக் கட்டணம் 100 டாலர்கள் (7000 ரூபாய்)  இனி நீங்கள் லட்சம் டாலர் கொடுத்தாலும் கச்சேரிக்குச் செல்ல முடியாது. ஏனெனில் டிக்கட்டு எல்லாம் விற்று விட்டன. இப்படிப்பட்ட கலைஞர் தன் மேலான இசையை இலவசமாக வழங்கியும் கூட இவரது தோற்றம் கண்டு குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள். இவர் முகத்தின் மீது காசுகளை விட்டெறிந்து அவமானப்படுத்தினீர்கள்.

எத்தனையோ கோடிகளுக்குச் சொந்தக்காரரான இவர் மீது நீங்கள் சில்லரை நாணயங்களை விட்டெறிந்து உங்கள் சின்ன புத்தியைக் காட்டினீர்கள்.  உங்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.”இதுதானப்பா என் நிலைமையும். என்னைப் பார்க்க கோயிலில் கால்கடுக்க நிற்கிறார்கள். ஆனால் நானோ தெருவில் உட்கார்ந்து எல்லோரும் கேட்கும்படியாக அன்பென்னும் தெய்வீக இசையை இசைக்கிறேன். ஆனால் கேட்கத்தான் ஆள் இல்லை. என் மேல் காசை விட்டெறிந்து அவமானப்படுத்துகிறார்கள். உனக்கு ஒன்று என்றால் உடனே என்னை அழைக்கிறாய்;  அழுகிறாய். ஆனால் நான் யாரை அழைப்பது? யாரிடம் அழுவது?”
அன்னையே அப்படி சொல்லும் போது எனக்கு இன்னும் அதிகமாக அழுகை வந்தது. பேச்சே வரவில்லை. “நான் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது.”
கண்ணீரைத் துடைத்தபடி, “தாயே...எனக்கு ஒரு வரம் வேண்டும்”

“கேள்.” “நீங்கள் மனித வடிவில் வரும் போது உங்களைக் காணும் வல்லமை வேண்டும். எந்த வடிவில் வந்தாலும் உங்களை வணங்கும் பேறு வேண்டும்.” “எல்லா உயிர்களிலும் இருப்பது நான் தான் என்பதை உணர்ந்தால் போதுமே. தனியாக என்னைத் தேட வேண்டாமே! இந்த உண்மையை உணர்ந்தால் வாழ்க்கை செம்மைப்படும். மனித உறவுகள் மேம்படும்.  மேலான ஞானம் கிடைக்கும். நீ கேட்காத இன்னொரு வரத்தையும் தருகிறேன். அடுத்தவர் துன்பம் கண்டு கண்ணீர் சிந்தினால் அந்தக் கண்ணீராக நான் உன் கன்னங்களில் ஓடி வருவேன். அடுத்தவர் கண்ணீரைத் துடைக்க உன் கை நீளும்போது உன் விரல்களில் நான் குடியிருப்பேன்.  அடுத்தவர் நன்றாக வாழவேண்டும் என்று  வாழ்த்தும்போது உன்னுள் இருந்து நானும் வாழ்த்துவேன்.”

“இந்த வரம் எனக்கு...” “உனக்கு மட்டும் இல்லை. இதை உணர்ந்த அனைவருக்கும் இந்த வரத்தைக் கொடுத்திருக்கிறேன்.” “எங்கள் அறியாமையையும் கீழ்க்குணத்தையும் பொறுத்துக் கொண்டு எங்களுக்குத் தகுதி பார்க்காமல் அருள் செய்கிறீர்களே அது எப்படியம்மா முடிகிறது?” “இது எந்தத் தாயும்  குழந்தைகளுக்கு இயல்பாகச் செய்வதுதான். தாயன்பைப் புரிந்து கொள்ளாதது உன் தவறு.” யாரிவள்? தாயின் வடிவில் வந்த தெய்வமா? தெய்வத்தின் வடிவில் வந்த தாயா? அவளை இன்னொரு முறை பார்க்க முயன்றேன். அவள் அங்கு இல்லை. அவள் இருந்த இடத்தில் விழுந்து வணங்கி கோயிலுக்குள் நுழைந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar