|
பிரபலமான கோயில் ஒன்றில் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமானவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், உபன்யாசகர். “இங்கே நீங்கள் எல்லோரும் வந்தபோது துண்டுச் சீட்டுகளில் உங்கள் பெயர்களை எழுதி வாங்கினார்கள் அல்லவா? அந்தச் சீட்டுகளை, இதோ இங்கே பக்கத்தில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஐந்து நிமிடம் அவகாசம் உங்களுக்குத் தரப்படும். அதற்குள் அவரவர் பெயர் எழுதிய சீட்டை எடுத்து வரவேண்டும். யாரெல்லாம் சரியாக எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு விசேஷமாக பரிசு தரப்படும்! முக்கியமான விஷயம், ஒருவர் ஒருமுறைக்கு மேல் சீட்டை எடுக்கக் கூடாது!’
அவர் சொன்ன மறு விநாடி எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். கையை அந்தப் பெட்டிக்குள் விட்டுத் தேடினார்கள். கையில் கிடைத்த சீட்டை எடுத்தார்கள், .பார்த்தார்கள். உதட்டைப் பிதுக்கினார்கள். இரண்டு, மூன்று பேரைத்தவிர யாருக்குமே அவர்கள் பெயர் எழுதிய சீட்டு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் வந்தவர்களைப் பார்த்தார், உபன்யாசகர். இப்போது உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தருகிறேன். நான் சொல்வதுபோல் செய்தால் எல்லோருக்குமே பரிசு கிடைக்கும்!’ சொன்னவர் சில நிமிடங்கள் நிறுத்த, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். முதலில் ஒருவரை அழைத்தவர், ‘இந்தப் பெட்டிக்குள் இருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் இருக்கும் பெயரைப் படியுங்கள்!” என்றார். அவரும் அப்படியே செய்ய, அந்த சீட்டில் எழுதியிருந்த பெயருக்கு உரியவரிடம் அதைக் கொடுக்கச் சொன்னார்.. அடுத்தடுத்து எல்லோரும் அப்படியே செய்ய, ஐந்தே நிமிடத்தில் அவரவர் பெயர் எழுதிய சீட்டு அவரவர் கையில் இருந்தது.
ஆளுக்கு ஒரு பக்திப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு உபன்யாசகர் சொன்னார். “கடவுளும் இப்படித்தான் செய்கிறார். எல்லாவற்றையும் எல்லோரிடமும் தருவதில்லை. ஒருவரிடம் கல்வி, ஒருவரிடம் செல்வம், ஒருவரிடம் வலிமை, ஒருவரிடம் உழைப்பு, ஒருவரிடம் வாக்கு வன்மை இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைத் தருகிறார். எனவே நம்முடையது நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்காமல், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்!” சொல்லி முடித்தார் உபன்யாசகர். இறைவன் ஒவ்வொருவரிடம் ஒன்றைத் தருவதன் நோக்கம் பகிர்ந்து உண்ணும் பழக்கமும், அன்பு, பாசமும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற உணர்வும் வரவேண்டும் என்பதுதான். அதை எல்லோரும் புரிந்து கொள்ளத்தான் இந்தப் போட்டியையே உபன்யாசகர் நடத்தினார். |
|
|
|