Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என்ன அவசரமோ?
 
பக்தி கதைகள்
என்ன அவசரமோ?

மனிதர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என இருவகை குணம் உண்டு. சிலர் இனிப்பை, சிலர் காரத்தை விரும்புவர்.  நாக்கைத் தாண்டி உணவு தொண்டைக்குள் இறங்கினால் ருசி தெரியாது. காபிக்கு சர்க்கரை வேண்டுமானால் சேர்க்கலாம். வேண்டாம் என்றால் ஒதுக்கலாம்.  ஆனால் உடம்போடு ஒட்டிய குணங்களில் தேவையானதை சேர்ப்பதும் வேண்டாததை தவிர்ப்பதும் அவசியம். சிலர் எதிலும் அவசரமாக முடிவு எடுப்பார்கள். வில்லங்கமான வீடாக இருக்கும். ஆனால் அதன் அழகு கண்களைக் கட்டி விடும். சற்றும் யோசிக்காமல் விலைக்கு வாங்கி விடுவர். குடியேறிய பிறகு தான் வில்லங்கமும், கஷ்டமும் தெரிய வரும். அந்நிலையில் வீட்டை விற்று விட வேண்டியது தான். ஆனால் பணம் தான் நஷ்டமாகும். வேறென்ன செய்வது?

மதுரையை ஆண்ட நெடுஞ்செழியன் யோசிக்காமல் அவசர முடிவு எடுத்தான்.  கோவலன் கொண்டு வந்த சிலம்பைக் கண்டதும், ’இது பாண்டிய ராணியின் காணாமல் போன சிலம்பு’  என குற்றம் சாட்டி கோவலனைக் கொன்றான்.  செய்தது தவறு என்ற உண்மை தெரிந்ததும், கோவலனின் உயிரை மீட்க முடிந்ததா? அவசர முடிவால் விளையும் விபரீதத்தை மனிதன் சற்று சிந்திக்க வேண்டும்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அவசரக்காரனுக்கும் அப்படித்தான்! வேகம் விவேகத்தைக் குறைத்து விடும். அதிக வேகத்தில் போகும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகும்.

மனிதன் விலக்க வேண்டிய குணங்கள் கோபம், புறங்கூறாமை, பொய் பேசுவது, திருடுவது, குற்றத்தை மறைத்து பிறர் மீது பழிபோடுவது, அதர்மவழியில் சம்பாதிப்பது என பல உண்டு.  அதில் அவசர புத்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பக்தன் ஒருவன் தன் விருப்பம் நிறைவேற கடவுளுக்கு 1008  குடம் தண்ணீர் அபிஷேகம் செய்ய நினைத்தான். 1007 குடம் தண்ணீர் ஊற்றிய பின், முடிவாக ஒரு குடம் தண்ணீர் எடுக்கப் போனான். அவனது அவசர புத்தி வேலை செய்தது. “ஆயிரத்தி ஏழுகுடம் தண்ணீர்  ஊற்றியும் வேண்டுதல் நிறைவேறவில்லை. எதற்கு இந்த ஆயிரத்து எட்டாவது குடத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்?”  என கோபித்து சுவாமியின் மீது போட்டு உடைத்தான். செய்த புண்ணியத்திற்கான பலன் போனதோடு பாவமும் உண்டானது. கோபத்தில் பார்வை மறைந்து விடும் என்பது இது தான்.  

அவன் ஒருகணம் சிந்தித்தால் உண்மை புரியும். தன்னால் ஒரு குடும்பத்தை சமாளிக்க முடியவில்லையே... கடவுளின் பார்வையில் இந்த அண்ட சராசரமே இயங்குகிறதே.  அவர் எந்த பொறுப்பையும் ஒருபோதும் மறப்பதும் கிடையாது.   

தினமும் ஒரு பொன்முட்டை இடும் கோழி ஒருவனிடம் இருந்தது. அதை விற்று பணக்காரனாக அவன் வாழ்ந்தான். பணம் சேரச் சேர ஆசை  பேராசையாக மாறியது. புத்தி தடுமாறியவன் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தான். கோழியைக் கொன்றால் நிறைய தங்க முட்டைகள் கிடைக்கும் என மனதில் கணக்குப் போட்டான்.  ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்று போடும் கோழியின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்குமா? என யோசிக்க வேண்டாமா? கோழியைக் கொன்றான். தினமும் கிடைக்கும் ஒரு முட்டையும் கிடைக்காமல் போனது. சேறு நிறைந்த பாதையை நல்ல பாதை என்று காலை வைத்து விட்டால் அது புதைகுழியாகவும் இருக்கலாம் கவனம்.

