|
சீடன் கந்தனுக்கு வித்தை அனைத்தையும் கற்றுத் தந்தார் குருநாதர். ஒருநாள் கந்தன், “குருநாதா...தத்துவங்களைப் போதித்தீர்கள். ஆனால் கண்ணால் காண முடியாத கடவுள் எப்படி நமக்கு அருள்புரிவார்?” எனக் கேட்டான். “உன் சந்தேகத்திற்கு விரைவில் பதில் கிடைக்கும். இப்போது பவானிபுரத்திலுள்ள என் நண்பரை சந்தித்து விட்டு வா” என்றார். “நல்லது குருவே” என கிளம்பினான் கந்தன். வழியிலுள்ள காட்டுப்பாதையில் முதியவர் ஒருவர் பச்சிலை பறித்துக் கொண்டிருந்தார். அவரிடம் விபரம் கேட்கவே, “தம்பி... விஷம் முறிக்கும் மூலிகை இது. கையில் இருந்தால் காட்டு வழியில் செல்லும் உனக்கும் பயன்படும்” என பச்சிலைகளை கொடுத்தார். இரவு சத்திரம் ஒன்றில் தூங்கினான். நள்ளிரவில் அலறல் சத்தம் கேட்டு எழுந்த கந்தனுக்கு, அருகில் தூங்கியவரை பாம்பு தீண்டியது தெரிய வந்தது. தன்னிடம் இருந்த பச்சிலையில் சாறு எடுத்து கொடுத்தான். பாதிக்கப்பட்டவர் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தார். பின் குருநாதரின் நண்பரை சந்தித்து விட்டுக் கிளம்பினான். நடந்ததை குருநாதரிடம் தெரிவித்தான். “ கந்தா...அன்று கடவுளைக் காண முடியவில்லை என்று சொன்னாயே! பாம்பு தீண்டியவரைப் பொறுத்தவரையில் ஆபத்தில் உதவிய நீயும், அதற்கு உதவிய முதியவரும் கண் கண்ட தெய்வங்கள் என்றால் மிகையில்லை” என்றார். |
|
|
|