|
நதிக்கரையில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். அவரைத் தரிசித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற வரத்தைப் பெற மன்னன் விரும்பினான். அதற்காக ஆற்றைக் கடந்து சென்று தபஸ்வியை வணங்கினான். “என்ன வேண்டும் மன்னா?” - முனிவர் “எல்லாவற்றிலும், முக்கியமாக எதிரிகளை வென்று வெற்றி பெற வரம் வேண்டும்.” - மன்னர். “மார்பில் என்ன அணிந்திருக்கிறாய்?” “கவசம்,” “அதை எதற்காக அணிந்திருக்கிறாய்?” “எதிரிகளின் அம்பு நெஞ்சைத் துளைக்காமல் இருக்க ” என்றான் மன்னன். முனிவர் கலகலவென்று நகைத்தார். “உனது எதிரிகள் யார்?” “அண்டை நாட்டு அரசர்கள்.” மீண்டும் தபஸ்வி சிரித்தார். “முனிபுங்கவரே, ஏன் சிரிக்கிறீர்கள்?” “உனது அறியாமையை எண்ணிச் சிரித்தேன்.” மன்னன் புரியாமல் தபஸ்வியைப் பார்த்தான்
“சுவாமி புரியவில்லை.” “புரிந்து விட்டால் நீ ஞானியாகி விடுவாய். ஞானத்தை அடைவது அவ்வளவு சுலபமல்ல. அழியக்கூடிய உடம்பை வைத்துக் கொண்டு அழியக்கூடிய நாட்டை ஆள ஆசைப்பட்டு வெற்றிபெற விழைகிறாய். நீ அடையக்கூடிய சாம் ராஜ்யம் ஒன்று உண்டு. அது தெரியுமா உனக்கு?” மன்னன் அறியாமையால் பேராசையோடு, “சுவாமி நான் அதை அடைய முடியுமா?” என்றான். மீண்டும் தபஸ்வி சிரித்தார். “அதை அடைவது அவ்வளவு சுலபமல்ல.” “என்னிடம் பெரும் படை இருக்கிறது. நான் பெரிய வீரன் சுவாமி.” “அந்தச் சாம்ராஜ்யத்தின் பெயர் என்ன தெரியுமா? மோட்ச ராம்ராஜ்யம். அதை அடைய வில், அம்பு, வாள் எதுவும் தேவை இல்லை. நீ அணிந்திருக்கும் கவசமும் அதற்குப் பயன்படாது.”
‘தாண்டி விடலாம்...கடலைத் தாண்டி விடலாம்....சாரமற்ற சம்சாரக் கடலைத் தாண்ட வேண்டியே ஆசை என்னும் பாரக் கப்பலில் ஏறக் கூடாது’ என்று பாடினார் தபஸ்வி. “சுவாமி .....” என்றான் மன்னன். என்னிடம் வரம் பெற ஆற்றைக் கடந்து வந்தாயே? அழியா பெரும் வரம், பிறவி வேண்டாம் என்பதல்லவா? பிறவிக் கடலைக் கடக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றி இருக்க வேண்டுமே? எதிரிகளின் அம்பு துளைக்காமல் இருக்க கவசம் அணிந்த உனக்கு, உன் நெஞ்சைத் துளைத்து உள்ளே அமர்ந்திருக்கும் காம, குரோத, லோப, மதமாச்சர்யம் என்ற எதிரிகளை ஏன் வெல்லத் தோன்றவில்லை?”
மன்னன் திகைத்தான். “சுவாமி, அனைத்தையும் துறந்து இங்கேயே அமர்ந்து விடட்டுமா?” “தேவையில்லை. பணம், பதவி, அழகு, புகழ், வெற்றி இதெல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்ட தண்டனைகள். மண்ணுயிர்களைக் காத்து இந்தத் தண்டனைகளிலிருந்து விடுபட்டு அரசாள்வாய்” என்றார் தபஸ்வி. புத்தி தெளிந்த மன்னன், நாடு பிடிக்கும் ஆசையை ஒழித்து ஞானமுடன் அரசாண்டான். |
|
|
|