முடிவு எடுக்கும் முன்  நிதானம், முன்யோசனை, சமயோசித புத்தியுடன் அதை பரிசீலனை செய்வது அவசியம். ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருந்தது. வியாபாரிகள் இருவர் தங்களின் குதிரையுடன் கரையில் நின்றிருந்தனர். ஒரு வியாபாரியின் குதிரை மீது உப்பு மூடை இருந்தது. இன்னொரு வியாபாரியின் குதிரை மீது தேங்காய் மூடை இருந்தது. அக்கரையில் உள்ள ஊருக்குப் போக நினைத்தனர் இருவரும். தேங்காய் வியாபாரி “நண்பனே! வெள்ளம் ஏறிக் கொண்டே போகிறது நீ அங்கு வந்தால் உப்பு மூடை கரைந்து விடும். வெள்ளம் வடியும் வரை பொறுத்திரு” என்றான். சிலருக்கு நல்லது சொன்னாலும் எடுபடாது. ஏதோ திட்டம் போட்டு தன்னை நிறுத்துவதாக தோன்றும். உப்பு வியாபாரிக்கும் அப்படித்தான் தோன்றியது. “நீ மட்டும் வியாபாரத்திற்குப் போகலாம் என நினைத்தாயா? உன் குதிரையோடு நீ போனால், என் குதிரையோடு நான் போகிறேன்.” என்றான் கோபமாக. ஆற்றுக்குள் இறங்கிய உப்பு வியாபாரியின் பின்னால் தேங்காய் வியாபாரியும் இறங்கினான். நடுஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமிருந்தது.  உப்பு வியாபாரியின் குதிரை சிரமப்படாமல் கடப்பது தெரிந்தது.  அப்போது அவன், “அடேய்... நீயல்லவா சிரமப்பட்டாய். நான் சுலபமாக கடந்து விட்டேனே” என்று எகத்தாளம் பேசினான்.

இருவரும் தங்களின் மூடைகளை இறக்க முயன்றனர். உப்பு வியாபாரி திடுக்கிட்டான். தண்ணீர் புகுந்ததால் உப்பு பாதி கரைந்தும், மீதி நனைந்தும் இருந்தது. தேங்காய் வியாபாரி எடுத்துச் சொல்லியும் கூட அவசரபுத்தியால் நஷ்டப்பட்டதை எண்ணி வருந்தினான்.

செயலில் மட்டுமில்லாமல் சொல்லிலும் அவசரம் கூடாது. நமக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா... நாக்கைப் புரட்டும் போது உண்டாகும் சொற்களை பற்கள் காவல் வீரர்களாக தடுத்து நிறுத்த வேண்டும். அதையும் மீறினால் உதடு இறுகப் பூட்டு போட வேண்டும். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் தான் எஜமானன். நம் மூளை பிறப்பித்த உத்தரவுபடியே சொற்கள் வர வேண்டும். அம்பிகையின் அருள்பெற்றவர் மகாகவி காளிதாசர். ஒருசமயம் புலவர் தண்டிக்கும், காளிதாசருக்கும் போட்டி உண்டானது. யார் சிறந்தவர் என தீர்ப்பளிக்க கல்வி தெய்வமான சரஸ்வதி முன்வந்தாள். இருவரும் கவிதை மழை பொழிந்தனர். முடிவாக  ’தண்டியே சிறந்த கவி’ என சரஸ்வதி தீர்ப்பு அளித்தாள். இதைக் கேட்ட காளிதாசர் கோபத்துடன் “என் நாக்கில் நீ இருப்பதன் பலன் இதுதானா” என்று  தொடங்கி வசைமாரி பொழிந்தார். அங்கிருந்த புலவர்கள் தங்களின் காதுகளைப் பொத்திக் கொண்டனர். ஆனால், சரஸ்வதி மட்டும் கலகல எனச் சிரித்தாள். “என்னை சிறந்த கவிஞன் இல்லை என சொல்லியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியா... உன்னைப் பாடிய நான் ஒரு முட்டாள் தான்.” என்றார். “நீ முட்டாள் தான் காளிதாசா... யாராவது தன்னைத் தானே புகழ முடியுமா?” என்றாள். “ என்ன சொல்கிறாய் தாயே? புரியவில்லையே!” என்றார் காளிதாசர். “உனக்கு பாடும் திறமை தந்து கவிஞனாக்கியவள் நான். உன்னுள் நானே குடியிருக்கிறேன் என்ற உண்மையை நீ உணரவில்லையே!  நீயே நான்! நானே நீ”  என்றாள் சரஸ்வதி.காளிதாசருக்கு அழுகை பீறிட்டது. ஆத்திரம், அவசரபுத்தி  மனதில் எழுந்தால் அறிவு தன்னை திரையால் மறைத்துக் கொள்ளும் என்பதை எதையும் நிதானமாக சிந்திக்க தோன்றும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar