|
துறவியான வேலனிடம் ஆசி பெற வந்தவர்கள் பொன்னையும் பொருளையும் கொட்டினர். இதையறிந்த வேலனின் உறவினர்கள், “இளைஞனாக இருந்த போது ’உதவாக்கரை’ என ஒதுக்கினோம். ஆனால் துறவியானதும் பொன்னும், பொருளும் குவிகிறதே” என்று நெருங்கி வந்தனர். “நியாயம், தர்மம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதா” எனக் கேட்டார் வேலன். அதற்கு, ’நியாயமாவது... தர்மமாவது? எப்படியாவது வாழ்வில் பணம் சேர்க்க வேண்டும். அது தான் எங்களின் விருப்பம்’ என்றனர். அவர்களிடம் வேலன்,“ வீட்டு நாய் ஒன்று இறைச்சித் துண்டை கவ்விச் சென்றது. அதைக் கண்ட தெருநாய்கள் ’லொள்...லொள்...’ என்று கத்தியபடி சூழ்ந்தன. வீட்டுநாய் எங்கு ஓடினாலும் அவை விடுவதாக இல்லை. ஓடி, ஓடி களைத்த வீட்டுநாயின் வாயிலிருந்த இறைச்சி ஓடும் வேகத்தில் கீழே விழுந்தது. உடனே தெருநாய்கள் இறைச்சியை நோக்கி பாய்ந்தன. அப்போது வீட்டுநாய், ’அப்பாடா...இறைச்சியால் தானே பிரச்னை. இப்போது அது என்னிடம் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன்’ என்று சொல்லி மகிழ்ந்தது” என்றார். இதைக் கேட்ட உறவினர்களுக்கு உண்மை புரிந்தது. அதன் பின் வேலன் தன்னிடமுள்ள பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வழங்கி விட்டு நிம்மதியுடன் வேறொரு ஊருக்கு புறப்பட்டார்.
|
|
|
|