|
மனிதன் ஒருவன், தனது வாழ்வில் நல்லது எதுவும் நடக்கவில்லையே என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். எனினும் கடைசியாக ஒருமுறை கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி இறையை வணங்கி, “கடவுளே! நான் ஏன் வாழவேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு நல்ல உதாரணம் கூறுங்கள்” என்று வேண்டினான். மறுகணம் அவன் முன் தோன்றிய கடவுள், அருகிலிருந்த பெரணிச் செடியையும் மூங்கில்களையும் அவனுக்குச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “நான் இவற்றின் விதைகளை இட்டபோது, இரண்டுக்கும் தேவையான வெளிச்சத்தையும் தண்ணீரையும் சரிசமமாகவே கொடுத்தேன். பெரணிச்செடி விரைவில் முளைத்துப் பச்சைப்பசேல் எனக் காட்சி அளித்தது. ஆனால் மூங்கில் விதையை இட்ட இடத்தில் எதுவும் முளைக்கவில்லை. அதற்காக நான் மனம் தளரவில்லை.
அடுத்த இரண்டு வருடங்களிலும்கூட, பெரணிச்செடி வளர்ந்தது; மூங்கில் முளைக்கவில்லை. நான்காம் வருடம் ஒரு மூங்கிலில் சின்ன முளைத் தோன்றியது. அடுத்த ஆறே மாதங்களில் மூங்கில் 100 அடியாக வளர்ந்தோங்கி நின்றது. ஆம்! தனது வேரை உறுதியாகவும் பலமாகவும் பூமியில் ஊன்றி நிலைத்து நிற்கவும். பின்னர் ஓங்கி வளரவும் மூங்கிலுக்கு 4 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே, என்னால் உருவாக்கப்பட்ட எவற்றுக்கும் தாங்க முடியாத சவால்களை நான் கொடுப்பதில்லை. நீயும் இவ்வளவு வருடங்கள் கஷ்டப் பட்டதெல்லாம் உன் வேரைப் பலமாக ஊன்றிக் கொள்ளத்தான் என்பதைப் புரிந்துகொள்” என்று அறிவுறுத்தினார். பக்தன் புரிந்து கொண்டான். |
|
|
|